எல்பிட்டி பிரதேச சபை; தலைவர், உப தலைவர் நியமனம் | தினகரன்


எல்பிட்டி பிரதேச சபை; தலைவர், உப தலைவர் நியமனம்

எல்பிட்டி பிரதேச சபை; தலைவர், உப தலைவர் நியமனம்-Chairaman and Vice Chairman Appointed for Elpitiya Pradeshiya Elpitiya Sabha

அண்மையில் இடம்பெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலைத் தொடர்ந்து அச்சபைக்கான தலைவர் மற்றும் பிரதித் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை  தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, இத்தேர்தலில் பிரதேச சபையைக் கைப்பற்றிய ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) அதன் சார்பில் முன்னிலையான பீ.ஏ. கருணசேன எல்பிட்டிய பிரதேசசபைத் தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபையின் உப தலைவராக  என்.வீ. ஜயசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

28 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இடம்பெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல், கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி இடம்பெற்றது.

ஐந்து கட்சிகள் சார்பில் 155 பேர் தேர்தலில் களமிறங்கியதோடு, இதில் வாக்களிக்க 53 ஆயிரத்து 384 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

தேர்தலில் 77 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றது.

அதற்கமைய, 23,372 (56.31%) வாக்குகளைப் பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 17 வட்டாரங்களிலும் வெற்றி பெற்று 17 வட்டார ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளதோடு ஏனைய கட்சிகளுக்கு விகிதாசார ரீதியிலான ஆசனங்களையே கிடைத்தன.

அந்த வகையில், ஐக்கிய தேசியக் கட்சி 10,113 (24.37%) வாக்குகளைப் பெற்று 07 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5,273 (12.7%) வாக்குகளைப்  பெற்று 03 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 2,435 (5.86%) வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் பெற்றன.

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியினால் எல்பிட்டிய பிர​​தேச சபை தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யபட்டு குறித்த சபைக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை உடனடியான நடத்துமாறும் கடந்த ஓகஸ்ட் மாதம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...