Friday, April 19, 2024
Home » விருதுநகர் ரோட்டரி கழக அனுசரணையில் மாணவிகளுக்கான ‘யாதுமானவள்’ நிகழ்வு

விருதுநகர் ரோட்டரி கழக அனுசரணையில் மாணவிகளுக்கான ‘யாதுமானவள்’ நிகழ்வு

by Rizwan Segu Mohideen
February 29, 2024 7:38 am 0 comment

தமிழ்நாடு விருதுநகர் ரோட்டரி மாவட்டம் 3212 கிளப் அனுசரணையில் முனைவர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணனின் மாணவிகளுக்கான தன்னம்பிக்கையூட்டும் ‘யாதுமானவள்’ நிகழ்வு இலங்கையில் சுமார் 14 தடவை நடைபெறுகின்றது.

முதலாவது நிகழ்வு ‘அரோ அறக்கட்டளை அமைப்பின்’ அனுசரணையில் கண்டி கல்வி வலயத்தின் மாணவ மாணவிகளுக்கான நிகழ்வாக கண்டி இந்து கலாசார மண்டபத்தில் 19.02.2024 அன்று திருமதி பிரியா கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.

கண்டி இந்து சிரேஷ்ட கல்லூரி மாணவர்களின் கடவுள் வாழ்த்து, கண்டி பதியுத்தீன் மகளிர் கல்லூரி மாணவிகளின் கிராத் ஓதுதல் மற்றும் கிறிஸ்தவ ஆராதனையுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் கண்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ். தமிழ்செல்வன் அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து கண்டி சத்ய சாயி கலாலய மாணவர்களின் வரவேற்பு நடனம் நடைபெற்றது.

கௌரவிப்பு நிகழ்வில் தமிழ்நாடு விருதுநகர் ரோட்டரி கழகத்தின் செயற்திட்டத் தலைவி திருமதி ரி. விஜயகுமாரி அவர்களுக்கான கௌரவத்தையும், மத்திய மாகாண இந்து மாமன்ற தலைவர் துரை.சிவசுப்ரமணியம், மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி அருந்ததி சத்தியேந்திரா ஆகியோருக்கான கௌரவம் இடம்பெற்றது.

சிறப்புச் சொற்பொழிவாளர் முனைவர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் தன்னம்பிக்கையூட்டும் ‘யாதுமானவள்’ என்ற சிறப்பு சொற்பொழிவும், அவருக்கான கௌரவமும் இடம்பெற்றன. நன்றியுரையை கண்டி இந்து சிரேஷ்ட கல்லூரி அதிபர் பி. சிவகுமார் வழங்கினார்.

இரண்டாம் நாள் 20.02.2024 நிகழ்வு தெல்தெனிய, வத்தேகம ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக முனைவர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களால் கண்டி பல்லேகலவில் நடைபெற்றது.

முனைவர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களுக்கான கௌரவமும், கடந்த பதினைந்து வருடங்களாக இப்பிரதேசத்தில் கல்விப்பணி, சமூகப்பணி, ஆகிய பணிகளையும் முன்னெடுத்து வருகின்ற ‘அரோ அறக்கட்டளை அமைப்பின்’ தலைவி திருமதி பிரியா கார்த்திக் அவர்களுக்கான கௌரவமும் இடம்பெற்றன.

மூன்றாம் நாள் நிகழ்வு (21.02.2024) நாவலப்பிட்டி பஸ்பாகே கோரலே கல்வி வலயத்தின் மாணவிகளுக்காக நாவலப்பிட்டி கிராண்ட் பெவிலியன் மண்டபத்தில் வலய கல்விப் பணிப்பாளர் உமேஸ்காந்தன் தலைமையில் நடைபெற்றது.

முனைவர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களுக்கான கௌரவமும், சிறப்பான கேள்விகளை கேட்ட மாணவிகள் இருபது பேருக்கான பாராட்டும் இடம்பெற்றன. அங்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கான உணவுகளை பிரபல வர்த்தகர் எஸ். ஞானசேகரன், திருமதி மணிமேகலா ஞானசேகரன் வழங்கினர்.

நான்காம் நாள் (22.02.2024) நிகழ்வு அட்டன் கல்வி வலயத்தின் மாணவிகளுக்காக மலையக மகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் ‘பிரின்ஸ் மண்டபத்தில்’ அட்டன் வலய கல்விப்பணிபாளர் விஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு விருதுநகர் ரோட்டரி மாவட்டம் 3212 கிளப் செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். மண்டபத்தை வழங்கி உதவிய அசோகன், அட்டன் வலய கல்விப்பணிபாளர் நரேந்திரன் ஆகியோர் மலையக மகளிர் மன்றத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்த மாணவிகளுக்கான தன்னம்பிக்கையூட்டும் ‘யாதுமானவள்’ நிகழ்வுகளிலும் சுமார் 3500 மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இவ்வாறான எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவச் செல்வங்களுக்கான நிகழ்வுகளை ஒழுங்கமைத்த ‘அரோ அறக்கட்டளை அமைப்பின்’ ஸ்தாபக தலைவி திருமதி பிரியா கார்த்திக் அவர்களுக்கும், மலையக மகளிர் மன்ற தலைவர் செயலாளர் அவர்களுக்கும் பலரும் நன்றி தெரிவித்தனர்.

சிந்துஜா கோபிநாத்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT