ஆசிரியர் நியமனம் தருவதாக கூறிய இருவர் கைது | தினகரன்


ஆசிரியர் நியமனம் தருவதாக கூறிய இருவர் கைது

ஜனாதிபதியுடன் தொடர்பு என கூறி ஏமாற்றுவித்தை

பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் பெற்றுத்தருவதாக கூறி  கஷ்டப்பிரதேசங்களில் சில போலி நபர்கள் 1,50,000ரூபா வரை பணம் பெற்றுவருகின்றமை அம்பலமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில்,

அரச நிறுவனங்களில் தொழில் பெற்றுத் தருவதாக மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சிலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகக் கூறி, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுவது பற்றி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன், மேற்படி மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட இருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரினால் இன்று (09) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் இராஜாங்கனையில் வசிக்கும் 47 வயதுடைய நிஹால் தசாநயக்க என்பவராகும். அடுத்தவர் செவனகல சமகிபுரவைச் சேர்ந்த ஜயக்கொடி என்பவராகும்.

மகளுக்கு ஆசிரியர் நியமனம் பெற்றுத் தருவதாகக் கூறி பிரதான சந்தேக நபரினால் தம்புத்தேகம பிரதேசத்தில் வதியும் பெண் ஒருவரிடமிருந்து ஒன்றரை இலட்சம் ரூபா கோரப்பட்டுள்ளது. வட மத்திய மாகாண தலைமைச் செயலாளரினால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் போலி கடிதமொன்றும் இந்த நியமனம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் எனக் கூறி நுவன் ஜயக்கொடி என்பவரின் ஊடாக குறித்த பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பொன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பணத்தை எடுத்துக்கொண்டு கொழும்பு இசுறுபாயவுக்கு முன்னால் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நகபர்கள் இருவரும் குறித்த பெண்ணிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அறியத்தருமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மக்களுக்கு அறிவித்துள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 0718591017 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களுடன் தொடர்புகொள்ள முடியும். அல்லது 0112662323 அல்லது 0718591727 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரி ஜி.ஜே.நந்தன அவர்களுடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப செயற்படுவதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் உறுதியான கொள்கையாகும். அரச நிறுவனங்களில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவதும் அந்த கொள்கைக்கு ஏற்பவேயாகும். எனவே இத்தகைய மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி அலுவலகமும் மக்களுக்கு அறியத்தருவதுடன், அத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளது. 

இதேவேளை, இது தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.  

மத குருக்கள் தம்மிடம் இது தொடர்பில் வழங்கிய தகவல்களுக்கிணங்க அதற்கான பொறுப்பை அமைச்சு இரகசிய பொலிஸாருக்கு வழங்கியுள்ளதாகவும் அதனையடுத்து நேற்று பிற்பகல் இரண்டு சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

ராஜாங்கணை பிரதேசத்தில் யுவதி ஒருவருக்கு ஆசிரியர் நியமனம் பெற்றுத்தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மேற்படி சந்தேக நபர் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் இதுதொடர்பில் விழிப்பாக செயற்படவேண்டுமென்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Add new comment

Or log in with...