Friday, April 26, 2024
Home » குறுகியகால நெறியை நிறைவு செய்த யாழ் பல்கலை மாணவர்களுக்கு சான்றிதழ்
பாராளுமன்ற செயற்பாடுகள், நடைமுறைகள்;

குறுகியகால நெறியை நிறைவு செய்த யாழ் பல்கலை மாணவர்களுக்கு சான்றிதழ்

by Rizwan Segu Mohideen
February 29, 2024 8:04 am 0 comment

இலங்கை பாராளுமன்றத்தினால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த குறுகியகால நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் அண்மையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விரிவான புரிதலை வழங்கும் நோக்கில் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்புப் பிரிவினால் இப்பாடநெறி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஊடகத்துறை மாணவர்களின் கல்விக்காக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடநெறிக்கான வளவாளர்களாகப் பாராளுமன்ற செயலகத்தின் உயர்அதிகாரிகள் பங்களிப்புச் செய்தனர். இதன்போது, பாராளுமன்றமும் அதன் சட்டவாக்க செயன்முறையும், பாராளுமன்ற மரபுகள், பாராளுமன்றக் குழுக்கள், பொதுமக்கள் பங்கேற்பு, பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம், திறந்த பாராளுமன்ற எண்ணக்கரு, அரசியலமைப்பு மறுசீரமைப்பு போன்றன தொடர்பில் விரிவான புரிதல் வழங்கப்பட்டதுடன், பல்வேறு நாட்கள் இடம்பெற்ற இந்தப் பாடநெறியில் பல பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகளின் கீழ் விரிவுரைகள் மற்றும் நடைமுறைச் செயற்பாடுகளும் உள்ளடங்கியிருந்தன.

இங்கு யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, ஜனநாயக ஆட்சி முறையில் இளைஞர் சமூகத்தினருக்கு விசேட பொறுப்புகள் காணப்படுவதுடன், அதில் விரிவான இளைஞர் பங்களிப்புக்கு திறந்த வழிமுறையொன்றை இலங்கை பாராளுமன்றம் பின்பற்றுவதாகச் சுட்டிக்காட்டினார்.

குழுக்களில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிப்பதன் மூலம் இளைஞர் சமூகத்தினரின் கருத்துகளையும் அபிலாஷைகளையும் சட்டவாக்கத்துக்கு நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளமை மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தற்பொழுது பாராளுமன்றத்தில் பயிற்சி வேலைத்திட்டங்களை செயற்படுத்துதல் என்பன பாராளுமன்றத்தில் இளைஞர் பங்களிப்பை விரிவாக்குவதற்கான நடவடிக்கைகளாகும் என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரகுராம் மற்றும் விரிவுரையாளர்கள், தேசிய ஜனநாயக நிறுவனத்தின் இலங்கைப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா ஆகியோருக்கிடையில் இதன்போது விசேட சந்திப்பொன்று இடம்பெற்றதுடன், இங்கு பாராளுமன்ற முறைமை மற்றும் பாராளுமன்றத்தினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடத்தப்படும் பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த குறுகியகால பாடநெறி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT