தவறு செய்தோரை தண்டிப்பதில் சட்டமும் நீதியும் சரியாகச் செயற்படும்

தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபராஜபக்‌ஷவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் அனைத்தும் போலியானதென நிரூபிக்கப் பட்டுள்ளதாக,வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் காதர்மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர் எழுப்பிய  கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்  தெரிவித்ததாவது:

புதுவருடத்தில் சாந்தி, சமாதானம், சுபீட்சமுமாக வாழக் கூடிய நிலையை இறைவன் ஏற்படுத்தியுள்ளான். இந்த வருடத்தில் எமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆட்சியில் அனைவரும் சுபீட்சமாக வாழவும்  அவர்களது தேவைகள் நிறைவேறவும் வழிபிறக்கும்.கடந்த அரசாங்கத்தில் தவறு செய்தவர்களே தற்போது கைது செய்யப்படுகின்றனர். இதில் எவ்வித அரசில் பழிவாங்கல்களும் இல்லை.

இந்த அடிப்படையில் நீதித்துறையும், காவல் துறையும்  கடமைகளைச் சரியாகச் செய்கின்றன.

என் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட கிராம மக்கள் என்னுடன் நல்ல முறையில் பழகுபவர்கள். படித்தவர்கள்,  மார்க்க அறிஞர்கள் எனப் பலரும் அங்கு வாழ்கின்றனர். சிலரின் தூண்டுதலாலே என்னைத் தாக்க  முயற்சிக்கப்பட்டுள்ளது.அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு சிலரை சில அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றனர். இதுவே அம் மக்களுடைய கருத்து. ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்ற முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் அங்கு தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. பிரதி அமைச்சர் ஒருவர் தாக்கப்பட்டும் இருக்கிறார். தொடர்ச்சியாக இந்த சம்பவங்கள் நடந்துள்ளது. எதிர்காலத்தில் அவ்வாறு இல்லாமல் அவர்களை நாம் திருத்தி ஜனநாயக வழிக்கு  உட்படுத்தி அவர்களையும் திருத்த நினைக்கின்றேன். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். அந்தக்கிராமத்திற்கு அபகீர்த்தி  ஏற்படுத்தும் நோக்கில் சிலர் தொடர்ச்சியாக இச்செயலைச் செய்கின்றனர். அங்குள்ள இளைஞர்களை அடாவடித்தனம், அராஜகம் செய்ய அரசியல்வாதிகள் பயன்படுத்துவதாக தெரிகிறது. இந்த நிலை மாற்றமடைய வேண்டும்.

எங்களுடைய ஜனாதிபதி சம்மந்தமாக தேர்தல் காலங்களில் செய்யப்பட்ட பிரச்சாரங்களும், அவர் சம்மந்தமாக மக்களை திசை திருப்பவதற்காக சொல்லப்பட்ட  கருத்துக்களும் தற்போது பொய்யாகியுள்ளன. நல்லதொரு ஜனாதிபதி என மக்கள் மத்தியில் அவர் வரவேற்பை பெற்றுள்ளார். நாட்டின் அரசியலை வெறுப்புணர்வுடன் பார்த்த கடந்தகால நிலையை மக்கள் மத்தியில் இல்லாமலாக்கி ஒரு சுபீட்சமான காலத்தை ஜனாதிபதி உருவாக்குவார்.

தேசிய கீதம் முன்னர் இரண்டு மொழிகளிலும் பாடப்பட்டது. தேசிய கீதம் என்பது மக்களின் உணர்வையும், மக்களையும் ஒருமுகப்படுத்தும் விடயம். இதில் சர்ச்சையை ஏற்படுத்தாமல் அனைத்து தரப்பினரும் முடிவு எடுக்க வேண்டும். இரு மொழிகளிலும்  பாடுவது பாரிய பிரச்சினை அல்ல என்பதே தனது கருத்தாகுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா விசேட நிருபர்


Add new comment

Or log in with...