Thursday, April 25, 2024
Home » முப்பெரும் விழா, கௌரவிப்பு
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை ஏற்பாட்டில்

முப்பெரும் விழா, கௌரவிப்பு

பிரதம அதிதியாக மலேசிய உயர்ஸ்தானிகர் பங்கேற்பு

by mahesh
February 28, 2024 7:52 am 0 comment

மலேசியாவும் இலங்கையும் மிக நீண்ட காலமாக நட்புறவைக் கொண்ட நாடுகளாகும். ​இந்த சிறிய நாட்டில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ அமைப்பு பல கிளைகளை உருவாக்கி செயற்பட்டு வருவதை நான் மனமாற பாராட்டுகிறேன். இவ்வமைப்பு இளைஞர்களுடைய மேம்பாட்டையும் சமூகப் பணிகளையும் மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. கல்விக்காக சேவை செய்த மூத்தோரைப் பாராட்டுவது, அவர்களை மதிக்கின்ற வை. எம். எம். ஏ. பணி பாராட்டத்தக்கது. இது மென்மேலும் இடம்பெற வேண்டும் என்று பிரதம அதிதியும் இலங்கைக்கான மலேசிய நாட்டின் உயர்ஸ்தானிகருமான பத்லி ஹிசாம் ஆதம் தெரிவித்தார்.

அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் மத்திய செயற்குழுக் கூட்டமும் கேகாலை மாவட்டக் கிளைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கேகாலை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அதிபர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் மீலாத் விழாப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் முப்பெரும் நிகழ்வு என இரு அமர்வுகளாக மாவனல்லை தெவ்மினி ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது.

அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் தலைமையில் காலையில் இடம்பெற்ற முதலாவது அமர்வில் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக பிரதிநிதி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய கலந்து சிறப்பித்தார். மாலையில் இரண்டாவது அமர்வு தேசியத் தலைவர் இஹ்திசாம் ஏ. ஹமீட்டின் வழிகாட்டலுடன் கேகாலை மாவட்டப் பணிப்பாளர் எம். கே. ஏ. லுக்மான் தலைமையில் இடம்பெற்றது. இதில் மலேசிய நாட்டின் உயர்ஸ்தானிகர் பத்லி ஹிசாம் கலந்து கொண்டார். இதில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இஸ்லாத்தில், அறிவைத் தேடுவது மிகவும் உன்னதமான பணியாகும். அது கல்வி விடயத்தில் ஊக்குவிப்புச் செய்வதில் மேலோங்கியுள்ளது. அறிவைக் கற்றுக் கொள்வது தனிப்பட்ட முயற்சி மட்டுமல்ல, சமூகப் பொறுப்பும் கூட. கல்வி மற்றும் கற்றல் மூலம் நாம் நம்மை மேம்படுத்தி, சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கிறோம். இன்று கௌரவிக்கப்படும் அறிஞர்கள் கல்வியின் உணர்வையும், அறிவின் மீதான அர்ப்பணிப்பையும் முன்னுதாரணமாகக் காட்டியுள்ளனர். ஏனெனில், முஸ்லிம்களாகிய நமக்கு ஏற்கனவே கற்றுக் கொடுத்தது என்னவென்றால், நமது அறிவையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான். உண்மையில் நபி (ஸல்) அவர்களைப் பற்றிப் பேசும்போது நாம் அதைத் தெரிந்து கொள்ளலாம்.

நாங்கள் எங்கள் சகோதரர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வோம், அது மேலும் உலகில் வெற்றிபெறவும் எங்கள் சகோதர சகோதரிகளுடன் தொடர்ந்து எங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் உதவும். அல்லாஹுத்தஆலாவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை சரியான வழிகாட்டுதலையும் நெறிமுறைகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.

காஸாவிலுள்ள மக்கள் தண்ணீர், குடியிருக்க வசதிகளின்றி உயிர் பாதுகாப்புக்களின்றி பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன். அகில இலங்கை வை.எம். எம்.ஏ பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் தங்களின் அன்பான அழைப்பை எனக்கு வழங்கிய அமைப்பாளருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கற்றறிந்த அறிஞர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் கேகாலை மாவட்ட வை. எம். எம். ஏ. கிளை உறுப்பினர்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஆற்றிய சிறந்த சேவைகளை அங்கீகரிப்பதைக் காண்பது உண்மையில் ஒரு பாக்கியமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் உரையாற்றும் போது;

ஆரம்பத்தில் இது கலாநிதி எம்.எம்.ஏ. பேரவையென ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்றுவரை அது படிப்படியாக வளர்ந்து ஒரு மகத்தான பரிணாம வளர்ச்சியினைக் கண்டுள்ளது. அது 74 ஆண்டு நிறைவை அண்மித்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 179 வை. எம். எம். ஏ. கிளைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டத்தில் 9 கிளைகள் அமைந்துள்ளன. மாவட்டப் பணிப்பாளராக எம்.கே. லுக்மான் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். இப்பிரதேசத்தில் சிறந்த பணிகளை அவர் ஆற்றிவருகின்றார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க இம்முறை அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் மத்திய செயற்குழுக் கூட்டம் மாவனல்லையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் கேகாலை மாவட்ட வை.எம்.எம்.ஏ. கிளையினர்கள் இணைந்து ஓய்வு பெற்ற அதிபர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று சுமார் 90 பேர் அளவில் இந்நிகழ்வில் பாராட்டி கௌரவிக்கவும் மீலாத் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர், மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கவும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வு மாவனல்லையில் நடைபெறுவதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். அதேவேளையில் இந்நிகழ்வினை வெற்றிகரமான மேற்கொள்வதற்குப் பங்களிப்புச் செய்த அத்தனை உள்ளங்களுக்கும் எனது உள்ளார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நிகழ்வின் இரண்டாவது அமர்வில் எமது முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டு ஓய்வு பெற்ற அதிபர்களைப் பாராட்டுவது என்பது இன்றியமையாததொன்றாகும். இத்தகைய தியாகங்களைச் செய்த ஓய்வுபெற்ற அதிபர்களை நன்றி பாராட்டுவது என்பது இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரையில் மிகவும் உன்னதமான பணியாகும்.

கல்வியின் மேம்பாட்டிற்கும் கல்வி வளர்ச்சிக்கும் மாணவர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு அடித்தளமாக இருப்பவர்கள் அதிபர்மார்களே. கல்விக்காக சேவை புரிந்த ஓய்வு பெற்ற அதிபர்மார்களை இம்முறை மாவனல்லையில் கௌரவிப்பதையிட்டு நாங்கள் பெருமிதம் அடைகின்றோம். இதன் மூலம் கலாநிதி ஏ.எம். ஏ. அஸீஸின் கனவு நனவாகும் நல்லதொரு செய்தியாகப் பார்க்கலாம். அதற்காக பாடுபட்ட மாவட்டப் பணிப்பாளர் லுக்மான் மற்றும் ஏனைய கிளைகளின் தலைவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய விவகார தவிசாளர் சஹீட் எம். ரிஸ்மி;

சாதனையாளர்களை கௌரவிக்க வேண்டும் என்று இந்த மாவட்டத்திலுள்ள வை. எம். எம். ஏ. கிளைகள் சிந்தித்து இருந்தாலும் சாதனையாளர்களை உருவாக்கி விட்டு இங்கு அமர்ந்திருக்கும் மூத்த அதிபர்களும் ஆசிரியர்களும் தான் என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இந்த உலகத்திலே இருக்கக் கூடிய அனைத்து துறைசார்ந்தவர்களையும் உருவாக்கியவர்கள் அந்த அதிபர் ஆசிரியர்களும்தான். இங்கு அமர்ந்துள்ள மாணவர் மாணவிகள் எல்லோரும் பெற்றோர்களுக்குச் சமனானவர்கள் அந்த உன்னதமான பணியைச் செய்த நீங்கள், சாதனையாளர்கள் என்று சொல்வதை விட சாதனையாளர்களை உருவாக்கியவர்கள் என்று கூடக் கூறலாம். ஆனால் 20ஆம் நூற்றாண்டிலே கல்வி மேம்பாட்டுக்காக அதிகமான சேவைகளைச் செய்தவர்களே வருகை தந்துள்ளனர். 21 ஆம் நூற்றாண்டில் ஜொலித்துக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை உருவாக்கி விட்டு அமர்ந்து கொண்டிருக்கின்றீர்கள் எனும் போது உங்கள் சாதனை இன்னும் முடியவில்லை. இப்பொழுதுதான் உங்கள் சேவை ஆரம்பித்துள்ளது. நீங்கள் உங்கள் சேவையை முடித்து விட்டு அடுத்தவர்களுக்கான உங்கள் பணியை ஆரம்பித்திருக்கின்றீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு மனிதனின் வரலாறு எழுதப்பட வேண்டுமானால் தனக்குத் தான் தன்னுடைய சொந்தம், கார், பங்களா என்பதற்கு மாறாக அடுத்தவர்களுக்கு நாம் என்ன செய்தோமோ அதுதான் வரலாற்றில் எழுதப்படும். அதைத்தான் நீங்கள் இன்று வரலாற்றில் எழுதப்பட்டு விட்டீர்கள். எனவே சமகாலத்தில் இருக்கக் கூடிய இந்த மாணவர்கள் இவர்கள் எங்களை விட தொழில் நுட்ப வளர்ச்சியோடு மிகவும் வேகமாக வளர்ந்து வரக் கூடியவர்கள். குறிப்பாக டிஜிட்டல் புரட்சி செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத் துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து எங்களைத் தாண்டிச் சென்று விடுவார்களோ என்று ஒரு சில விடயங்களைப் பார்த்து எங்களுடன் சமாந்தரமாக பயணம் செய்ய எங்களை நாங்கள் மீண்டும் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய கால கட்டத்தில் இருக்கின்றோம்.

இலங்கையில் 180 கிளைகளைக் கொண்ட ஒரு தேசிய அமைப்பு இது. இந்த அமைப்பு கல்விக்காகத்தான் கலாநிதி ஏ. எம்.ஏ. அஸீஸ் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது. அதன் இஸ்தாபகர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியைக் கையேற்கும் போது கலாநிதி டி.பி. ஜாயா அவர்கள் ஒரு சர்வகலாசாலை என்ற தோற்றப்பாட்டுக்கு உரித்தானவை என்ற வகையில் இப்பாடசாலையை கட்டி எழுப்பினார்கள். அந்த வெற்றிடத்தின் இடைவெளியை நிரப்புவதற்கு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி ஏ. எம். ஏ. அஸீஸ் அவர்களிடம் கையளித்தார்.

அவர் இலங்கை முஸ்லிம்களின் முதுலாவது சிவில் சேவகர். அவ்வாறு கல்விக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு கேகாலை மாவட்டத்திலே அமைப்பின் மாவட்டப் பணிப்பாளர் லுக்மான், ஏனைய கிளைகளையும் இணைத்து கல்வியாளர்களை கௌரவிக்க எடுத்துக் கொண்ட விடயத்தை நான் மனமாற பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட நியுமென்ஸ் கல்லூரி மற்றும் ஏசியன் க்ரெச்வெட் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி ஏ. பி. எம். ஹுஸைன்;

கேகாலை மாவட்ட ஓய்வு பெற்ற அதிபர்களின் சேவைகள் மூலம் கேகாலை மாவட்டம் புகழ் பெற்றிருக்கின்றமையை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்.. மேலும் கல்விக்கு உதவி செய்தவர்களுக்கு பாராட்டி கௌரவிப்பது என்பது நாளை மறுமை நாளில் இறைவனினால் வழங்கப்படும் பெரிய கௌரவங்களாக மதிக்கப்படுவார்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது முசோலினி ஒரு கிராமத்தை அடித்து அழிக்க நினைத்து ஒரு படையை அனுப்பினான். பல தடவை முயற்சி செய்தும் அந்த கிராமத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை.

அப்போது முசோலினி தனது உலவாளியை அழைத்து ‘அவ்வளவு பெரிய படையை கொண்டிருக்கிறார்களா’ என்று கேட்டார். அப்போது உலவாளி சொன்னான். ‘இல்லை ஒரு 50, 60 பேர் இருப்பாங்க’ என்றான். முசோலினி கேட்டான். அப்ப அந்த ஊருக்கு தலைவன் இருக்கிறானா? உலவாளி ஆம். இளைஞனா? உலவாளி சொன்னான் ‘இல்லை 60, 65 வயது இருக்கும். முசோலினி அவர் என்னவாக இருக்கிறார்’ என்று கேட்டான். உலவாளி சொன்னான் அவர் ஆசிரியரா? அப்ப ஆபத்தானவர் என்று இரண்டாம் உலகப்போர் சமயத்தில் முசோலினி சொன்னவைகளை ஞாபகப்படுத்தி ஆசிரியர்களின் பெருமையை விளக்கி அவர்களுக்கு தலைமை தாங்கிய அதிபர்களை புகழ்ந்து உரையாற்றினார். மேலும் அதிபர்களது சேவை ஈருலகுக்கும் வெற்றி தரக் கூடியது என்பதையும் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு விளக்கி ஓய்வு பெற்ற அதிபர்களை மகிழ்வித்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்து வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் ஆசிப் சுக்ரி, பொருளாளர் டி. டி. எம். பிர்தௌஸ், அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் கே. எம். டீன், மாவட்டப் பணிப்பாளர்கள், திட்ட அதிகாரிகள், உப தலைவர்களான எம். ஆர்.எம். சியாட், உப தலைவர் அம்மார் ஷரீப், உப தலைவர் எம். பாசில் மற்றும் மாவட்டப் பணிப்பாளர்கள், கேகாலை மகளிர் பிரிவைச்சேர்ந்த பாரா தாஹிர் உட்படசில பெண்களும் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள வை. எம். எம். ஏ. கிளைகளின் முக்கியஸ்தர்கள், ஊடகவியலாளர் அமீர் ஹுஸைன் எனப் பெரு எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.

அம்மார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT