அரச நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் ஈடுபட அனுமதி அவசியம் | தினகரன்


அரச நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் ஈடுபட அனுமதி அவசியம்

அரச நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் ஈடுபட அனுமதி அவசியம்-MoU Should be Signed Prior Approval By Govt-Circular

ஜனாதிபதி செயலாளரினால் சுற்றுநிருபம்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள், கடன் வழங்கும் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் நேரடியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திடுவதை தடைசெய்து ஜனாதிபதியின் செயலாளரினர் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சுகள், மாகாண சபைகள், அரசு நிறுவனங்கள், கட்டுப்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரச மற்றும் அரச பங்களிப்புடனான நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சுகளின் செயலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள குறித்த சுற்றறிக்கையில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்வாறான ஒப்பந்தங்களில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக, ஒப்பந்தத்தின் ஈடுபடும் தரப்பினருக்கும் இடையில் சட்ட ரீதியான சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒப்பந்தங்கள் வெளிவிவகாரம் தொடர்பான அமைச்சுகள், உரிய திறைசேரி திணைக்களங்கள், மத்திய வங்கி ஆகியவற்றின் அனுமதி அல்லது முன்னறிவித்தல் இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்க செலவில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டங்களில் முறையான நிதி கணக்கீடு, தர நிர்ணயம் இன்மை காரணமாக குறித்த திட்டங்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட திட்டங்கள் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் இறுக்கமான நடவடிக்கைகளை பின்பற்றுமாறு குறித்த சுற்றுநிரூபத்தின் மூலம் அமைச்சின் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


வெளிநாட்டு முதலீட்டாளர்களை முன்னணி முகவர்கள், சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் தூதரகங்களின் நேரடி ஒப்பந்தங்கள் அல்லது புரிந்துணர்வு உடன்படிக்கைகள் ஆகியவற்றை மாகாண சபைகள் உள்ளிட்ட அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் செய்துகொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.  

இந்த தடையுத்தரவு உடனடியாக அமுலாகும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தினால் கொண்டுவரப்பட்டுள்ளது. அவ்வாறான ஒப்பந்தங்கள் அல்லது புரிந்துணர்வு உடன்படிக்கைகள் உரிய நடைமுறைப்படியே செய்துகொள்ளப்பட வேண்டுமென்றும் அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

இதன்படி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு, சட்ட மா அதிபர், மத்திய வங்கி ஆகியவற்றின் அனுமதியின் பேரிலேயே மேற்படி ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் செய்துகொள்ளப்படமுடியும்.  

ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் எவ்வாறு செய்துகொள்ளப்பட வேண்டும் என்பதை கூறும் சுற்றுநிருபத்தை ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அனைத்து அமைச்சுக்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.  

தற்போதைய நிலையில் நிழல் அமைச்சுக்கள், மாகாண சபைகள், அரச திணைக்களங்கள் மற்றும் அரச சார்புடன் கூடிய முகாமைகள் ஆகியவை வெளிநாட்டு முதலீட்டாளர்கள், கடன் வழங்கும் முகவர்கள் வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் தூதரகங்களுடன் பல்வேறு நிதித் திட்டங்கள், கடன் வாங்கும் ஏற்பாடுகள் மற்றும் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன.  

சில நேரங்களில் அதற்கு அப்பாலும் சென்று அரசாங்க வரைவுக்குள் உள்ள நடைமுறையை பின்பற்றாமல் உள்ளன. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் கூறினார்.  

அதேவேளை வெளிநாட்டு உறவுகள் தொடர்பான அமைச்சுக்கள், சம்பந்தப்பட்ட திறைசேரி திணைக்களங்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கிக்கு எந்தவித முன்அறிவிப்பும் இன்றி இவ்வாறான பல கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுகின்றன என்று சுற்று நிருபத்தில் கூறப்பட்டுள்ளது.

மேற்கூறியவாறு கடந்த காலத்தில் செய்துகொள்ளப்பட்ட பல இரு தரப்பு மற்றும் பல தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் முறையற்ற வகையில் மேற்கொள்ளப்பட்டதுடன் தகுந்த தேவை மதிப்பீடுகள் அல்லது போதுமான தயார்ப்படுத்தல்கள் இன்றி செய்யப்படுவதால் அவற்றை அமுல்படுத்தும்போது பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சட்டப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.  

இனிமேல் சமர்ப்பிக்கப்படும் அனைத்து முதலீட்டு விண்ணப்பங்களும் இலங்கை முதலீட்டு சபையின் ஊடாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  

அதேநேரம் நிதி விண்ணப்பங்கள் அதேபோன்று திறைசேரியில் உள்ள அலுவலகத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். புதிய வழிகாட்டல்களின்படி உத்தேச முதலீட்டாளரின் திட்ட யோசனை ஏற்றுக்கொள்ளக்கூடியதா இல்லையா? என்பதை இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சம்பந்தப்பட்ட முதலீட்டாளருக்கு அறிவிப்பார்.  

கடந்த அரசாங்கத்தில் சில அமைச்சரவை அமைச்சர்கள் வெளிநாட்டு நிறுவனங்கள், சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றுடன் அமைச்சரவை அங்கீகாரம் இல்லாமலே நேரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.    முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியுதீனும் இவ்வாறான நேரடி நிதியைப் பெற்றவர் ஆவார்.  கலைக்கப்பட்ட வட மாகாண சபையும் இதேபோன்று முதலமைச்சரின் நிதியமொன்றை ஸ்தாபிக்க முயற்சித்தது.    யுத்தத்துக்கு பின்னரான உட்கட்டமைப்பு அபிவிருத்தியை புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டது எனினும் அம் முயற்சி கைகூடவில்லை.   Add new comment

Or log in with...