லில்லிஸ்லேன்ட் தோட்ட 105 வீடுகள் மீள நிர்மாணிக்க அமைச்சர் நடவடிக்கை | தினகரன்


லில்லிஸ்லேன்ட் தோட்ட 105 வீடுகள் மீள நிர்மாணிக்க அமைச்சர் நடவடிக்கை

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட லில்லிஸ்லேன்ட் தோட்டத்தில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் 105 வீடுகள் தொடர்பாக களத்திற்கு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மனித வள நிதியத்தின் அதிகாரிகளுக்கு சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

இது தொடர்பில் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் சுப்ரமணியம் இளங்கோவன் தெரிவிக்கையில்,  

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட லில்லிஸ்லேன்ட் தோட்டத்தில் முன்னாள் அமைச்சர் திகாம்பரத்தின் ஊடாக அமைக்கப்பட்ட 105 வீடுகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 25 குடும்பங்களை சேர்ந்த வீட்டு பயனாளிகள் வீட்டுத்திட்டத்தை இடைநிறுத்த வேண்டாமெனக்கோரி நுவரெலியா மனிதவள அபிவிருத்தி தாபனத்தின் முன்பாக அமைதியான போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.  

இத்தோட்டத்தில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் 7 மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இங்கு பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் தனி வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்காக 2017ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் திகாம்பரத்தினால் 105 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன.  

அதன் பின்னர் 6 மாதங்கள் கடந்த பின்னரும் வீடுகள் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.   கடந்த 52 நாட்கள் ஆட்சி மாற்றத்தினால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க இடர் முகாமைத்துவ அமைச்சினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.  

இடர்முகாமைத்துவ அமைச்சும் புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் இணைந்து இந்த வீடுகளை அமைக்க முன்வந்தன. மீண்டும் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் அமைச்சர் திகாம்பரத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மணிக்கப்படவிருந்தன. இந்த அமைச்சினால் 50 வீடுகள் அமைக்கும் நிலப்பரப்பில் 105 வீடுகள் அமைக்க அடித்தளங்கள் போடப்பட்டன.  

இதன்போது இரண்டு வீடுகளுக்கான இடைவெளி மிக குறைவாக காணப்பட்டன. 7 பேர்ச்சஸ் காணி என்று 3 பேர்ச்சஸ் காணிகளே தனி வீடுகள் அமைக்க வழங்கப்பட்டுள்ளன. வீடுகளின் கூரைகள்போடும்போது இரண்டு வீட்டின் கூரைகளும் ஒன்றோடு ஒன்று முட்டும் நிலை உருவாகும். அடித்தளம் வெட்டப்பட்ட நிலங்கள் தற்போது சரிந்து கரைந்து சென்றுள்ளன.  

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானை அவர்கள் நேரடியாக சந்தித்து தங்களுக்கு நேர்ந்த பிரச்சினைகளை தெளிவுபடுத்தினர்.  

தற்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இந்த மக்களுக்கான தனி வீடுகளை அமைத்துக்கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அத்தோடு 7 பேர்ச்சஸ் காணிகள் வழங்கப்படாதவர்களுக்கு அங்கு உரிய காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும்படியும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

(தலவாக்கலை குறூப் நிருபர்)    


Add new comment

Or log in with...