ஈராக்கில் அமெரிக்க தூதரகத்திற்குள் நுழைய ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி

வான் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு

அமெரிக்காவின் வான் தாக்குதலில் ஈரான் ஆதரவு துணைப்படையினர் கொல்லப்பட்டதற்கு எதிராக ஈராக் தலைநகர் பக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்தாதின் உயர் பாதுகாப்பு பசுமை வலயத்தில் உள்ள சோதனைச் சாவடி மீது தீவைத்து, அமெரிக்க கொடிகளுக்கு தீயிட்டுள்ளனர். “அமெரிக்கா ஒழிக” என்று கோசமெழுப்பிய அவர்கள் அமெரிக்கத் தூதரகத்தை மூடும்படியும் கோரியுள்ளனர்.

தூதரக மதில் சுவரில் இருக்கும் பாதுகாப்பு கெமராக்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்தெறிந்துள்ளனர்.

ஹஷேத் அல் ஷாபி போராட்டக் குழுவுக்கு ஆதரவான கொடிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர். இந்தத் துணைப் படையினர் பொதுவாக ஈராக்கிய பாதுகாப்பு படையினருக்கு கட்டுப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வட மேற்கு ஈராக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் கதேப் ஹஸ்புல்லா கடும்போக்கு போராட்டக் குழுவைச் சேர்ந்த குறைந்தது 25 போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர.்

அமெரிக்கப் படையினர் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ஈராக்கிய இராணுவத் தளம் ஒன்றின் மீது கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ரொக்கெட் குண்டு தாக்குதலுக்கு பதிலடியாகவே அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்காதபோதும் கதேப் ஹஸ்புல்லா மீது குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த வான் தாக்குதல் நாட்டின் இறைமையை மீறும் செயல் என்று ஈராக் பிரதமர் அதெல் அப்துல் மஹ்தி கண்டனம் வெளியிட்டிருந்ததோடு அமெரிக்காவுடனான உறவை மீளாய்வு செய்யவேண்டி இருக்கும் என்று எச்சரித்திருந்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்தை சூழ்ந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினர் தூதரக வளாகத்திற்குள் பின்வாங்கினர். தூதரக சுவரில் கதேப் ஹஸ்புல்லாவின் மஞ்சள் நிறக் கொடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் தொங்கவிடுதையும் பார்க்க முடிந்தது.


Add new comment

Or log in with...