பாதுகாப்பு படை பிரதானி ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றில் சரண் | தினகரன்

பாதுகாப்பு படை பிரதானி ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றில் சரண்

பாதுகாப்பு படை பிரதானி நீதிமன்றில் சரண்-Chief of Defence Staff Ravindra Wijegunaratne Summoned to Court

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (28) சரணடைந்தார்.

கடந்த 2008 - 2009  காலப்பகுதியில், 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பான சந்தேகநபருக்கு பாதுகாப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கம் அளிக்கும் பொருட்டு பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (28) முன்னிலையானார்.

நேற்றைய தினம் (27) இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு (CID) வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் அவர் அங்கு சமூகமளிக்காத நிலையில் இன்றைய தினம் நீதிமன்றில் சரணடைந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அவர் குறித்த தினத்தில், கடமையின் நிமித்தம் மெக்ஸிகோ நாட்டிற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும், அவரை கைது செய்வதற்கு உரிய சாட்சியங்கள் இருப்பதாக, குற்றவியல் விசாரணை திணைக்களம் (CID) இதன்போது நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

அதனடிப்படையில் கடந்த நவம்பர் 02 ஆம் திகதி, பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008 - 2009  காலப்பகுதியில், 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பிலான பிரதான சந்தேக நபரான நேவி சம்பத் என அழைக்கப்படும், லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி, கடந்த செப்டெம்பர் 13 ஆம் திகதி, குற்றவியல் விசாரணை திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 21ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் திசாநாயக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கைது செய்யப்பட்ட சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சியை எதிர்வரும் டிசம்பர் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

கடத்தப்பட்ட இளைஞர்களை மறைத்து வைத்து அவர்களது குடும்பத்திற்கு தொலைபேசிமூலம் அழைப்புவிடுத்து, கப்பம் கோரியமை, அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை உள்ளிட்ட விடயங்களில் ஈடுபட்ட ஏனைய சந்தேகநபர்களை கைதுசெய்வது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக அன்றைய தினம் குற்றவியல் விசாரணை திணைக்களம் நிதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...