Friday, March 29, 2024
Home » கண்டி விவேகானந்தா கல்லூரியில் முப்பெரும் விழா; பிரமுகர்கள் கௌரவிப்பு

கண்டி விவேகானந்தா கல்லூரியில் முப்பெரும் விழா; பிரமுகர்கள் கௌரவிப்பு

by sachintha
February 27, 2024 9:53 am 0 comment

கண்டி விவேகானந்தா கல்லூரியில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை புதிதாக இணைத்துக் கொள்கின்ற தேசிய நிகழ்வும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களைக் கௌரவித்தல் மற்றும் சான்றோர்களை கௌரவித்தல் தொடர்பான முப்பெரும் விழா கல்லூரி அதிபர் எஸ். சிவஞானசுந்தரம் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ. ஆர். சத்தியந்திரா கலந்து கொண்டு சிறப்பித்தார். இதன்போது அவர் ஓய்வு பெற்றுச்செல்வதையொட்டி பாடசாலை சமூகத்தினால் அவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அத்துடன் மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன், தொழிலதிபர் முத்தையாப் பிள்ளை ஸ்ரீகாந்தன், தொழிலதிபர் சிட்டி டெக்ஸ் உரிமையாளர் எம். சுந்தரமூர்த்தி, கலைஞர் ராஜா ஜேகின்ஸ், பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

இதில் புதிய வகுப்புக்கு இணைந்து கொண்ட பாடசாலைப் பிள்ளைகளின் பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெரு எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முதலாம் தர மாணவர்களுக்கு இரண்டாம் தர மாணவர்களால் பூக்கொத்துக் கொடுத்து வரவேற்றதுடன் அம்மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், விசேட பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதம அதிதியான மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ. ஆர். சத்தியந்திரா தனது உரையில்;

இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் முதலாம் ஆண்டு மாணவர்களை முறையாகப் பாடசாலைக்கு உள்வாங்கும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து முதலாம் தர மாணவர்களும் இன்று கதாநாயகர்களாக பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்படுகின்றார்கள். இதற்கு மிகப் பெரிய அர்த்தம் ஒன்று இருக்கிறது. இன்றைய தினம் அவர்கள் தரம் இரண்டு மாணவர்களால் பூக்கொத்து கொடுக்கப்பட்டு அன்பாக வரவேற்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டு இந்த சபையிலே அமர்த்தப்பட்டு பெரியோர் முன்னிலையில் ஆசிகள், வாழ்த்துக்கள் வழங்கப்பட்டு அவர்களுடைய கல்வி வாழ்க்கை இன்றைய தினம் ஆரம்பிக்கப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு வருடமும் முதலாம் தர மாணவர்களை உள்வாங்கும் போது மாணவர்களுடைய மனதிற்குள் புதிய மாணவர்களை உள்வாங்கும் போது ஓர் எண்ணம் ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றன.

இம்மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் தருணத்தில் உங்களுடைய மூத்த மாணவர்களால் இளைய மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்வு நடைபெறும். அன்றைய தினம் உங்கள் சகோதரர்களை இன்றைய தினம் போலவே எவ்வாறு அன்பாக எந்தவொரு கள்ளம் கபடமும் இல்லாமல் மனதுக்குள் எந்தவொரு எதிர் உணர்வும் இல்லாமல் அன்பாக உள்வாங்குகின்றீர்களோ அதே போன்று பல்கலைக்கழகத்திலும் புதிய மாணவர்கள் உள்வாங்க வேண்டும். அப்படி நடக்கிறதா? இல்லை. பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறும் மாணவர்கள் பலத்த பயத்துடனும் மனதிற்குள் நடுநடுங்கிக் கொண்டுதான் அநேகமான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லுகின்றார்கள்.

பகிடிவதை என்று நாம் எல்லோரும் அறிந்து இருக்கின்றோம். அந்த மாதிரி இல்லாமல் சிறு பராயத்தில் கடைப்பிடிக்கின்ற நல்ல பழக்க வழக்கங்கள் தொடர்ச்சியாக வர வேண்டும் என்ற அடிப்படையில் பிள்ளைப் பராயத்தில் இந்த உணர்வுகள் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டு பல்கலைக்கழகத்தினுள்ளேயும் இந்த மாதிரியான ஒரு சிநேகபூர்வமான ஒரு அன்பான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பூக்கொத்து வழங்கி வரவேற்பது என்பது ஒரு அழகான வரவேற்பு. எனவே அந்த அடிப்படையில்தான் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.

மனதில் பதியக் கூடிய வகையில் பாடசாலையின் முதல் அனுபவம் என்றைக்கும் நினைவுகூரக் கூடிய வகையில் இருத்தல் வேண்டும். அதற்காகவே இந்த வைபவம் மிகப் பிரமாண்டமான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு ஒவ்வொரு பாடசாலைகளிலும் இன்று தேசிய மட்டத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த செயற்திட்டத்தை அமுல்படுத்துவதையிட்டு அதிபர், ஆசிரியர் குழாம் ஆகியோர்களுக்கு எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னுடைய 40 வருட சேவையில் கடைசி எட்டு மணித்தியாலங்கள் என்று அதிபர் என்னை அறிமுகம் செய்தார். அதில் இரண்டு மணித்தியாலத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என எனக்கு விடுத்த அழைப்பை உங்களோடு பகிர்ந்து கொள்வதும் எனக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

விவேகானந்தா பாடசாலையுடன் ஏதோ எனக்கும் ஓர் உறவு இருக்கிறது. இங்கு வந்தால் மறக்க முடியாத அனுபவங்கள் அமைந்து விடும். நேர் மறையான அன்பான ஒரு மறக்க முடியாத நாளாகும்.

சத்தியந்திரா சத்தியந்திரா என்று என்னை எல்லோரும் அழைப்பார்கள். இது கணவரின் பெயர். ஆனால் நான் எனது அம்மா அப்பா வின் பெயரை இழந்து நிற்கிறேன் என்ற உணர்வு அடிக்கடி மனதில் வந்து கொண்டே இருக்கிறது. இங்கு அம்மா அப்பாவை நினைவுபடுத்திக் கூறும் போது ஓர் உணர்வு தானாகவே ஏற்படுகிறது. கணவரின் பெயர்தான் உச்சரிக்கப்படுகிறதே தவிர எனது அப்பா பெயர் உச்சரிக்கப்பட வில்லையே என்ற மன உணர்வு ஏற்படுகிறது. இது இப்போது அதிகம் வருகிறது. ஏனென்றால் நீங்களும் ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் இதைச் சொல்லுகின்றேன். இன்றைய தினம் பிள்ளைகளாகிய நீங்கள் அம்மா அப்பாவினாலேயே இங்கு வந்திருக்கிறீர்கள். கடந்த 10 நாட்களாக எனக்கு பிரியாவிடை வைபவம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரியான ஒரு நிகழ்வில் ஒரு பிரியாவிடை பைவம் நிறையப் பேர்களுக்கு கிடைப்பதில்லை. இம்மாதிரியான நிகழ்வில் எனது பிரியாவிடைப் பாராட்டுதலையும் வழங்கியமையிட்டு நான் அதைப் பெருமையாகக் கருதுகின்றேன்.

எதிர்காலத்தில் நல்ல பதவிகளையும் உயர் நிலைகளையும் அடையவுள்ள பிள்ளைகள் இந்தப் பதிவை கவனத்திற் கொள்ள வேண்டும். யாரும் நிறைவான சேவையைச் செய்து ஓய்வு பெறுவது என்பது கடவுள் கொடுக்கின்ற ஒரு வாய்ப்பு. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமூகத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள். அதில் நாங்கள் அதிகாரத்தையும் பலத்தையும் காட்டக் கூடிய களமில்லை இது. நாங்கள் மக்களுக்கு பொதுச் சேவை செய்வதற்குப் பணிக்கப்பட்டவர்கள். அந்தச் சேவைகளை மாணவர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ அதிகாரிகளுக்கோ வேண்டிய நேரத்தில் வேண்டிய சேவைகளைச் செய்வதுதான் எங்கள் கடமை. அது சரியாகச் செய்ய வேண்டும்.

எங்களது பெருமை அறிந்து சந்தோசப்பட்டுக் கொள்வதற்கும் எனது தாயும் தந்தையும் உயிரோடு இல்லை. அவர்களுடைய பாதங்களை மனதாரப் பூஜிக்கின்றேன். அவர்கள் என்னை இந்த இடத்திற் கொண்டு வருவதற்கு அவர்கள் பட்ட கஷ்டம் துன்பம் எல்லாவற்றையும் பெருமையாக நான் நினைக்கின்றேன். அம்மா அப்பாவுடன் வாழக் கிடைப்பது என்பது அது ஒரு வரம். ஆண்டு ஒன்றை பாரம் கொடுத்த அம்மா அப்பா இங்கு இருக்கின்றார்கள் எனில் மனதில் பெரிய ஆதங்கங்களோடும் கனவுகளோடும் பல இலட்சியங்களோடு வந்து உட்கார்ந்து இருப்பார்கள். பல இலட்சியங்கள் இல்லாத அம்மா அப்பா இங்கு வர மாட்டார்கள். இங்கு வந்து உட்கார்ந்துள்ள பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளை பெரிய நிலைக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். தாய் தந்தையர்களின் இலக்கு பிள்ளைகள்தான். பிள்ளைகளைச் சுற்றித்தான் அவர்களது வாழ்க்கை அமைகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தை நல்லபடியாகப் பயன்படுத்தி பொதுப் பரீட்சைகளில் நீங்கள் வெற்றிபெறுதல் வேண்டும். நல்ல மனிதாபிமானப் பண்புகள் பாடசாலைகளில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. நல்ல அதிபர் கிடைத்திருக்கிறார். நல்ல ஆசிரியர் குழாம் அமைந்திருக்கிறது. அவர்கள் நல்ல விசயங்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டேதான் இருப்பார்கள். விவேகானந்தா வித்தியாலம், விவேகானந்தா தமிழ் வித்தியாலம் அதன் பின் மகா வித்தியாலம். என்று பல பரிணாமங்களைக் கடந்து தற்போது விவேகானந்தா கல்லூரி என்ற நாமத்தையும் தோற்றத்தையும் அதன் கம்பீரத்தையும் பெற்று நிற்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டி விவேகானந்தாக கல்லூரியின் அதிபர் எஸ். சிவஞானசுந்தரம் உரையாற்றும் போது;

சத்தியந்திரா அம்மையார் மிக எளிமையானவர். அவர் தனது கல்வி நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஆளணியினரோடு மிகவும் சுமுகமான முறையில் உறவைப் பேணி வெற்றிகரமாக தடம் பதித்தவர். அவர் மலையகக் கல்வித் துறைக்கு மிகச் சிறப்பாக சேவையாற்றி இருக்கிறார். மலையகக் கல்வியில் மத்திய மாகாணம் மிக மிக பின்தங்கியிருந்த கால கட்டத்தில் கல்வி நிர்வாக சேவையாளராகக் கடமையேற்று பல்வேறு பணிகளைச் செய்து 20 விகிதத்திற்கு குறைவாக இருந்த க. பொ. த சாதாரண தரப் பெறுபேற்றை 75 க்கு மேல் உயர்த்த கடுமையாக உழைத்தவர். மலையகத்திற்கு பெரும் கல்விச் சேவை செய்த ஒரு பெரிய அம்மையார் இவர் ஆவார்.

மிகச் சிறந்த ஆளுமை மிக்கவர். அவர் நிர்வாக சேவையாளராகக் கடமையேற்ற ஆரம்ப கால கட்டத்தில் மிகப் பொருத்தமான அதிபர்களைத் தெரிவு செய்து அவர்களை நியமித்து அதன் ஊடாக சிறந்த பெறுபேறுகளைப் பெற்று மத்திய மாகாணத்திற்கே பெருமை சேர்த்தவர். அவர் இந்த மாதத்தில் ஓய்வு பெறயிருக்கிறார். அவருடைய சேவையைப் பாராட்டுவதில் கண்டி விவேகானாந்தாக் கல்லூரி பெருமைகொள்கிறது.

