விளாம்பழ வாசம் வீசும் நிறைமாதத்துக் கர்ப்பிணி...!

தலைவரே! உடன்போக்குக்குத் தலைவி ஒத்துக் கொண்டாள்; ஆனால் அவள் உள்ளம் உடன்படவில்லை. உங்கள்பாலுள்ள காதலை அவளால் உதறித் தள்ளிவிட இயலவில்லை; பெற்றவரை, உற்றவரைப் பிரிந்து வந்துவிடவும் முடியவில்லை.  

வைகறை வந்தது. விளாம்பழவாசம் வீசும் நிறைமாதத்துக் கர்ப்பிணி வயிறு போன்ற பெரிய மண்பானை. அதில் ஏறி இறங்கும் கயிற்றால் தேய்ந்துபோன மத்தால் வெண்ணெய் பெறக் கடையும் தயிரோசை கேட்கும் நேரம்.   உங்கள் நினைவு தலைவியை உறங்கவிடவில்லை. பொய் கரைந்து போவதுபோல் போய்க்கொண்டிருந்தது இருள். பெரிய துணியால் பிறர் அறியாதவாறு இருளிலும் ஒளிவீசும் எழிலார் மேனியை மறைத்துக் கொண்டாள்.  

காவல் செய்யும் தாயார் கண்டுகொள்ள நேருமன்றோ? பருக்கைக் கற்கள் ஓசையிடும் காற்சிலம்பைப் பையக் கழற்றினாள். ஆயத்தோடு விளையாடிய அழகிய பந்தையும் எடுத்தாள். வண்ண வரிகளால் வனைந்து புனையப்பட்ட அந்தப் பந்தையும், காலிலிருந்து கழற்றப் பெற்ற சிலம்பையும் மறைத்து வைக்க மங்கை சென்றாள்.   கூடி விளையாடிய ஆயம் குறுக்கே வந்து நின்றது. காலையில் தன்னைக் காணவரும் தோழியர் கலங்கித் தவிப்பார்களே! கண்ணீர் விட்டுக் கலங்குவார்களே' என்னும் எண்ணம் எழுந்து வந்தது. கண்கள் இரண்டிலும் கால்வாய் எழுந்தன. அப்போதே உடன்போகும் எண்ணத்தை அவள் ஒதுக்கி விட்டாள். மனத்தில் துயரைச் சுமந்துகொண்டு தங்களுக்கு மகிழ்ச்சிதர இயலுமா? மகிழ்ச்சிபெற முடியுமா? தாய்-தந்தையின் உறவென்ன? தள்ளிவிடும் உறவா? தலைவரே! இனி, தாங்கள் தலைவியைப் பெற வேண்டுமென்றால் மணம் முடித்தலே மார்க்கமாகும்' இவ்வாறு தோழி கூறியதற்குத் தலைவன் புன்னகையாலே சம்மதம் தெரிவித்துப் போய்விட்டான்.  

 மண்ணால் செய்த தயிர்ப்பானை அக்காலத்தில் வழக்கத்திலிருந்தது. நாளும் பானையில் பால், தயிர், மோர், வெண்ணெய் ஆகியவற்றின் புழக்க மிகுதியினால் நெடிய நாற்றம் பானையில் உண்டாகும். அதனைப் போக்க பானையைத் தூய்மை செய்து வெயிலில் வைத்து பின்பு வாசமிகு விளாம்பழத்தைப் பானையுள் வைத்தால், 'கவுல்' என்னும் நாற்றம் நீங்கிவிடும்.  

பொதுவாக விளாந்தழையை நுகர்ந்தாலே வமனம்' என்னும் வாந்திவரும் நிலை நீங்கிவிடும். பானைக்கு உவமை சொல்லும் புலவர், நிறைமாத கர்ப்பிணி வயிற்றைக் கூறுகிறார். இந்த நற்றிணைப் பாடலை இயற்றிய புலவர் கயமனார். திணை: பாலைத்திணை; துறை: உடன்போக்குத் தவிர்த்தல். பிரியமானவன் உறவைவிட பெற்று வளர்த்தவர் உறவைப் பெரியதாக எண்ணிய பெண்குலத்துப் பொன்விளக்கான தலைவி பற்றிய தமிழ்பாடல் இது.

விளாம்பழம் கமழும் கமம்சூல்

குழிசிப் பாசம்தின்ற தேய்கால்

மத்தம்    நெய்தெரி இயக்கம்

வெளிமுதல் முழங்கும் வைகுபுலர்

விடியல் மெய்கரந்து தன்கால்

அரியமை சிலம்பு

கழீஇப் பன்மாண் வரிபுனை

பந்தொடு வைஇய செல்வோள்   

இவை காண்தோறும்

நோவர் மாதோ அளியரோ

அளியர் என் ஆயத்தோர்

என நும்மொடு வரவுதான்

 அயரவும் தன்வரைத்து

அன்றியும் கலுழ்ந்தன கண்ணே!

(நற்.12) -.

வெங்கடேச பாரதி


Add new comment

Or log in with...