Thursday, April 25, 2024
Home » காசாவில் அடுத்த வாரம் போர் நிறுத்தத்திற்கு பைடன் நம்பிக்கை: ஹமாஸ் பரிசீலனை

காசாவில் அடுத்த வாரம் போர் நிறுத்தத்திற்கு பைடன் நம்பிக்கை: ஹமாஸ் பரிசீலனை

- இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிப்பு

by mahesh
February 28, 2024 8:02 am 0 comment

காசாவில் அடுத்த வாரம் போர் நிறுத்தம் ஒன்றை எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியபோதும், முன்மொழியப்பட்டிருக்கும் திட்டத்தை ஹமாஸ் அமைப்பு தொடர்ந்து பரிசீலித்து வருகிறது.

போர் நிறுத்தம் ஒன்று தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்தபோதும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதோடு, ஐந்து மாதங்களை எட்டும் இந்தப் போரில் உயிரிழந்த பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 30,000ஐ நெருங்கியுள்ளது.

முஸ்லிம்களின் புனித ரமழான் மாதத்தில் படை நடவடிக்கையை நிறுத்துவதற்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக பைடன் குறிப்பிட்டுள்ளார். காசாவில் போரை நிறுத்தி அங்கு பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான உடன்படிக்கை ஒன்றை எட்டும் முயற்சியில் மத்தியஸ்தம் வகிக்கும் அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டாருடன் பிரான்ஸ{ம் ஈடுபட்டுள்ளது.

நியூயோக்கில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றிருந்த பைடனிடம், இந்த உடன்படிக்கை எப்போது ஆரம்பிக்கும் என்று கேட்டபோது, “வார இறுதியின் முடிவில் ஆரம்பிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.

“நாம் போர் நிறுத்தம் ஒன்றை நெருங்கி இருப்பதாகவும் இன்னும் அதனை அடையவில்லை என்றும் எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னிடம் கூறினார். அடுத்த திங்கட்கிழமை நாம் போர் நிறுத்தம் ஒன்றை எட்டலாம் என்பது எனது எதிர்பார்ப்பு” என்று பைடன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வாரம் இடம்பெற்ற அவசர பேச்சுவார்த்தையை அடுத்து முன்வைக்கப்பட்டிருக்கும் போர் நிறுத்த முன்மொழிவு பற்றி ஹமாஸ் தரப்பு இன்னும் உத்தியோகபூர்வ பதிலை அளிக்கவில்லை.

இதில் எதிர்வரும் திங்கட்கிழமை போர் நிறுத்தம் ஒன்று எட்டப்படுவது பற்றிய பைடனின் கருத்து முன்கூட்டியதாக உள்ளது என்றும் கள நிலவரத்திற்கு பொருந்துவதாக இல்லை என்றும் ஹமாஸ் அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவத்திற்கு தெரிவித்துள்ளார்.

மறைமுக பேச்சுவார்த்தைகளில் நிரப்பப்பட வேண்டிய பெரிய இடைவெளிகள் இன்னும் இருப்பதாக பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் திட்டம்

இதில் முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரையில் ஆறு வாரம் நீடிக்கக்கூடிய போர் நிறுத்தம் ஒன்றுக்கு திட்டமிடப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன்போது ஹமாஸ் பிடியில் இருக்கும் 40 இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு பகரமாக இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் 400 பலஸ்தீனர்களை விடுவிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவின் ஓர் அங்கமாக காசா மருத்துவமனைகள் மற்றும் பேக்கரிகள் சீரமைக்கப்படுவதோடு காசாவுக்கு நாளுக்கு 500 வரையான உதவி லொறிகள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவிருப்பதாக அது தொடர்பில் தெரிந்த வட்டாரத்தை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் இராணுவ சேவையில் ஈடுபட முடியுமான வயதுடைய ஆண்கள் தவிர இடம்பெயர்ந்த அனைத்து பலஸ்தீன பொதுமக்களும் வடக்கு காசாவுக்கு திரும்புவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதோடு காசாவின் சனநெரிசல் மிக்க பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய படைகள் விலகிவிடும் என்றும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தூதுக் குழுக்கள் தொடர்ந்தும் கட்டார் தலைநகர் டோஹாவில் இருந்து வெவ்வேறாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படும் முஸ்லிம்களின் புனித ரமழான் மாதத்திற்கு முன்னர் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு மத்தியஸ்தர்கள் முயன்று வருகின்றனர்.

“ரமழா வரவிருப்பதோடு, அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான கால அவகாசத்தை பெறும் பொருட்டு ரமழான் காலத்தில் (போர்) நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதாக இஸ்ரேலியர்கள் இணங்கியுள்ளனர்” என்று யு.எஸ். டீவி ஒளிபரப்புக்கு கருத்து வெளியிட்ட பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மத்தியு மில்லர், போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறியபோதும், முன்மொழியப்பட்டிருக்கும் இந்த புதிய உடன்படிக்கைக்கு ஹமாஸ் இணங்குவது பற்றி தெரியவில்லை என்றுள்ளார்.

