அம்பாறை மாவட்ட வேளாண்மையில் கழுத்துக்குத்தியின் தாக்கம் அதிகரிக்கும் | தினகரன்


அம்பாறை மாவட்ட வேளாண்மையில் கழுத்துக்குத்தியின் தாக்கம் அதிகரிக்கும்

அம்பாறை மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள வேளாண்மைக்கு கழுத்துக்குத்தியின் தாக்கம் இம்முறை கூடுதலாக காணப்படுமென, அம்பாறை மாவட்ட நெல்லுக்கான பாடவிதான உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ. முபாறக் தெரிவித்தார்.

பெரும் போக நெற்செய்கையில் ஏற்படும் நோய்த்தாக்கம் தொடர்பாகவும், அதனைக் கட்டுப்படுத்தும் முறை தொடர்பாகவும், விவசாயத் திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு அண்மையில் (12) அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

பாடவிதான உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ. முபாறக் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தற்போது காலநிலை குளிராகக் காணப்படுவதால் வேளாண்மைக்கு பங்கசு நோய்கள் அதிகமாக தொற்றக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும், இதனை நேர காலத்தோடு கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகளை அறிவுருத்த வேண்டும்.

வி.ஜி.941, வி.ஜி.358 சம்பா, வி.ஜி.250 மற்றும் வி.ஜி.360 போன்ற நெல் இனங்களுக்கே அதிகமாக கழுத்துக்குத்தியின் தாக்கம் காணப்படும்.

விவசாயிகள் யூரியா உரத்தைக் குறைத்து பொட்டாசியத்தை கூடுதலாக வேளாண்மைக்கு விசிற வேண்டும். அத்துடன் சம அளவிலான போசனைகளை வழங்குவதற்கு விவசாயிகளை அறிவுருத்தப்பட வேண்டும்.

விவசாயிகள் விவசாயப் போதனாசிரியர்களின் ஆலோசனைக்கமைய கிருமிநாசினிகளைத் தெளிக்க வேண்டுமென்றார்.

(எம்.எஸ்எம். ஹனீபா - ஒலுவில் விசேட நிருபர்)


Add new comment

Or log in with...