கல்வி உலகம் டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கின்றது. அந்த டிஜிட்டல் உலகத்தில் நாங்கள் வாழாது கரும்பலகை, வெண் கட்டியோடு நாங்கள் இருப்போமானால் கல்வி வளர்ச்சியிலே நிச்சயமாக பின்தங்கிய நிலையிலேதான் செல்ல வேண்டி இருக்கும். இந்த டிஜிட்டல் உலகிற்கு கொண்டு செல்வது எங்களுடைய வர்த்தகப் பிரமுகர்களும், சத்தியா அம்மணியும் மிக அரும்பாடுப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா காலத்தில் க. பொ. த சாதாரண பரீட்சைக் காலத்தில் சத்தியா அம்மையார் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் பாரியளவில் உதவி செய்துள்ளார்கள். இல்லா விட்டால் நாங்கள் இந்தளவுக்கு எழுச்சி பெற்று இருக்க முடியாது. ஆகவே எதிர்காலம் என்பது எங்களுடைய கல்வி வளர்ச்சியிலே தங்கியிருக்கப் போகிறது. எதிர்காலத் தலைவர்களாக இந்தச் சிறார்கள் இருக்கப் போகிறார்கள். இந்தச் சிறார்களுக்கு இன்றைய தினம் வாழ்த்துவதற்காகவும் அவர்களைப் பெருமைப்படுத்துவதற்காகவும் எங்களுடன் வருகை தந்திருக்கின்ற அனைத்து நல்லுள்ளங்களையும் வரவேற்று விடைபெறுகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் வர்த்தக சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் ஏ. தட்சனாமூர்த்தி உரையாற்றும் போது;

இன்றைய மகிழ்ச்சியான நாளில் இந்தச் சிறார்களை அன்புடன் மனமுவந்து வரவேற்கின்றோம். இந்தச் சிறார்கள் இப்பாடசாலையில் பல வருடங்கள் கல்வி பயிலப் போகின்றார்கள். இவர்கள்தான் வருங்காலத் தலைவர்கள். எமது தலைவர்களை உருவாக்குகின்ற தளமாக பாடசாலை அமைகின்றது. எனவே இன்று இப்பாடசாலையில் இணைந்து கொண்ட அத்தனை மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த வருடம் ஐந்தாம் வருட புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் இங்கு அணிவிக்கப்பட்டன. அந்தப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கும் அந்த மாணவர்களை ஊக்குவித்த ஆசிரியைகளுக்கும் எங்களது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேபோன்று, க. பொ. த சாதாரணப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் நடைபெறயிருக்கின்றது. அந்த வகையில் இப்பாடசாலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும், அருகிலுள்ள பாடசாலையான இந்து சிரேஷ்ட பாடசாலைப் பிள்ளைகளும் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தற்போது ஆசிரியர்களும் பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்பரீட்சைக்குத் தோற்றுகின்ற பிள்ளைகள் இப்பொழுது இருந்து ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கடைசி நேரத்தில் ஆயத்தப்படுத்த வேண்டும். இன்னும் 60 நாட்கள்தான் இருக்கின்றன. அதிலும் 20 நாட்கள் விடுமுறை நாட்களாக கணிக்கப்படுகின்றன. மிகுதி இருப்பது 40 நாட்களாகும். இந்த 40 நாட்களில் கடுமையாக உழைத்து நல்ல சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உங்களுடைய பாடசாலைக்கும் மத்திய மாகாணத்திற்கும் பெருமையைப் பெற்றுத் தரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கின்றேன்.

கண்டி நகரிலுள்ள தமிழ் வர்த்தகர்கள் குறிப்பாக கண்டி நகரிலும் அதற்கும் புற நகரிலுள்ள தமிழ் பாடசாலைகளை சிறந்த பாடசாலையாக மாற்றுவதற்காக பாடசாலை ஒவ்வொன்றுக்கும். எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு கண்டி இந்து சிரேஷ்ட பாடசாலைக்கு இரண்டு வகுப்பறை இரு மாடிக் கட்டிடங்கள் முழுமையாக நிர்மாணித்து கொடுத்துள்ளனர். தமிழ் வர்த்தக சங்கம் மூலம் வர்த்தகப் பிரமுகர் நடராஜாவின் மூலமாகவும் வகுப்பறைக் கட்டிடங்கள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.


இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT