Friday, March 29, 2024
Home » அமைச்சரவை முடிவுகள்

அமைச்சரவை முடிவுகள்

by mahesh
February 28, 2024 11:10 am 0 comment

01. நுண் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாண்மைத் துறையை மீண்டும் வலுப்படுத்துவதற்கான கடன்திட்ட முறையை நடைமுறைப்படுத்தல்

நிலவுகின்ற பொருளாதார பின்னடைவின் விளைவுகளாலும் மற்றும் அதன் கட்டுப்பாட்டுக்கு அப்பாலான வெளிப்புறக் காரணிகளின் விளைவுகளாலும் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, சுற்றுலாத்துறை, ஆடைக் கைத்தொழில்துறை மற்றும் இதர வணிகத் தொழிற்பாடுகள் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களில் குறிப்பிடத்தக்க தொகையினருக்கு தமது தொழில்முயற்சிகளை மேற்கொண்டு செல்வதற்குப் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கான சலுகையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாண்மைத் துறைக்கு தொழிற்பாட்டு மூலதனம் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

உத்தேச வேலைத்திட்டத்தின் மூலம் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு தத்தமது வியாபாரங்களை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் தேவையான கடன் வசதிகளை அனுமதிபெற்ற வணிக வங்கிகள் மற்றும் அனுமதிபெற்ற விசேட வங்கிகள் மூலம் சலுகை வட்டி வீதத்தில் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு கூறுகளாக குறித்த வேலைத்திட்டத்திற்கு 20 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படவுள்ளதுடன், அதில் 15 பில்லியன் ரூபாய்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மற்றும் புதிய தொழில் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும், எஞ்சிய 5 பில்லியன் ரூபாய்கள் செயலற்ற கடன் பிரிவின் கீழ் காணப்படுகின்ற தொழில்முயற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் ஒதுக்கப்படவுள்ளது.

02. தேசிய சுற்றுலாத்துறைக் கொள்கை

தேசிய சுற்றுலாக் கொள்கை வரைபு தொடர்பாக 2023.09.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன், அங்கு சுற்றுலாத்துறை நிபுணர்களுடன் கூடிய குழுவொன்றின் மூலம் குறித்த வரைபை மேலும் மீளாய்வுக்குட்படுத்தப்படல் வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஜனாதிபதியின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ள குழு சுற்றுலாத்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் ஆற்றல் வளங்களை அடையாளங்கண்டு உள்ளுர் மற்றும் உலகளாவிய சூழமைவுகளைக் கருத்தில் கொண்டு தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் விதந்துரைகளுக்கமைய உத்தேச தேசிய சுற்றுலாத்துறைக் கொள்கை வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.

03. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலும் கொழும்பு துறைமுகத்திலும் சுகாதார இயலளவுகளை மேம்படுத்தல்

இலங்கையின் பொருளாதாரம் சர்வதேச உல்லாசச் செயற்பாடுகள் மற்றும் வர்த்தகச் சுற்றுலாக்கள் மூலம் ஈட்டப்படும் வருமானங்களில் பிரதானமாக தங்கியுள்ளமையால், தடைகளின்றி நாட்டிற்குள் உள்வரும் இடங்களை தொழிற்படுத்தல், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் சுற்றுலா தொடர்பான சர்வதேச சுகாதார விதிகளுக்கமைய தேச எல்லைகள் ஊடாக உள்வரும் இடங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, உள்வரும் இடங்களில் தேச எல்லைகளில் சுகாதார முன்னேற்பாடுகள், தொற்று நோய்க் கட்டுப்பாட்டுக்கு நேரடியாக ஒத்துழைப்பு வழங்கல் மற்றும் பல்வேறுபட்ட அவசர சுகாதார நிலைமைகளின் போது அனைத்து பயணிகளதும், பணியாளர்களதும் மற்றும் உள்வரும் இடங்களிலுள்ள பணியாளர்கள் குழாமின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம், சர்வதேச புலம்பெயர் தாபனத்தின் (ஐழுஆ) மூலமாக 1,170 மில்லியன் ஜப்பான் யென் நிதியுதவியை வழங்கியுள்ளது.

