மருந்து ஏற்றும் போது நடந்த தவறால் சிறுமி உயிரிழப்பு; மட்டு போதனா வைத்தியசாலை | தினகரன்


மருந்து ஏற்றும் போது நடந்த தவறால் சிறுமி உயிரிழப்பு; மட்டு போதனா வைத்தியசாலை

சிறுமிக்கு மருந்து ஏற்றப்படும் போது நடந்த தவறுகாரணமாக பக்க விளைவுகள் ஏற்பட்டு அதற்குரிய சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததாகவும் அதற்கான ஆரம்பக்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சனி தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக சென்ற காங்கேயனோடையைச் சேர்ந்த உவைஸ் பாத்திமா ஜப்றா (14) எனும் மாணவிக்கு மருந்து ஏற்றப்பட்ட தவறின் காரணமாக குறித்த சிறுமி நேற்று (09) மாலை உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சனி இன்று (10) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தினார்.

அதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த பணிப்பாளர், புற்று நோயால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடையைச் சேர்ந்த பாத்திமா ஜப்றா என்ற சிறுமிக்கு கடந்த 3ம் திகதி புற்று நோய் மருந்து ஏற்றப்படும் போது நடந்த தவறுகாரணமாக பக்க விளைவுகள் ஏற்பட்டு அதற்குரிய சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (09) மாலை உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளதுடன் நடந்த தவறு தொடர்பில் ஆராய்வதற்கு ஆரம்பக்கட்ட விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த மாணவியின் உயிரிழப்பு தொடர்பில் சட்ட வைத்திய அறிக்கை பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

எம்.எஸ். நூர்டீன் - புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...