உள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்துவதற்கு அமைச்சுகளுக்கிடையில் செயலணி | தினகரன்


உள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்துவதற்கு அமைச்சுகளுக்கிடையில் செயலணி

உள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்தும் நோக்குடன் அமைச்சுக்களுக்கிடையில் ஒரு செயலணி நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச கூறினார்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி கைத்தொழில்மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சில் நேற்று(09) உள்ளுர் கைத்தொழிலாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போது அமைச்சர் மேலும் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின்படி உள்ளுர் கைத்தொழிலாளர்களை வலுப்படுத்துவதற்கு பல வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. நிதி அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுக்கள் உள்ளடங்கியவாறு இந்த செயலணி நிறுவப்படும். இரண்டு வாரங்களுக்கு அல்லது மாதத்தில் ஒரு முறை இந்த செயலணி ஜனாதிபதியின் தலைமையில் கூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறான செயலணி ஒன்றை ஏற்படுத்தாது தற்போதிருந்தே உள்ளுர் கைத்தொழிலாளர்களை உருவாக்குவது கடினமாகும். உள்ளுர் கைத்தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு இந்த செயலணி ஊடாக அநேகமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும். அமைச்சுக்களுக்கிடையிலான செயலணி ஒன்றை நிறுவுவதற்கு விரைவில் உரிய அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரிப்பதற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய கைத்தொழில் கொள்கையொன்றை தயாரிப்பதற்கு கடந்த அரசாங்கம் ஏஜன்சி ஒன்றிடம் கையளித்தமை தொடர்பாக அநேகமான உள்ளுர் கைத்தொழிலாளர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

தேசிய கைத்தொழில் கொள்கை உள்ளுர் கைத்தொழிலாளர்களுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஏஜன்சிக்கு தேவையானவாறு அல்ல. எனவே ஏஜன்சி மூலம் மேற்கொள்ளப்படும் தேசிய கைத்தொழில் கொள்கைத் தயாரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயல்பாடு சம்பந்தமாக கைத்தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்கள்மற்றும் ஒத்துழைப்புடன் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும்.

இதில் உலோக பொருட்கள், உள்ளுர் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள். மற்றும் மோட்டார் வாகனம் பொருத்தல் (assemble), பாதணித்துறை உள்ளிட்ட உள்ளுர் கைத்தொழிலாளர்கள் அநேகமானோர் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...