13ஆவது திருத்தத்திலுள்ள அதிகாரங்கள் வேண்டும் | தினகரன்


13ஆவது திருத்தத்திலுள்ள அதிகாரங்கள் வேண்டும்

செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருக்கின்ற தமிழ் மக்கள் மீளவும் இந்த மண்ணிற்கு வர வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மேலும் 13ஆவது திருத்தச் சட்டம் எங்களது அடிப்படை. ஆனாலும் அது எங்களுக்கு தீர்வல்ல. 13ஆவது திருத்தத்திலுள்ள அதிகாரங்கள் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதும் எங்களது கோரிக்கையாக இருக்கின்றது என்றார்.

யாழில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தியாவின் குடியுரிமையச் சட்டத் திருத்தத்தில் ஈழத் தமிழ் மக்கள் உள்வாங்கப்படவில்லை. அந்த நிலைப்பாட்டிற்கு ஆதரவும் அதேநேரம் எதிர்ப்பும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

என்னைப் பொறுத்தமட்டிலே தாயகத்திலுள்ள எங்களுடைய மக்களின் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஆகவே அது தடுக்கப்பட வேண்டியது மிக மிக அவசியமானது. அதற்காக இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள எமது மக்கள் இங்கே வர வேண்டும். அதனுடாகவே அவர்களது காணிகள் பறிபோவதைத் தடுத்து பாதுகாக்க முடியும்

திரும்பி வர விரும்பாதவர்களை வற்புறுத்த முடியாது. அவர்கள் அங்கேயே குடியுரிமையைப் பெற்று இருக்கலாம். ஆனால் அவர்களது குடும்பத்தவர்கள் இங்குள்ள தமது நிலத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே எங்களுடைய நிலத்தைக் காப்பாற்ற வேண்டுமாக அவர்கள் வரவேண்டும் என்பது மட்டுமல்லாது அதனைக் காப்பாற்றி பாதுகாக்கின்ற வாய்ப்பையும் நாங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்

13ஆவது திருத்தச் சட்டம் எங்களுடைய அடிப்படை. போராட்ட இயக்கங்கள் சிந்திய இரத்தத்தின் பின்னணியிலே அந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. எனவே அந்தச் சட்டத்தில் இருக்கின்ற அதிகாரங்கள் எங்களுக்கு வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக இருக்கிறது என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்


Add new comment

Or log in with...