கோதுமை மாவின் வரி ரூ. 36இலிருந்து ரூ. 8ஆக குறைப்பு | தினகரன்

கோதுமை மாவின் வரி ரூ. 36இலிருந்து ரூ. 8ஆக குறைப்பு

கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியான ரூ. 36இனை நீக்கி, அதற்கு பதிலாக ரூபா 8 எனும் புதிய விசேட வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிதியமைச்சினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவுக்கான ஒருங்கிணைந்த கட்டணம் ரூ. 36 ரத்து செய்யப்பட்டுள்ளது, அதற்கு பதிலாக ரூ. 8 விசேட வர்த்தக பொருள் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் எனும் வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் கையெழுத்திடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு மூலம் இந்த விசேட வர்த்தக பொருள் வரி, டிசம்பர் 14 முதல் அமுலுக்கு வருவதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை நுகர்வுக்கு அவசியமான கோதுமை மாவானது, இதுவரை கோதுமை விதைகளாக இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூரில் மாவாக உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளது. ஒரு கிலோ மாவின் விலை ரூ. 8ஆக விசேட வர்த்தக பொருள் வரி விதிக்கப்பட்டதன் காரணமாக, கோதுமை மாவை இறக்குமதி செய்து போட்டி விலையில் விநியோகிக்க எந்தவொரு வர்த்தகருக்கும் அனுமதி வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சந்தையில் அதிகரித்த அரிசி விலையை கட்டுப்படுத்த, ஒரு கிலோ சம்பா மற்றும் நாட்டு அரிசி ஆகியன உச்சபட்சமாக கிலோவொன்று தலா ரூ. 99, ரூ. 98 ஆகிய சில்லறை விலையை நிர்ணயிக்கவும், கோதுமை மா இறக்குமதிக்கான அனுமதியை ஏற்படுத்தி, கோதுமை மா மீதான வரியைக் குறைக்கவும் அமைச்சரவை கடந்த வாரம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...