இறக்குமதி தடையால் உள்ளூர் மிளகு விலை இரு மடங்கு அதிகரிப்பு | தினகரன்


இறக்குமதி தடையால் உள்ளூர் மிளகு விலை இரு மடங்கு அதிகரிப்பு

மிளகு, கருவா உற்பட ஒன்பது வாசனைப் பொருட்களின் இறக்குமதியை அரசு தடை செய்ததன் விளைவாக உள்நாட்டு விவசாய விளை​ பொருட்களுக்கு  நல்ல விலை கிடைக்க ஆரம்பித்துள்ளதாகவும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் மிளகின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் ஏற்றுமதி விவசாயத் தினணக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பீ.ஹீன்கெந்த தெரிவித்தார்.

பேராதனையில் அமைந்துள்ள ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தில் வைத்து  அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் அவர் தெரிவித்ததாவது; 

டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி நிதி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிக்கை ஒன்றின் பிரகாரம் மிளகு, கருவா உற்பட ஒன்பது வாசனப் பொருட்களுக்கான இறக்குமதி,  மீள் ஏற்றுமதி என்பன தடை செய்யப்பட்டன. இதனால் வெளிநாடுகளில் உற்பத்தியாகும் இதுபோன்ற வாசனைப் பொருட்கள் நாட்டுக்குள் வருவது முற்றாக தடைப்பட்டுள்ளது. தற்போதைய அரசு எடுத்துள்ள ஒரு முக்கியமான தீர்மானமாக இதனை கருத முடியும். இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இவ் வகை பொருட்கள் மிக உயர்ந்த தரத்தை உடையது. இதனால் எமது நாட்டுப் பொருட்களுக்கு கிடைக்கும் விலையும் அதிகம். இப் பொருட்களின் இறக்குமதியை தடை செய்ததன் மூலம் உள்நாட்டு விவசாயிகளுக்கு தமது உற்பத்திகளுக்கு அதிக விலை கிடைக்க ஆரம்பித்துள்ளது.

சுமார் 450 ரூபா அளவில் விற்பனையாகிய ஒரு கிலோ மிளகின் விலை தற்போது 800 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஏனைய பொருட்களின் விலையும் இவ்வாறு அதிகரித்து வருகின்றது. இவ்வாறு உள்நாட்டு உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் போது விவசாயிகள் கூடிய அளவில் பயிரிட முன்வருவர். இதனால்  உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதுடன் வெளிநாட்டு செலாவணியும் அதிகரிக்கும் என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.

(ஜே.எம். ஹபீஸ் - அக்குறணை குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...