பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு விசாரணை பெப். 20 முதல் | தினகரன்


பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு விசாரணை பெப். 20 முதல்

பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு விசாரணை பெப். 20 முதல்-Prageeth Ekneligoda Case From Feb 20-2020

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 20 முதல் விசாரணை செய்யப்படவுள்ளது.

இன்று (18) மூவரடங்கிய கொழும்பு விசேட நீதிமன்றத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இவ்வழக்கு சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஒன்பது இராணுவ அதிகாரிகள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆதாரங்களை விசாரிக்க நீதிபதிகள் குறித்த தினத்தை அறிவித்து உத்தரவை பிறப்பித்தனர்.

இதன்போது, வழக்கின் சாட்சியில் வழங்கப்பட்டுள்ள, 10 தொலைபேசி இலக்கங்கள் குறித்த அழைப்பு விபரங்களை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பதில் சொலிசிட்டர் நாயகம் சுதர்சன டி சில்வா நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

குறித்த தரவுகள் தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பதில் சொலிசிட்டர் நாயகம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ஐயாசாமி பாலசுப்பிரமணியம் என்பவருக்கு இதன்போது அழைப்பாணை விடுக்கப்பட்டது. அவர் தனிநபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், பிணையாளர்களை முன்னிறுத்த தவறியமை தொடர்பில் அவரது பிணையை இரத்து செய்து அவரை மீண்டும் கைது செய்யுமாறு நீதியரசர்கள் குழுவின் தலைவர் சம்பத் அபேசேகர பகிரங்க நீதிமன்றத்தில் அறிவித்தார்.

பிரதிவாதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, அது தொடர்பில் மன்னிப்பு கோரியதோடு, இன்றைய அமர்வின் இறுதியில் பிணையாளரை முன்னிறுத்துவதாக உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து, வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்ததோடு, வழக்கு விசாரணைக்கு அவசியமான அனைத்து விடயங்களும் முழுமையடைந்துள்ளதா என்பது குறித்து ஆராய வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி எழுத்துக் கொள்ளவும் இதன்போது நீதிமன்றம் தீர்மானித்தது.

கிரித்தலை இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஷம்மி குமாரரத்ன உள்ளிட்ட 9 இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மீது, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், பிரகீத் எக்னலிகொட கடத்தல் தொடர்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரகீத் எக்னலிகொட, சிந்தனைச்சித்திரம்/ கேலிச்சித்திரக் கலைஞர் என்பதோடு, கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், 2010 ஜனவரி 24ஆம் திகதி முதல் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...