Saturday, April 20, 2024
Home » இந்திய மருந்து உற்பத்தியும் எதிர்கொள்ளும் சவால்களும்

இந்திய மருந்து உற்பத்தியும் எதிர்கொள்ளும் சவால்களும்

by Rizwan Segu Mohideen
February 27, 2024 10:52 am 0 comment

“உலகின் மருந்தகம்” என்று அண்மைய காலங்களில் இந்தியா அழைக்கப்படுவதற்கு இந்திய சுகாதாரத் துறை ஈட்டிய உலகளாவிய நம்பிக்கை வழிவகுத்துள்ளது” என்று மருந்துத் துறையின் உலகளாவிய புதுமைகள் என்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு போது கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் மருந்து உற்பத்தித் துறை உலகளாவிய ரீதியில் உயர்ந்துள்ளதுடன், சுகாதாரத்துறையின் அதிக கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவின் விடா முயற்சியும் பல ஆண்டுகளாக அது உருவாக்கியுள்ள நற்பெயரும் அந்நாட்டை மருந்து உற்பத்தித் துறையில் ஓர் அதிகார மையமாக மாற்றி வருகிறது.

இந்தியா மருந்து உற்பத்தித் துறையில் பெற்றுள்ள நற்பெயருக்கும், அடைவுகளுக்கும் அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக அது மருந்து தயாரிப்புகளின் தரங்களைப் பேணுவதற்கு கொண்டிருக்கும் தீவிர அர்ப்பணிப்பே காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியா உயர்தரமான மருந்துகளை, மலிவு விலையில் தயாரித்து வழங்குவதில் நம்பகத்தன்மையையும் பெற்றுள்ளது.

இந்தியாவின் மருந்து உற்பத்தித்துறை, உலகளவில் வணிகப் பெயர்களில்லாத “ஜெனரிக்” மருந்துகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும் மிகப்பெரிய தொழிற்துறையாகும். உலக அளவில் மருந்து உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 3,000 மருந்து நிறுவனங்களை இந்த தொழில்துறை உள்வாங்கியிருக்கிறது.

ஜெனரிக் மருந்துகளின் உலகளாவிய ஏற்றுமதியில் சுமார் 20% வீதத்தை இந்த இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன. இந்திய மருந்துத் துறையின் சந்தை வளர்ச்சி 2024-ல் 65 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 2030-க்குள் 130 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இத்துறை வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள இந்திய மருந்து உற்பத்தித்துறை, உலகெங்கிலும் உள்ள ஜெனரிக் மருந்துகளுக்கான அதிகரித்துவரும் தேவை உள்ளிட்ட பல காரணிகளால் 1970கள் மற்றும் 1980களில் வேகமாக வளர்ச்சிப் பெற தொடங்கியது.

இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO – The Central Drugs Standard Control Organisation), உலக சுகாதார அமைப்பு (WHO), மற்றும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA – The United States Food and Drug Administration) போன்ற அமைப்புகளின் வழிகாட்டுதல்களின் கீழ் இந்திய மருந்து தயாரிப்புத் துறை இயங்குகிறது. இத்தகைய வழிகாட்டுதல்கள் இந்திய மருந்து தயாரிப்புகளை தரமானதாக மாற்றியுள்ளதோடு, சர்வதேச சந்தைகளில் இந்திய மருந்துகள் மீதான நம்பகத்தன்மையையும் உருவாக்கியிருக்கிறது.

இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்யும் ஒவ்வொரு மருந்து உற்பத்தி நிறுவனமும் உலக சுகாதார நிறுவனத்தின் ‘நல்ல உற்பத்தி நடைமுறைகள்’ (World Health Organisation – Good Manufacturing Practices) எனும் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமது உற்பத்திகளை செய்து வருகின்றன.

நாளுக்கு நாள் மருந்து உற்பத்தியில் உலகளாவிய சக்தியாக உருவெடுத்திருக்கும் இந்தியா, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு மிக மலிவு விலையில் மருந்துகளை வழங்கி வருகிறது.

மருந்து உற்பத்தித் துறையில் இந்தியா அடைந்துள்ள இந்த வெற்றி, உலகின் ஏனைய நாடுகளில் உள்ள “மருந்து மாஃபியா” கும்பல்களை அதிர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது.

