நுண்கடன்களை இரத்துச் செய்ய நடவடிக்கை | தினகரன்


நுண்கடன்களை இரத்துச் செய்ய நடவடிக்கை

விவசாயிகள் மீதான கடன்கள் உட்பட நுண் நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். 

அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்களுக்கான இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான உடனடித் தீர்வுகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.  

சொத்துக்களையே இழக்கச் செய்யும் அளவிற்குத் தாக்கம் செலுத்துகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆரம்பக் கலந்துரையாடல்கள் பிரதமரின் தலைமையில் அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளுடன் நடைபெற்றுள்ளன என்றும் மேற்படி வங்கிகளிடமிருந்து உரிய அறிக்கைகள் கிடைத்ததும் அடுத்த வாரத்திற்குள் சலுகைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். 

இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது மேலும் குறிப்பிடுகையில்: 

கடந்த அரசாங்கத்தில் பொருத்தமான செயற்பாடுகள் காணப்படவில்லை. அதுவே கடந்த அரசாங்கத்தின் தோல்விக்கு பிரதான காரணமாகும்.

ஆனால், நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கும் தேர்தல் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தே அதிகாரத்திற்கு வந்துள்ளோம்.  நாம் அதைப் பின்பற்றுவோம்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் எல்லோருமே அடுத்த ஐந்து வருடங்களுள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவற்றைச் செயற்படுத்துவோம்.

இவ்விடயத்தில் நாட்டின் சரித்திரத்திலேயே நாம் ஒரு விசேட ஆணையையும் விசேட தலைமைத்துவத்தையும் பெற்றுள்ளோம்.

இலங்கை மத்திய வங்கி, அரச வங்கிகள், தனியார் வங்கிகள் ஆகியவற்றின் தலைமைத்துவங்களுடன் பிரதமரின் தலைமையில் விசேட கலந்துரையாடலை நடாத்தியுள்ளோம்.

இதன் நோக்கமானது, எதிர்கால முதலீட்டுச் சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்காக இவ் வங்கிகளின் பொருளாதார நிலைமையை ஆராய்வதாகும்.

அதன்படி அவர்கள் இவ்வாரத்தினுள் தமது அறிக்கைகளைச் சமர்ப்பிப்பார்கள்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிலிருந்து பாரிய தொழில் முயற்சியாளர்கள் வரை எவ்வாறான சலுகைகளை வழங்க முடியும் என்பது குறித்து நாம் வங்கிகளிடமிருந்து அறிக்கைகளைக் கோரியிருக்கிறோம்.

கடன் தகவல் பணியகத்தினால் சில வர்த்தகர்கள் கறுப்புப் பட்டியலில் இடப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தமது சொத்துக்களை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். ஒரு வாரத்தினுள் வங்கிகளின் அறிக்கைகள் கிடைத்ததும் அவர்களுக்குரிய சலுகைகளை வழங்குவோம்.

2014 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியினுள் வரிகள் இரட்டிப்பாக்கப்பட்டன. வரிகளிலிருந்து சேகரிககப்பட்ட பணம் சமூக முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்படவில்லை. ஊழல்கள் காரணமாக அவை வீணாக்கப்பட்டன. முதலாவது நடவடிக்கையாக நாம் வரிகளைக் குறைத்துள்ளோம். இவ்வாறான வரி குறைப்பின் மூலம் ஏற்படும் இழப்பை அரசாங்கச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் ஈடுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எல்லாத் தொழில்முயற்சியாளர்களையும் தத்தமது தொழில்களை நடாத்துமாறு நாம் அழைக்கிறோம். பல முதலீட்டுச் சந்தர்ப்பங்கள் எமக்கு முன்னால் காத்திருக்கின்றன. உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான பல கொள்கைகளை நாம் அறிமுகப் படுத்தியுள்ளோம் என்றார்.


Add new comment

Or log in with...