வெங்காயத்துக்கு இத்தனை மவுசு ஏன்? | தினகரன்

வெங்காயத்துக்கு இத்தனை மவுசு ஏன்?

வெங்காயத்துக்கு இத்தனை மவுசு ஏன்?

வீடுகள், ஹோட்டல்களில் இன்றைய எரியும் பிரச்சினை!

பண்டிகைக் காலம் நெருங்க நெருங்க மரக்கறிகள், பழ வகைகளின் விலை அதிகரிப்பது இயல்பு.  ஆனால் வெங்காயத்தின் விலை சரித்திரத்திலேயே கேட்டிராத அளவு தற்போது உயர்ந்துள்ளது. 

பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 120 ரூபா தொடக்கம் 130 ரூபாவாக காணப்பட்டாலும் சில்லறைவிலை 180 ரூபாவாகும். சின்னவெங்காயம் மொத்த விலை 1 கிலோ கிராம் 550 ரூபாவாகும். சில்லறை விலை 700 ரூபாவாகும். ஏன் வெங்காய விலை இவ்வளவு அதிகரித்துள்ளது? 

விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ. எம். டபிள்யூ. வீரக்கோன் வெங்காயப் பற்றாக்குறைக்கு காரணம் காலம் தவறி பெய்த கடும் மழையாகும் எனத் தெரிவித்தார். அதனாலேயே வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டது என அவர் கூறினார். 

"இலங்கையில் பெரிய வெங்காயமும், சின்ன வெங்காயமும் ஆறாயிரம் ஹெக்டயர் அளவில் பயிர் செய்யப்படுகின்றன. அதன் மூலம் 70,000 மெற்றிக் தொன் உற்பத்தி செய்யப்படுகின்றது. நாட்டின் பாவனைக்கு இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் வெங்காயம் தேவைப்படுகின்றது. ஆகவே எமது தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. இலங்கையில் அதிகமாக வெங்காயம் சிறுபோகத்திலேயே பயிரிடப்படுகின்றது. ஆனால் கடந்த போகத்துக்கு முந்திய போகத்தின் போது காலந்தவறி பெய்த கடும்மழையால் நனைந்த வெங்காயம் அழுகிப் போனது. அதனால் இம்முறை வெங்காயம் பயிர் செய்ய விவசாயிகள் பயந்தார்கள். 

கடந்த வருடம் 1500 ஹெக்டயரிலேயே வெங்காயம் பயிரிடப்பட்டது. அதனால் நாட்டில் உற்பத்தி குறைந்தது. இலங்கைக்கு இந்தியாவிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டதால் கடந்த வருடம் தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஆனால் மழை காரணமாக இந்தியாவிலும் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. வடக்கில் சின்னவெங்காயம் 8000 தொன் அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதனை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தற்போது நாம் உள்ளூர் வெங்காய விதை உற்பத்தியில் ஈடுபட்டு சிறுபோகத்தில் 4000 தொடக்கம் 5000 ஹெக்டயர் காணியில் பயிரிடத் தயாராகி வருகின்றோம். அதனால் எதிர்காலத்தில் நிலைமை சீராகும் என எண்ணுகின்றோம்" என்கிறார் வீரக்ேகான். 

வெங்காய விலை அதிகரிப்பு குறித்து விவசாயத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் நாயகம் சனத் எம். பண்டார கூறுகையில், "நாட்டின் பெரிய வெங்காய தேவை இரண்டு இலட்சம் மெற்றிக் தொன்னாகும். ஆனால் அதில் பாதியையாவது நாம் உற்பத்தி செய்வதில்லை. வெங்காயம் உற்பத்தி செய்யும் பரப்பளவை அதிகரிக்கச் செய்தாலும் வெங்காயத்தை ஒரு மாதத்திற்கு மேல் களஞ்சியப்படுத்த முடியாது என்பதால் வருடத்தில் ஆறு மாதங்களுக்கு நாம் வெங்காயத்தை இறக்குமதி செய்ய நேரிடுகின்றது. நாம் பாதுகாப்பான உள்ளக வெங்காய உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் அறுவடை பெற முடியாத காலத்திலும் வெங்காயத்தைப் பெறலாம்"  எனத் தெரிவித்தார்.  

"2014ஆம் ஆண்டே நாம் அதிகளவு வெங்காய அறுவடையைப் பெற்றோம். அது 98,900 மெற்றிக் தொன்னாகும்.அதிகளவு அறுவடையை விவசாயிகள் பெறுவதற்கு விவசாயத் திணைக்களம் உதவியுள்ளது என தெரிகின்றது.வெங்காயத்தை அறுவடை செய்த பின்னர் அதனை விற்பதற்கான சந்தை தயாராக இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் நன்றாக வெயிலில் காயவைத்து பதமாக உள்ளதனால் இரண்டு மாதங்கள் வரை இறக்குமதியாளர் தம்வசம் வைத்திருந்து தேவையான போது சந்தைக்கு விடலாம்" என அவர் தெரிவித்தார்.  

காலநிலை விவசாயிகளுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்துவதால் வெங்காய உற்பத்தியை பாதுகாக்க பயிரிடும் காலம் மாற்றப்பட வேண்டுமென்பது வெங்காய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் கருத்தாகும். அதுபற்றி தெரிவித்த வெங்காயம் பயிரிடும் விவசாயியான சந்தன குணரத்ன கூறுகையில்,“மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது காலநிலையேயாகும். மற்றைய விடயம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காய இறக்குமதி மூலமே ஏனைய தேவை சமநிலைபடுத்தப்பட்டது. திடீரென இந்தியா ஏற்றுமதியை நிறுத்தியதனால் இலங்கையில் வெங்காய விலை அதிகரித்தது. தொடர்ந்து ஏற்பட்ட தடைகள் காரணமாக விவசாயிகள் வெங்காய உற்பத்தியை கைவிட்டு விட்டார்கள். சிறுபோகத்தின் போது மிக குறைந்தளவு விவசாயிகளே வெங்காய பயிர் செய்கையில் ஈடுபட்டார்கள்.  

அடுத்த விடயம் வெங்காயம் அறுவடை செய்யும் காலங்களில் தான் அதிகளவு மழை பெய்யும். நாளைக்கு அறுவடை செய்ய எண்ணும் போது இன்று மழை பெய்யும். அதனால் வெங்காயம் அழுகி விடுகின்றது. இலட்சக்கணக்கான ரூபா பணம் விரயமாகின்றது.கடந்த போகத்தில் மழை குறைவடைந்தால் பாதிப்பு ஏற்பட்டது. விலையும் அதிகரித்தது. அரசாங்கமும் இறக்குமதிக்கு அதிகளவு வரி விதித்தது. இந்நிலைமை நீடித்தால் எதிர்காலத்தில் அதிகளவு விவசாயிகள் வெங்காய உற்பத்தியில் ஈடுபடுவார்கள். 

விவசாய சேவை திணைக்களம் விவசாயிகளுக்கு ஏப்ரல் மாதமளவில் நாற்றுமேடையை அமைக்க அறிவுறுத்த வேண்டும். நீரை மேமாத நடுப்பகுதியில் வழங்க வேண்டும். இவர்கள் ஜூன் மாதம் முதலாம் திகதியளவில் தான் நீரை வழங்குகின்றார்கள். அறுவடையை செப்டம்பர் மாதத்திலேயே பெறமுடியும். அப்போது மழைகாலம் ஆரம்பித்து விடும். எமது நாட்டில் விவசாயிளுக்கு தக்க சமயத்தில் அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டும்" என்றார்.

இன்று இலங்கைக்கு பல நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை. பாகிஸ்தான், சீனா, எகிப்து போன்ற நாடுகளிலிருந்தே வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்தியாவிலிருந்து இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டதால்தான் வெங்காய விலை அதிகரித்தது. அங்கிருந்து கொண்டுவரப்படும் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் எமது நாடு பாதிக்கப்படுகின்றது.  

பாவனையாளர்கள் சிலரின் கருத்துகள் வருமாறு: கொழும்பைச் சேர்ந்த அஜந்தா பெரேரா "வெங்காய விலை அதிகரிப்பு குடும்பப் பெண்களையே அதிகமாக பாதித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை எமது குடும்பத்தார் விரும்புவதில்லை, அதன் சுவையும் மணமும் வித்தியாசமாகவுள்ளது" என்கிறார்.  

கட்டாயம் வெங்காயம் பாவிக்கப்பட வேண்டுமா என சிரேஷ்ட போசணையியலாளர் எம்.சீ. ஹெட்டிகெதரவிடம் வினவிய போது,“வெங்காயம் சுகாதாரத்துக்கு மிகச் சிறந்தது. அது விஷத்தை அழிக்கும் தன்மையுடையது. சல்பர் அதிகம் உள்ளதால் புற்றுநோய் காரணியை தடுக்கின்றது. இரத்த சீனியின் அளவை குறைக்கின்றது  இரத்த அழுத்தத்தை குறைக்கின்றது" என்றார்.


Add new comment

Or log in with...