பிளாஸ்ரிக் பொருட்களால் சமுத்திரம் மாசடைவதை தடுக்க யு.எஸ்.எயிட் உதவி | தினகரன்


பிளாஸ்ரிக் பொருட்களால் சமுத்திரம் மாசடைவதை தடுக்க யு.எஸ்.எயிட் உதவி

ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரமைப்பு (USAID) சுத்தமான நகரங்கள், நீல சமுத்திரங்கள் திட்டத்தை கொழும்பு மற்றும் மாலைதீவில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது.

கடலானது பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைதலை மட்டுப்படுத்துவதற்காக 1.2மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முன்னெடுப்பொன்று அமெரிக்க அரசாங்கத்தின் மாநகர கழிவு மீள்சுழற்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது.இதுனுடன் பணியாற்றும் பல்வேறு பங்காளர்களின் ஒன்றுகூடலுடன் கொழும்பில் செயலமர்வு நடைபெற்றது. இந்த செயலமர்வின் போதே இத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

சமுத்திரங்களில் காணப்படும் பிளாஸ்டிக்கை மட்டுப்படுத்தும் இந்த முதன்மை முன்னெடுப்பில் அண்மையில் இணைந்து கொண்ட நாடுகளாக இவை காணப்படுகின்றன. இத் திட்டமானது 48மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய ஐந்தாண்டு உலகளாவிய முன்னெடுப்பாகும்.

திண்மக் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கும், நதி மற்றும் கடலோரப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்தல், மீள்பயன்பாடு, மற்றும் மீள்சூழற்சி (3R)ஆகியவற்றுக்கு இதனூடாக உதவியளிக்கப்படும்.

இத் திட்டமானது இலங்கை மற்றும் மாலைதீவுகளில் 3Rகளை ஊக்குவிக்கும் என்பதுடன், மீள்சூழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்பில் உள்ளூர் மற்றும் பிராந்திய சந்தைகளை பலப்படுத்தும். சமுத்திரம் மற்றும் ஏனைய நீர் வளங்களுக்கு பிளாஸ்டிக் சென்றடைவது ஆபத்தான மட்டங்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் சுற்றாடல் வளங்களைப் பாதுகாக்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு அமெரிக்கா பங்களிப்பு செய்துகொண்டிருக்கிறது என்று யு.எஸ்.எயிட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிப்பாளர் ரீட் எஸ்லிமென் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...