இந்நிலையில் பலஸ்தீன பொதுமக்கள் இடையே செல்வாக்கு செலுத்துவதற்காகவே அமெரிக்கா இந்த போர்நிறுத்த முன்மொழிவை கசியவிட்டிருப்பதாக ஹமாஸ் அதிகாரியான ஒசாமா ஹம்தான் குற்றம்சாட்டியுள்ளார்.

அல் அரபி தொலைக்காட்சிக்கு பேசிய அவர், “பாரிஸ் கூட்டத்தின் வரைவு அமெரிக்க முன்மொழிவு ஒன்று என்பதோடு அது புதிய தாக்குதல் ஒன்றுக்கு தயாராக (இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்) நெதன்யாகுவுக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதாக உள்ளது” என்று ஹம்தான் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வரவும், இஸ்ரேலிய முற்றுகையை நீக்கவும், கைதிகளை பரிமாற்றுவதற்கு முன் இஸ்ரேலிய கட்டுப்பாடுகள் இல்லாமல் காசா புனரமைப்பு திட்டத்தை ஆரம்பிக்கவும் ஹமாஸ் இன்னும் வலியுறுத்துகிறது என்றும் ஹம்தான் கூறினார்.

முன்னதாக காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டு இஸ்ரேலியப் படை காசாவில் இருந்து முழுமையாக வாபஸ் பெற்று போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் ஹமாஸ் முன்வைத்த பரிந்துரையை “மாயை” என்று நெதன்யாகு நிராகரித்திருந்தார்.

எனினும் தற்காலிகமான போர் நிறுத்தம் ஒன்று பலஸ்தீனத்திற்கு சொந்தமான நாடு ஒன்றுக்கான திட்டத்தை ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும் என்று பைடன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பலஸ்தீன தனி நாட்டை உருவாக்கும் இரு நாட்டுத் தீர்வை நெதன்யாகு நிராகரித்து வருகிறார்.

30,000ஐ நெருங்கும் உயிரிழப்பு

144 ஆவது நாளாக இஸ்ரேலிய படை காசா மீது நேற்று (27) நடத்திய சரமாரித் தாக்குதல்களில் மேலும் பல பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கில் காசா நகர், தெற்கில் கான் யூனிஸ் மற்றும் பெரும் எண்ணிக்கையான மக்கள் திரண்டிருக்கும் ரபா நகரை பிரதானமாகக் கொண்டு இஸ்ரேல் வான், பீரங்கி மற்றும் கடற்படை படகுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

ரபாவில் உள்ள குவைட் மருத்துவமனைக்கு அருகில் அல் சத்மா குடும்பத்திற்கு சொந்தமான வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

காசா நகரில் திங்கட்கிழமை இரவு நடத்திய செல் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மேற்கு நுஸைரத் அகதி முகாமின் மீது ஆளில்லா விமானம் மூலம் நடத்திய குண்டு வீச்சில் பலரும் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் குண்டுவீசி சென்ற பின் கல் கராராவில் உள்ள வீடு ஒன்றின் இடிபாடுகளில் இருந்து 5 பேரின் சடலங்களை சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டிருப்பதாக வபா குறிப்பிட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய 11 படுகொலை சம்பவங்களில் குறைந்தது 96 பேர் கொல்லப்பட்டு மேலும் 172 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 29,878 ஆக அதிகரித்திருப்பதோடு 70,215 பேர் காயமடைந்துள்ளனர். இதில் காணாமல்போயிருக்கும் 7,000க்கும் அதிகமானவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களில் 70 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.

காசா போரினால் ஆக்கிமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலில் அங்குள்ள அகதி முகாம் ஒன்றில் திங்கட்கிழமை இரவு இஸ்ரேலிய படைகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பலஸ்தீனர்கள் மூவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.

மேற்குக் கரையின் டுபாஸ் சிறு நகருக்கு அருகில் பரா அகதி முகாமில் இடம்பெற்ற மோதலின்போது இஸ்ரேலிய படைகளின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தே இந்த மூன்று பலஸ்தீனர்களும் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் போராளியாக இருந்தபோதும் மற்ற இருவரும் தமது வீட்டில் இருந்தபோது ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகளுக்கு இலக்காகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படை தொடர்ந்து சுற்றிவளைப்புத் தேடுதல்களை நடத்தி வருகிறது. காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் அங்குள்ள குடியேறிகளினால் குறைந்து 403 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

1967 இல் அரபு – இஸ்ரேல் போரின்போது மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தை ஆக்கிரமித்த இஸ்ரேல் அதில் கிழக்கு ஜெரூசலத்தை ஒருதலைப்பட்சமான தனது ஆட்புலத்திற்குள் இணைத்துக் கொண்டது. போர் நீடிக்கும் காசா மற்றும் இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை கொண்ட எதிர்கால சுதந்திர நாடு ஒன்றை பலஸ்தீனர்கள் நாடுகளின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT