அடை மழையால் அம்பாறையில் 1,020 ஹெக். வயல்கள் நாசம் | தினகரன்


அடை மழையால் அம்பாறையில் 1,020 ஹெக். வயல்கள் நாசம்

அம்பாறையில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக சுமார் ஆயிரத்து 20ஹெக்டெயார் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட பிரதி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் தெரிவித்தார்.

105ஹெக்டெயாரில் உப உணவு பயிர்ச் செய்கையான சோளம், கச்சான் என்பன பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பெய்துவரும் அடைமழை  காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உகன, தமண, ஆலையடிவேம்பு, திருக்கோவில், அம்பாறை, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர் ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் 21,938குடும்பங்களைச் சேர்ந்த 74,290பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பெய்துவரும் மழையினால் அநேகமான உள் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, உள்ளூர் போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வாய்க்கால்களில் நீர் பெருக் கெடுத்துள்ளன. மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்கொண்டுள்ளனர். மாலை வேளையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்கின்றது. கடல் கொந்தளிப்பாக இருப்பதனால் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் கடற்றொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

நன்னீர் மீன்பிடித் தொழிலும் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளதுடன் அன்றாட தொழிலாளர்களின் நாளாந்த தொழில் நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளன.

சில பிரதேசங்களில் வடிகான்கள் துப்பரவு செய்யப்படாமலுள்ளதால் மழை நீர் வடிந்தோட முடியாத நிலை காணப்படுகின்றது.  மழைநீர் தேங்கியுள்ள வடிகால்களை துப்பரவு செய்து நீர் வடிந்தோட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினாலும், உள்ளூராட்சி மன்றங்களினாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு வாய்க்கால்கள் மற்றும் தோணா என்பவற்றை துப்பரவு செய்வதற்காக 11 பிரதேச செயலாளர்களுக்கு தலா 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது வாய்க்கால்கள், வடிகான்கள் மற்றும் தோணா என்பன துப்பரவு செய்யப்பட்டு வருவதாகவும், அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க குறிப்பிட்டார்.

ஒலுவில் விசேட நிருபர்


Add new comment

Or log in with...