வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் மழை | தினகரன்


வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் மழை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான காலநிலை தொடர்வதால்  40,991குடும்பங்களைச் சேர்ந்த 13,917,3பேர் பாதிப்படைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களே வெள்ளப் பாதிப்புக்கு அதிகம் முகங்கொடுத்து வருவதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரக்கூடுமென்பதுடன், சிறிதளவு குறைவடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பி.ப. 1.00மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 -– 100மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 4,70,004குடும்பங்களைச் சேர்ந்த 1,60,690பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளாதகவும் தொடர்ந்து 4198பேர் இடை தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவானோர் வெள்ளப் பெருக்கால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் 13,284குடும்பங்களைச் சேர்ந்த 42,782பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் 27,707குடும்பங்களைச் சேர்ந்த 96,391பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குராங்கெத பிரதேசங்களுக்கு மாத்திரமே மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்வதாக தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இழப்பீடுகள் தொடர்பிலான மதிப்பீடுகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...