இலங்கைத் தமிழ் அகதிகள், முஸ்லிம்கள் பிரஜாவுரிமை பெறுவதில் சிக்கல்! | தினகரன்


இலங்கைத் தமிழ் அகதிகள், முஸ்லிம்கள் பிரஜாவுரிமை பெறுவதில் சிக்கல்!

இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படவில்லை. இது ஏன் என்பது குறித்து இந்திய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.  

இந்தியாவின் அண்டை இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்  

ஆகிய நாடுகளில் மதத் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய ஆறு மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு குடியுரிமை (திருத்த) மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது.  

இந்நிலையில், இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்த மசோதா நிறைவேறினாலும் இலங்கையில் இருந்து வந்து தமிழகத்தில் அகதிகளாக வசிக்கும் மக்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கப் போவதில்லை.  

ஆனால் அதேநேரம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தற்போதுள்ள சட்டங்களைத் திருத்தி இந்த மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது.  

மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் இந்த மசோதா அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு முரணானது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.  

இந்நிலையில் குடியுரிமைதிருத்த மசோதா குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.  

அப்போது அவர் கூறுகையில், "குடியுரிமை (திருத்த) மசோதாவின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து மதத் துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு இந்திய குடியரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.   "இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏன் குடியுரிமை திருத்த மசோதாவில் சேர்க்கப்படவில்லை?" என்ற கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், "இலங்கையில் உள்ள தமிழர்கள் தங்கள் மதத்திற்காக மட்டுமே துன்புறுத்தப்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டது. மோதலுக்கும் துன்புறுத்தலுக்கும் வித்தியாசம் உள்ளது" என்றார்.  

இதுஒருபுறமிருக்க, முஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்குப் பாரபட்சமாக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக எம்.பிக்கள் வாக்களிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

இது தொடர்பாக அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கு பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா  

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அமைந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு மக்களிடையே எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இச்சட்ட மசோதா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலிருந்து வந்து இந்தியாவில்  

சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள முஸ்லிமல்லாத மக்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகுக்கின்றது. இது மதரீதியான பாரபட்சம் ஆகும்.  

இந்த மூன்று நாடுகளிலும் வாழும் சிறுபான்மை மக்கள் கொடுங்கோன்மைக்கு இலக்காகியுள்ளார்கள் என்று குறிப்பிட்டு அவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற இம்மசோதா வழிவகுக்கின்றது. இந்த மூன்று நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்களும் கொடுங்கோன்மைக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதை இம்மசோதா கவனத்தில் கொள்ளாதது மற்றொரு பாரபட்சம் ஆகும்.  

நமது அண்டை நாடுகளாக உள்ள மியான்மார் மற்றும் இலங்கையைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளை மட்டும் இந்த மசோதா கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பது மற்றொரு பாரபட்சமாகும். இலங்கையில் பேரினவாதத்தால்  

பாதிக்கப்பட்ட பெரும்பாலும் இந்துக்களாக இருக்கும் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம் பெற்று வாழ்கிறார்கள். அவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் கோரிக்கை வைத்திருப்பதை நிராகரித்து இருப்பதைத் தமிழக அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

சிறுபான்மை மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களை தவிர்த்து மற்ற சிறுபான்மை மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் என்று விஷமத்தனமாக நோக்கத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அசாமில் பா.ஜ.க அரசு நடைமுறைப்படுத்திய தேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கையில் சட்டவிரோதமாகக் குடியேறியதாகக் கண்டெடுக்கப்பட்ட 19இலட்சம் மக்களில் 12இலட்சம் பேர் முஸ்லிமல்லாதவர்கள்.  

அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இந்துக்கள் என்ற பொதுவான விம்பத்தை இந்த புள்ளிவிவரம் தகர்த்து விட்ட நிலையில் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்த வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி எம்.எஸ்.கோல்வால்கரின்  

கட்டளையே நிறைவேற்றவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவில் பொருளாதார சீரழிவு நாட்டை பாதித்து சில அம்சங்களில் பங்களாதேஷை விட மிக மோசமான நிலையில் இந்தியா இருக்கும் நிலையில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே இந்த மசோதாவை மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்ற முனைந்துள்ளது.  

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான, மக்களிடையே பாரபட்சத்தைப் பாராட்டுகின்ற, இலங்கைத் தமிழர் நலனுக்கு விரோதமான இச்சட்டத்தைத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.  

இவ்வாறு ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுஇவ்விதமிருக்க, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் நிலையில் மக்களவையில் காரசார விவாதம் வெடித்தது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தங்கள் கருத்தை வலியுறுத்தி கூச்சல் எழுப்பியபடியே இருந்தனர்.

மசோதாவை தாக்கல் செய்யும்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது இல்லை" என்று கூறினார்.

இருப்பினும், அமித் ஷாவின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த மசோதாவானது, மதத்தின் அடிப்படையில் மக்களை வேறுபடுத்துகிறது. குடியுரிமை பெற்றவர் அல்லது பெறாதவர் என எவ்வித வேறுபாடும் இல்லாமல், இந்தியாவிலுள்ள அனைவருக்கும் தங்களுக்கு விருப்பமான மதத்தை பின்தொடரும் உரிமை உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனைத்து கேள்விக்கும் பதில் அளிப்பதற்கு தான் தயாராக உள்ளதாகவும், உறுப்பினர்கள் யாரும் வெளிநடப்பு செய்ய வேண்டாம் என்றும் அமித் ஷா வலியுறுத்தினார்.

"நான் உங்களிடம் (சபாநாயகர்) வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிலிருந்து நாட்டையும், உள்துறை அமைச்சரையும் காப்பாற்றுங்கள். இல்லையெனில், இனத்தை அடிப்படையாக கொண்ட குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றிய ஹிட்லர், டேவிட் பென்-குரியன் ஆகியோரின் வரிசையில் அமித் ஷாவின் பெயரும் இடம்பெறக் கூடும்" என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறினார்.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், இந்த மசோதா அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களை மட்டும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, இந்த மசோதாவுக்கு எதிராக அசாம் உள்ளிட்ட பல்வேறு வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 (One India Tamil)  


Add new comment

Or log in with...