குறித்த நிதியுதவியின் கீழ் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலும் கொழும்பு துறைமுகத்திலும் மற்றும் மாலைதீவு சர்வதேச விமான நிலையத்திலும் வசதிகள் சர்வதேச நடைமுறைகள், விதந்துரைகள் மற்றும் தர நியமங்களுக்கமைய மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

04. விவசாயத் துறையில் இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தின் கீழ் 2024-2026 காலப்பகுதிக்கான செயற்பாட்டுத் திட்டத்தில் கையொப்பமிடல்

விவசாயத் துறையில் இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் 2006.11.27 அன்று ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் இருதரப்பினரின் உடன்பாடுகளுக்கமைய விவசாயத் துறையை அபிவிருத்தி செய்வதற்காகவும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்காகவும் 2010-, 2011, 2017-,2019 மற்றும் 2022-,2024 காலப்பகுதிகளுக்குரிய செயற்பாட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2024-,2026 காலப்பகுதிக்கான புதிய செயற்பாட்டுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வியட்நாம் சோசலிச குடியரசின் விவசாயம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் சர்வதேச ஒத்துழைப்புத் திணைக்களம் மற்றும் இலங்கையின் விவசாய ஆராய்ச்சி கொள்கைப் பேரவையால் குறித்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

05. பத்தரமுல்ல வோடர்ஸ் எட்ஜ் வளாகத்தில் அமைந்துள்ள இரண்டு காணித்துண்டுகளை இலங்கை கடற்படைக்கும், கொழும்பு -10, அசோக வித்தியாலயத்திற்கும் குத்தகை அடிப்படையில் கையளித்தல்

பத்தரமுல்ல வோடர்ஸ் எட்ஜ் வளாகத்தில் 2 றூட் 30.89 பேர்ச்சர்ஸ் காணித்துண்டை இலங்கை கடற்படையின் படகோட்டுதல் மற்றும் உயிர்க்காப்பு பயிற்சி முகாமொன்றை அமைப்பதற்காக இலங்கை கடற்படைக்கும், 04 ஏக்கர் 02 றூட் 1.60 பேர்ச்சர்ஸ் காணித்துண்டை கொழும்பு -10 அசோக வித்தியாலயத்திற்கான விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்துவதற்கும் காணி ஆணையாளர் நாயகம் மூலம் நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. 1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

2022.06.06 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய, 1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டு சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் இறப்பர் கட்டுப்பாட்டு (திருத்தச்) சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தைத் தயாரித்தல்

புதிய நிதி ஒழுங்குச் சட்டகமொன்றைத் தயாரிப்பதற்கும், உத்தேச அரச நிதி முகாமைத்துவச் சட்டத்திற்கு குறித்த நிதி ஒழுங்கு சட்டகத்தை உட்சேர்ப்பதற்கு 2023.05.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் அரச நிதித் திணைக்களத்தால் ஏனைய திறைசேரித் திணைக்களம் மற்றும் பிரதி திறைசேரிச் செயலாளர்கள் இருவரின் இணைத் தலைமையின் கீழ் நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் ஆலோசனை மற்றும் கொள்கை ரீதியான வழிகாட்டலின் கீழ் அடிப்படைச் சட்டமூல வரைபொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த அடிப்படைச் சட்டமூல வரைபின் அடிப்படையில் அரச நிதிச் சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும், உத்தேச சட்டமூலம் சட்டவரைஞரால் தயாரிக்கப்படும் வரைக்கும் நிதிப் பிரமாணத்தைத் தயாரிப்பதற்கு ஆரம்பிப்பதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பதற்காக திறைசேரி செயலாளருக்கு அதிகாரம்.

08. 1990 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள கடன்களை அறிவிடுதல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்தல்

கடந்த 03 வருடகாலமாக நிலவுகின்ற பொருளாதார பின்னடைவுகள் காரணமாக உள்ளுர் பாரியளவிலான, நடுத்தரளவிலான மற்றும் சிறியளவிலான வியாபாரிகள் தமது வியாபாரங்களை நடாத்திச் செல்வதற்கு பல சிரமங்களை எதிர்கொள்வதற்கு நேரிட்டுள்ளது. தற்போது ஓரளவுக்கு பொருளாதாரம் மீண்டும் ஓரளவுக்கு வலுப்பெறுவதுடன், அதற்குத் தேவையான ஆரம்பப் படிமுறைகள் திறைசேரியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும், கடந்த காலத்தில் சிறிய மற்றும் நடுத்தரளவிலான வியாபாரிகளால் தமது வியாபார நடவடிக்கைகளுக்காக வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகை இன்னும் சரியான வகையில் செலுத்துவதில் பிரச்சினைகள் நிலவுவதாகப் பல தரப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலைமையின் கீழ் கடன் செலுத்தாமல் விடுவதால் வியாபாரிகளின் குறிப்பிடத்தக்களவு ஆதனங்களை தற்போது காணப்படுகின்ற சட்டங்களைப் பின்பற்றி வங்கிகள் கையகப்படுத்தி பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் வியாபாரத் துறையில் மேலெழக்கூடிய நெருக்கடி நிலைமைகளுக்குத் தீர்வுகண்டு வங்கிகளுக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் கடன் செலுத்துவதற்காக குறிப்பிட்டளவு சலுகைக் காலத்தை வழங்குவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, கடன் செலுத்தாமையால் வங்கிகளால் கடன் படுநர்களின் ஆதனங்களை கையகப்படுத்துவதற்காக பின்பற்றுகின்ற பொறிமுறையை 2024.12.15 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT