டிசம்பர் விடுமுறைக் காலத்திலும் நிம்மதியைத் தொலைத்த மாணவர்கள் | தினகரன்


டிசம்பர் விடுமுறைக் காலத்திலும் நிம்மதியைத் தொலைத்த மாணவர்கள்

கற்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல் என்றார் பேரறிஞர் பிளேட்டோ. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான சங்க இலக்கியங்களில் கல்வி பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது. 'இளமையிற் கல்' என்கிறது ஆத்திசூடி. 'கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே' என்றார் அதிவீரராம பாண்டிய மன்னன்.

பணக்காரப் பிள்ளைகள் பொருளாதாரத்தினால் பிறரை ஆள்வர். ஆனால் ஏழைப் பிள்ளைகளோ கல்வியால் மாத்திரமே பிறரை ஆள முடியும். 

தற்போது 2019ம் ஆண்டின் இறுதிக் காலம். இலங்கையிலுள்ள பாடசாலைகள் விடுமுறையால் மூடப்பட்டுள்ளன (க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிலையங்கள் தவிர்த்து).

புதிய கல்வியாண்டுக்குத் தயாராகின்றனர் மாணவர்கள். பிரத்தியேக வகுப்புக்களின்  துண்டுப்பிரசுரங்கள் வீடுகளின் கதவடிக்கு வந்து சேருகின்றன. இது இன்றைய நி​ைலவரம்.

பெருகி வரும் தனியார் வகுப்புகளுக்கு முன்னால் திரளும் மாணவர்களின் எண்ணிக்கை எகிறிக் கொண்டே செல்கின்றது. கட்டவிழ்த்து விட்டாற் போல்  பிரத்தியேயக வகுப்புகளை நோக்கி மாணவர்கள் படையெடுக்கும் போது அவர்கள் ஏனைய செயற்பாடுகளுக்கு ஒதுக்கவேண்டிய நேரம் சூறையாடப்படுகின்றது.

பிரத்தியேக வகுப்பு எனும் வணிகத்தினால் பெற்றோர் மட்டுமல்ல மாணவர்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர். விரும்பியோ, விரும்பாமலோ அதற்கு அடிபணிய வேண்டிய நிலைமை எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. பாடசாலையில் நிகழ்த்தப்படும் பரீட்சையைத் தவிர பட்டறிவு என்கிற விடயம் இல்லாமல் போயுள்ளது. 

தேசிய கல்வி ஆணைக்குழுவின் ஆய்வொன்றின் முடிவின்படி பிரத்தியேக வகுப்புகள் காரணமாக மாணவர்கள் உடல், உளப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகச் சொல்லப்படுகின்றது. மாணவர்கள் பிரத்தியேக வகுப்புகளுக்கு நாடுவது பற்றிய விபரம், அதற்கான காரணங்கள், காரணிகளை கண்டறிதல், பிரத்தியேக வகுப்பு சார்பாக மேலெழும் சமூகப் பிரச்சினைகளை இனங்காணல் என்ற நான்கு விடயதானங்களை மையப்படுத்தியே குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆய்வுகள் முடிவுகளை வெளிப்படுத்தியதே அன்றி மக்களை விழிப்படையச் செய்யவில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை இரு பெரும் துறைகள் வர்த்தக மையத்தை நோக்கி நகர்த்தப்படுகின்றன. ஒன்று மருத்துவம், மற்றையது கல்வி. இவை இரண்டும் இந்நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் இவை பெரும் வியாபாரமாக மாற்றப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலை மேலெழுந்துள்ளது. எதிர்காலத்தில் இவை முற்றுமுழுதாக தனியார் துறைக்கு கைமாறி விடுமோ என்கிற அச்சம் உள்ளது.

இந்த ஆய்வில் 10ம் தர மாணவர்கள் ஒரு பாடத்துக்கு 325ரூபாவினையும், உயர்தர மாணவர்கள் 425ரூபாவினையும் செலவிடுவது மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை விட பிரத்தியேக, குழு வகுப்புக்கள் என்பவற்றுக்கு அதிகளவான பணம் செலவிடப்படுவது குறிப்பிடத்தக்கது. 10ம் தரத்தைச் சேர்ந்த மாணவர்கள் மொத்தமாக பத்துப் பாடங்களுக்குமாக மாதாந்தம் ஆகக் குறைந்தது 250மில்லியன் ரூபாவையும், உயர்தர வணிகப் பிரிவு மாணவர்கள் 80மில்லியன் ரூபாவையும், கலைப் பிரிவு மாணவர்கள் 110மில்லியன் ரூபாவையும், கணிதப் பிரிவினர் 75மில்லியனையும் மாதாந்த பிரத்தியேக வகுப்புக்காக செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பிரத்தியேக வகுப்புக்குச் செல்லும் மாணவர்களிடையே ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது.

 போதைப் பாவனை, சமூக பண்பாட்டு விரோதச் செயல்கள் நிகழ்தல்,பாலியல் துஷ்பிரயோகம்,  மிரட்டல்களுக்கு உட்படல் அல்லது பலவந்தப்படுத்தல் போன்ற பிரச்சினைகள் எழுகின்றன. இதனால் உளரீதியிலான சிக்கல் நிலைக்கு மாணவர்கள் முகம் கொடுப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பிரத்தியேக வகுப்புக்கான முக்கியத்துவம் மேலெழும் போது நேரத்துக்கு உணவு உண்ணாமை, சமநிலையான நிறையுணவுகளை உட்கொள்ளாமை, விரைவுணவுகளுக்கு மாணவர்கள் பழக்கப்படல் என்பன அதிகமாக நிகழ ஆரம்பித்துள்ளன. இதனால் உடல் ரீதியிலான சோர்வு நிலைக்கு ஆளாவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி அற்றுப் போவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  ஓய்வும், விநோதமும் குறைவடைகின்றன. உடற்பயிற்சி, விளையாட்டு இல்லாமல் போகின்றது, அதிக களைப்புள்ளவர்களாக மாணவர்கள் மாற்றமடைகின்றனர் என மேலும் அந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.

இவ்வாறான பிரச்சினைகளை அடையாளம் கண்ட தேசிய கல்வி ஆணைக்குழு இவற்றுக்கு மிக முக்கியமான காரணிகளையும் கண்டறியத் தவறவில்லை. வெறுமனே பரீட்சையை மட்டும் மையப்படுத்தி அதனூடாக பாடசாலையில் நடைபெறும் செயற்பாடுகளினால் பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதனால் மாத்திரமே பரீட்சையில் சித்தியடைய முடியும் என்கிற நம்பிக்கை மேலோங்கச் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கை அமுலில் இல்லாமை, இதனால் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை எழுச்சி பெற்றிருத்தல் போன்ற காரணிகள் முதன்மை வகிக்கின்றன. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் பல விடயங்களை ஆணைக்குழு முன்வைத்திருந்தது.  அதன் ஒருபடியாகவே பாடசாலைகளில் அடைவுமட்டங்களை விருத்தி செய்வதற்கு மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலைகள் இருந்த போதிலும் பிரத்தியேக வகுப்புக்கான தாகம் மாணவர்களிடையே தணியவில்லை. அத்துடன் அதன் பெருக்கமானது பல்கிப்பெருகியே செல்வதனையும் கண்டுகொள்ள முடிகின்றது.

சாதாரண தரம் மற்றும் உயர்தரம் போன்று போட்டி மிகுந்ததாக ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மாறியுள்ளது. அத்துடன் 6,7,8வரையும் பிரத்தியேக வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையை மையப்படுத்தி 2,3,4ம் தர மாணவர்களுக்கும் பிரத்தியேக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு கணிதம், ஆங்கிலம் என்பன சூடுபிடித்திருப்பது புதுமையான விடயமாக தோன்றுகின்றது.

அவசர வாழ்க்கைக்குள் மாணவர்களும் அகப்பட்டுள்ளதே வேதனையான விடயம். காலையில் பாடசாலை... அது முடிந்த கையோடு பிரத்தியேக வகுப்பு. அதன் பிற்பாடு வேறு (ஆங்கிலம், கணிதம்) பாடங்களுக்கான தனிப்பட்ட ரீதியிலான வகுப்புக்கு செல்லல் என ஏராளமான கல்வி நடவடிக்கைக்கே நேரங்களை தத்தமது பிள்ளைகள் செலவிட வேண்டும் என பெற்றோரும் விரும்புகின்றனர்.

வருடம் தோறும் டிசம்பர் மாதம் ஆகிவிட்டால் எல்லோரும் தத்தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதுக்கு ஆயத்தமாவர். அதனை விட பிரத்தியேக கல்வி நிலையங்களில் அலைவதனையும் காண முடிகின்றது. இவ்வாறான நிலையில் பிரத்தியேக வகுப்புக்கு தங்களது பிள்ளைகளை அனுப்பாத பெற்றோரும்  கணிசமானோர் இருக்கின்றனர். அனுப்பாமைக்கு பல காரணங்கள் புதைந்து கிடக்கின்றன. இவற்றை ரியூசன் ஆசிரியர்கள் கவனத்திற் கொள்வதில்லை.

சிலவேளைகளில் பிரத்தியேக வகுப்புக்கு வருகை தராத மாணவர்களைக் கண்டிக்கின்ற ஆசிரியர்களும் உள்ளனர். பாடசாலை நேரங்களில் அர்ப்பணிப்புடன் கற்பிக்காத பல ஆசிரியர்கள் பிரத்தியேக வகுப்புக்களில் தங்களது திறமை, ஆற்றல்களை சந்தைப்படுத்தும் இடமாக மாற்றிக் கொள்கின்றனர். அரச துறையில் பணியாற்றுவோருக்கான ஊதியம் மக்களது வரிப்பணத்தில் இருந்து கிடைக்கின்றது என்கிற சிந்தனையை தொலைத்தே அதிகம் பேர் வாழப் பழகி விட்டனர்.

பிள்ளைகளின் உளவிருத்தியை வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர்கள், உள அழுத்தத்தை உண்டுபண்ணுவதாக பெற்றோர் சுட்டிக்காட்டுகின்றனர். ஏதாவது செய்து தன்னை பிரத்தியேக வகுப்புக்கு அனுப்ப வேண்டும் என்று அடம்பிடிக்கும் மாணவர்கள் அதிகம். பிரத்தியேக வகுப்பு இல்லை என்றால் கல்வி இல்லை என்ற நிலை இன்று உருவாகி விட்டதாக பிள்ளைகளின் பெற்றோர் அங்கலாய்க்கின்றனர்.

விடுமுறை இல்லாமல் மாணவர்களின் இளமைப் பருவம் துன்பமாக்கப்படுகிறது. அத்தனை நேரத்தையும் அவர்கள் வகுப்பிலே செலவிட வேண்டியுள்ளது. இவ்வாறான நிலைகளில் இருந்து மாணவர்களை விடுவிக்கும் பொருட்டு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக பிரத்தியேக வகுப்புக்கான தடை டிசம்பர் மாதத்தினை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காத்தான்குடி நகரசபை, கல்முனை மாநகரசபை மற்றும் பொத்துவில் பிரதேச சபை என்பன இந்த தனியார் கல்விக்கு தடை போட்டு மாணவர்களின் உள விருத்தியினை மேம்படுத்த எடுத்துக் கொண்ட நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியதே என்கிற குரல்கள் சமூக ஒழுங்கில் இருந்து வராமலில்லை.

றிசாத் ஏ காதர்
ஒலுவில் மத்திய விசேட நிருபர்


Add new comment

Or log in with...