அரசியலமைப்புச் சபை நாளை கூடுகிறது; சஜித் தவிர்ந்த 9 உறுப்பினர்களுக்கும் அழைப்பு | தினகரன்


அரசியலமைப்புச் சபை நாளை கூடுகிறது; சஜித் தவிர்ந்த 9 உறுப்பினர்களுக்கும் அழைப்பு

தேர்தலின் பின்னர் முதலாவது அரசியலமைப்பு கூட்டம் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் நாளை பாராளுமன்ற கட்டிடத்தில் (12) நடைபெறுகிறது.இதில் புதிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தவிர்ந்த 9உறுப்பினர்களும் பங்கேற்க இருப்பதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவித்தன. நீதித்துறை முக்கிய பதவிகள் தொடர்பில் ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட இருப்பதாக அறிய வருகிறது. 

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பு சபை கூடுகிறது. ஆட்சி மாற்றம் நடந்த போதும் இதில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட உறுப்பினர்களே பங்கேற்க இருப்பதாக பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தினகரனுக்குத் தெரிவித்தார். 

19​ஆவது திருத்தத்திற்கு அமைய அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்குக் கிடையாது. அவர்களாக பதவி விலகினால் மாத்திரமே வேறொருவரை நியமிக்க முடியும் எனவும் அறிய வருகிறது. 

கடந்த 2018இல் இதற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள்.இதில் சபாநாயகர், பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பதவி வழியாக தெரிவாவதாக பிரதி செயலாளர் நாயகம் கூறினார்.

இந்த நிலையில், சபாநாயகர் கரு ஜெயசூரிய இதில் அங்கம் வகிப்பதோடு பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கிறார். ஜனாதிபதியின் பிரதிநிதியாக மஹிந்த சமரசிங்க (ஐ.ம.சு.மு) ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளதோடு பிரதமரின் பிரதிநிதியாக தலதா அதுகோரளவும் (ஐ.தே.க)நியமிக்கப்பட்டார்கள். இது தவிர சிறுகட்சிகள் சார்பில் பிமல் ரத்னாயக்க (ஜே.வி.பி) மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக ஆர்.சம்பந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

சிவில் சமூகம் சார்பில் ஜயந்த தனபால, நாகானந்தன் செல்வகுமார் மற்றும் ஜாவிட் யூசுப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில், ஏனைய உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றாலும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட சஜித் பிரேமாஸவின் நியமனம் இன்னும் பாராளுமன்றத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அறிய வருகிறது. 

ஜனவரி 3ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய பின்னரே இவரின் பெயர் உத்தியோகபூர்வமாக சபாநாயகரினால் அறிவிக்கப்பட இருப்பதாக அறிய வருகிறது. 

இதில் பிரதமரினதும் சபாநாயகரினதும் சிறுகட்சிகளினதும் பிரதிநிதிகள் தாமாக விலகினால் தான் புதியவர்களை அந்த இடங்களுக்கு நியமிக்க முடியும் எனப் பாராளுமன்ற தகவல்கள் கூறின.(பா)


Add new comment

Or log in with...