எதிர்வரும் பொதுத் தேர்தலில் 113 இலக்கை பெறுவது உறுதி | தினகரன்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் 113 இலக்கை பெறுவது உறுதி

எதிர்வரும் பொதுத் தேர்தலை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொள்ளப் போவதாகவும் அதன் மூலம் 113இலக்கை இலகுவாகப் பெற முடியும் என்றும் ஐ.தே.க. பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கட்சிக்குள் பல்வேறு கருத்துக்கள் நிலவியபோதும் அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார்.

ஐ.தே. க தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறுகையில்,

சுவிஸ் தூதரக பெண்மணி தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முடிந்ததும் அது தொடர்பில் நாம் தெரிவிப்போம்.

எமது கட்சியினர் அவர்களுக்குக் கிடைத்த தகவல்களுக்கு இணங்கவே சில விடயங்களை முன்வைத்தனர். எமது கட்சியின் வெற்றிக்காக நாம் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம். எதிர்வரும் தேர்தல்களில் நாம் வெற்றிபெறுவது முக்கியம். அந்த நிலையில் நாம் எமது உள்ளக பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம்.

தேர்தலை வெற்றிக்கொள்வதற்காக நாம் முழு மூச்சுடன் செயற்படுவோம். அரசாங்கத்திடம் உள்ளது போன்றே எமது கட்சிக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

நாம் அதனைத் தீர்த்துக்கொள்வோம். கடந்த தேர்தலில் 55இலட்சம் வாக்குகளை நாம் பெற்றோம். சில ஊடகங்கள் சரியாக செயற்பட்டிருந்தால், நாம் வெற்றி பெற்றிருக்கலாம். அடுத்துவரும் தேர்தலில் எவ்வாறு செயற்படுவது மற்றும் கட்சித் தலைவர் நியமித்தல் தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அந்த குழுவின் தீர்மானத்திற்கிணங்க செயற்படவுள்ளோம்.

கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவும் செயற்படுவர். அவர், சஜித் பிரேமதாச எமக்கு வழிகாட்டியாக இருப்பார் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...