சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்போன உறவுகள் போராட்டம் | தினகரன்


சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்போன உறவுகள் போராட்டம்

சர்வதேச மனிதவுரிமை தினமான நேற்று வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் இக் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றது.

வவுனியா

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1025 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது "எங்கே எங்கே உறவுகள்?, இழப்பீட்டு அலுவலகம் எமக்கு தேவையில்லை, ஓ.எம்.பி.வேண்டாம்" போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஈடுபட்டனர்.

வடகிழக்கு காணாமல் போனவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டத்தின் போது மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

இதன்போது காணாமல் போனவர்கள் "எங்கே, அரசே பதில் கூறு, சர்வதேச விசாரணை வேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்" என கோசங்களையும் எழுப்பினர்.

முல்லைத்தீவு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்றுடன் 1008வது நாளாக தொடர்ந்துவரும் நிலையில் தங்களுடைய உறவுகளுக்கு நீதி கோரியும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அரசாங்கமும் சர்வதேசமும் உடனடியாக பதில் கூற வேண்டும் எனக்கோரியும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

ராஜப்பர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமான இக் கவனயீர்ப்பு பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபைக்கான மகஜரை ஐக்கிய நாடுகள் சபைக்கான அலுவலகத்துக்குக் கொண்டுசென்று கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் குறூப்,பருத்தித்துறை விசேட, மாங்குளம் குறூப், வவுனியா விசேட நிருபர்கள்


Add new comment

Or log in with...