ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படாது | தினகரன்

ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படாது

ஊடக நிறுவன தலைவர்களிடம் ஜனாதிபதி உறுதியளிப்பு

நாட்டின் ஊடக சுதந்திரத்திற்கு தனது ஆட்சிக்காலத்தின்போது எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என உறுதியளிப்பதாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்தார்.

எந்தவொரு நியாயமான விமர்சனத்திற்கும் இடமுள்ளதென்றும் நாட்டுக்கும் நாட்டின் நற்பெயருக்கும் ஏற்றவகையில் ஊடகப் பணியில் ஈடுபட்டு, ஊடகங்களின் மூலம் நாட்டுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்குமென தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பில் ஜனாதிபதிக்கும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் நாட்டின் ஜனாதிபதியாக தன்னை தெரிவு செய்துள்ளனர். அரசியல்வாதிகளினதும் அரச அதிகாரிகளினதும் வினைத்திறனை அதிகரித்தல், ஊழலை ஒழித்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பன அவற்றில் முக்கியமானவையாகும். இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பு தனக்கு குறைவின்றி கிடைக்குமென்று ஜனாதிபதி  இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

முதலீடு மற்றும் பொருளாதார தொடர்புகளை சர்வதேச ரீதியாக கட்டியெழுப்புவதற்கு நாட்டின் பிரதிமையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானதாகும். எனவே நாட்டின் பிரதிமையை கட்டியெழுப்புவதிலும் ஊடகங்களுக்கு விரிவானதொரு பொறுப்பு உள்ளதென்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கடந்த சில நாட்களாக பேசப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி ஒருவருடன் சம்பந்தப்பட்ட விடயத்தில் நாட்டின் ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்டார்.

சர்வதேச ஊடகங்கள் தேவையற்ற வகையில் அந்த நிகழ்வை ஊதி பெருப்பிக்க மேற்கொண்ட முயற்சி குறித்து கவலை வெளியிட்ட ஜனாதிபதி, அதனை சரி செய்யக்கூடிய இயலுமை எமது நாட்டு ஊடகங்களிடம் உள்ளதெனத் தெரிவித்தார்.

நகரங்களை அழகுபடுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுவரோவியம் வரையும் நடவடிக்கை குறித்து இதன்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அது எவரினதும் கோரிக்கையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று அல்ல என்றும், நாட்டை நேசிக்கும் இளைஞர்களிடையே உருவான ஆக்கத்திறன் சார்ந்த ஒரு நிகழ்ச்சித்திட்டமாகும் எனக் குறிப்பிட்டார். எவ்வாறானபோதும் நாட்டை நேசிக்கும் அக்குழுவினர்களை வலுவூட்டுவதற்காக ஊடகங்களின் பங்களிப்பு குறைவின்றி கிடைக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...