மலிவான விலையில் மக்களை இலகுவாக சென்றடையும் இந்திய மருந்து உற்பத்திகளை தமக்கு ஏற்பட்டுள்ள சவால்களாக பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பார்க்கின்றன. இந்திய மருந்து நிறுவனங்களின் இந்த அதீத வளர்ச்சி, பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு சவாலாகி இருப்பதோடு, நோயாளிகளை சுரண்டி அதிக லாபத்தையும் ஈட்டும் மருந்து நிறுவனங்களின் சந்தை வாய்ப்புகளுக்கும் இடையூறாக இருந்து வருகிறது.

இந்திய மருந்து உற்பத்தியாளர்கள், வர்த்தக பெயர்களில் விற்பனையாகும் (Brand Name) மருந்துகளுக்கு மாற்றீடாக மலிவான விலையில் ஜெனரிக் மருந்துகளை உற்பத்தி செய்து விநியோகித்து வருகின்றனர். இந்த வர்த்தக போட்டியை பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தமக்கேற்பட்டுள்ள சவாலாக பார்க்கின்றன.

இதற்கு பதிலடியாக, நோயாளிகளை சுரண்டி வாழும் “ மாஃபியா” நிறுவனங்கள், இந்திய மருந்துகள் தொடர்பாக தவறான தகவல்களை உலகம் முழுவதும் பரப்பும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றன. இதன் மூலம் இந்திய மருந்துகளின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகளாவிய மருந்து தயாரிப்புத் துறையில், இந்தியாவின் மருந்துகளுக்கு கிடைத்து வரும் நற்பெயரையும், மலிவு விலையில் அது மக்களுக்கு சென்றடையும் விநியோக சங்கிலியை தகர்ப்பதையும் களங்கப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு மோசமான சதியாக இது பார்க்கப்படுகிறது.

இந்திய மருந்துகள் தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் எதிர்மறையான தலைப்புச் செய்திகள், இந்திய மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து சந்தேகங்களை திட்டமிட்டு மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையை அடிப்படையாகக் கொண்டவையா அல்லது இந்திய மருந்துகளை இழிவுபடுத்தும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்ட கதையின் ஒரு பகுதியா? என்பதை தேடிப்பார்ப்பது வாசகர்களின் கடமையாகும்.

இந்திய மருந்துகளுக்கு எதிரான பிரச்சாரத்தின் பின்னணியில் நோயாளிகளை சுரண்டி, அதிக லாபமீட்டி வயிறு வளர்க்கும் “மருந்து மாஃபியா” நிறுவனங்கள் பின்னணியில் செயற்பட்டு வருகின்றன.
இந்திய மருந்துகளைச் சுற்றி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் சதி கோட்பாடுகள் பெரும்பாலும் ஆதாரமற்றவையாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பல்தேசிய மருந்து நிறுவனங்களின் புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் வணிக நலன்களும் இதன் பின்னணியில் இருக்கின்றன.

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு மலிவான மற்றும் உயர்தர மருந்துகளை வழங்குவதன் மூலம் இந்திய மருந்து நிறுவனங்கள் உலகளாவிய சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகின்றன.

இந்திய உற்பத்திகளான ஜெனரிக்ஸ் மருந்துகள் மீதான பன்னாட்டு மருந்து வணிக நிறுவனங்களின் காழ்ப்புணர்வு ரீதியான செயற்பாடுகளுக்கு மத்தியில், மக்களின் பாதுகாப்பையும், மலிவான விலையையும் ஊக்குவிக்கும் நோக்கில் செயற்படும் இந்திய நிறுவனங்களின் செயற்பாடு போற்றப்பட வேண்டும்.

வணிக நோக்கில் மக்களை சூறையாடும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் சதிக்கோட்பாடுகள், உலகெங்கிலும் உள்ள ஜெனரிக் மருந்துகளுக்கான கேள்வியை ஒரு புறம் அதிகரிக்கச் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக, பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கும் இந்திய மருந்து உற்பத்திக்கும் இடையேயான வர்த்தக போட்டிகள் சிக்கலானதாக இருக்கின்றன.

மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு வணிக ரீதியில் பெயர்கள் வைக்கப்பட்டு தயாரிக்கப்படாத ஜெனரிக்ஸ் மருந்துகள் எதிர்வரும் காலங்களில் மக்கள் மத்தியில் இடம் பிடிக்கும் என்றும் இந்த மருந்து உற்பத்தித் தொழில்துறை தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– ஆதவன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT