வைத்தியர் ஷாபியின் கோரிக்கை நீதிமன்றில் மறுப்பு | தினகரன்


வைத்தியர் ஷாபியின் கோரிக்கை நீதிமன்றில் மறுப்பு

வைத்தியர் ஷாபியின் கோரிக்கை நீதிமன்றில் மறுப்பு-Courts rejected Dr Shafi Shihabdeen's request rejected-Case Adjourned Till Jan 16

ஷாபிக்கு எதிரான வழக்கு; தேவையேற்படின் மீள விசாரிக்க அனுமதி
புலனாய்வு பிரிவின் புதிய பணிப்பாளர் இன்று நீதிமன்றில் முன்னிலை
வழக்கு ஜனவரி 16 வரை ஒத்திவைப்பு

குருணால் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கின் சாட்சியங்களில் முரண்பாடு காணப்படுமாயின் மீள வாக்குமூலம் பெறுவதற்கு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் மீது, முறையற்ற வகையில் சொத்து சேகரித்தமை, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், தாய்மார்களை சட்டவிரோதமாக குடும்பக் கட்டுப்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு இன்று (12) குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நீதவான் சம்பத் ஹேவாவசம் இவ்வுத்தரவை வழங்கினார்.

அத்துடன் பிணை நிபந்தனைகளுக்கு இணங்கி நடக்குமாறு வைத்தியர் ஷாபி அறிவுறுத்தப்பட்டதோடு, அவர் விடுத்த கோரிக்கையொன்றையும் நீதிமன்றம் நிராகரித்தது.

கட்டில் எண்ணை மாற்றி குழந்தை விற்றதாக குற்றச்சாட்டு
இதன்போது குற்றப் புலனாய்வு பிரிவின் புதிய பணிப்பாளர் பீ.டபிள்யூ. திலகரத்ன இன்று (12) முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நீதிமன்றத்தில் ஆஜரான திலகரத்ன, கட்டில் எண்ணை மாற்றியதன் மூலம் ஒரு குழந்தையை விற்றதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் நீதிமன்றில் அறிக்கை அளிப்பதாகக் தெரிவித்தார்.

சாட்சியங்களை மீள விசாரிக்க அனுமதி
இதேவேளை, குற்றப் புலனாய்வு திணைக்களம் மட்டத்தில் ஏதேனும் முறைகேடு ஏற்பட்டிருந்தால், அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, குறிப்பிட்ட அவர், தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்பதால், குறைபாடுகளுடனான சாட்சியங்கள் தொடர்பில் விசாரணைகளை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர், எனவே பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் குற்றச்சாட்டுகள் குறித்து சாட்சியங்களை மீண்டும் பெற நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

வழக்கின் நடவடிக்கைகள் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்படும் என்றும், பாதிக்கப்பட்டோரால் முன்வைக்கப்பட்ட, குற்றம் சாட்டப்பட்டவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் சொத்துகள் மற்றும் வருமானம் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் இதன்போது நீதிமன்றில் தெரிவித்தார்.

வைத்தியர் ஷாபி கோரிக்கை
இதன்போது, பிரதிவாதியான வைத்தியர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவிக்கையில், தனது கட்சிக்காரருக்கு பிணை வழங்கும்போது நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின் பேரில் அவர், ஒவ்வொரு மாதமும் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். எனவே அவரது வசதிக்காக மட்டக்களப்பிலுள்ள சிஐடி அலுவலகத்தில் ஆஜராக அனுமதி தருமாறு கோரிக்கை விடுத்தார்.

ஷாபியின் கோரிக்கை மறுப்பு; எச்சரிக்கை
குறித்த கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த குற்றவியல் விசாரணைத் திணைக்கள அதிகாரிகள், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும், பிரதிவாதி ஏற்கனவே இரண்டு சந்தர்ப்பங்களில் பிணை நிபந்தனைகளை மீறியுள்ளதாகவும் கூறினர். 

அதற்கமைய, பிணை நிபந்தனைகளுக்கு இணங்குமாறு நீதவான் பிரதிவாதிக்கு உத்தரவிட்டதோடு, குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 16ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட வைத்தியர் சார்பில் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி, நவரத்ன பண்டார உள்ளிட்டோர் ஆஜரானதோடு, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன், சட்டத்தரணி கல்யாணந்த திராணகம உள்ளிட்ட குழுவினர் முன்னிலையாகியிருந்தனர்.


Add new comment

Or log in with...