மனித மேம்பாட்டு சுட்டியில் இலங்கைக்கு 71ஆவது இடம் | தினகரன்


மனித மேம்பாட்டு சுட்டியில் இலங்கைக்கு 71ஆவது இடம்

மனித மேம்பாட்டு சுட்டியில் இலங்கைக்கு 71ஆவது இடம்-Sri Lanka Placed at 71 in Human Development Index

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் நேற்று வெளியிட்ட 'மனித மேம்பாட்டு சுட்டி 2019’ பட்டியலில் இடம்பெற்ற 189 நாடுகளில் இலங்கை 71 ஆம் இடத்தில் உள்ளது. 2018ம் ஆண்டு பட்டியலுடன் ஒப்பிடுகையில் இது 5 இடங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது.

0 முதல் 1 வரையான அளவுகோலில் இலங்கை 0.780 என்ற அளவுடன் அதிக மனித மேம்பாட்டை கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் இடம்பிடித்துள்ளது. மனித மேம்பாட்டு சுட்டி பட்டியலில் தேவைப்படும் முக்கிய அம்சங்களாக நீண்டகால ஆரோக்கிய வாழ்க்கை, அறிவுத்திறன் மற்றும் ஏற்புடையதான வாழ்க்கைத் தரம் ஆகியவை கணக்கிலெடுக்கப்படுகின்றன.

‘மனித மேம்பாட்டு சுட்டெண் 2019’ பட்டியலில் இலங்கைப் பெண்களின் சராசரி வாழ்க்கைக் காலம் 80.1 வருடங்களாகும். அதேநேரம் இலங்கை ஆண் ஒருவரின் சராசரி வாழ்க்கைக்காலம் 73.4 வருடங்களாகும். அத்துடன் இலங்கையில் பாடசாலை காலம் 14 வருடங்களாகும். தொழிலுக்கும் மக்கள் தொகைக்குமிடையிலான வீதம் 50.2 ஆகும். அதேநேரம் தனி மனித காபனீரொட்சைட் வெளிப்பாடு 1.0 தொன் என்றும் இலங்கையின் மக்கள் தொகையில் 34.1 சதவீதத்தினர் இணையத்தை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையுடன் ஒப்பிடும் போது மனித மேம்பாட்டு சுட்டெண் 2019 இல் ஏனைய தெற்காசிய நாடுகள் பெருமளவில் பின்தங்கியுள்ளன. இந்தியா பட்டியலில் 129 ஆவதுஇடத்திலும், பூட்டான் 134வது இடத்திலும், பங்களாதேஷ் 135வது இடத்திலும், நேபாள் 147 வது இடத்திலும், பாகிஸ்தான் 152 வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 170வது இடத்திலும் உள்ளன.

மனித மேம்பாட்டு சுட்டி 2019 பட்டியலில் நோர்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, ஹொங்கொங் மற்றும் சீனா ஆகியவை முதல் 6 இடங்களில் வரிசைக்கிரமமாக உள்ளன.

பட்டியலில் உள்ள புள்ளி விபரங்களின்படி இலங்கையின் 40 சதவீத வறியவர்கள் நாட்டின் வருமானத்தின் 17.7 சதவீதத்தை பகிர்ந்து கொள்வதாகவும் 10 சதவீத செல்வந்தர்கள் 32.9 வீத வருமானத்தை பகிர்ந்துகொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துறைகள் சார்ந்த பகுப்பாய்வின் பிரகாரம் தற்போது நாட்டின் சுகாதார செலவு மொத்த உள்ளூர் உற்பத்தியின் 3.9 சத வீதமாகும். அதேநேரம் அரசாங்க செலவுகள் மொத்த உள்ளூர் உற்பத்தியின் 208 சதவீதமாகவும், சிசு மரணங்கள் 1000 பிறப்புகளுக்கு 7.5 மரணங்களாகவும், வயது வந்தவர்களின் கல்வியறிவு வீதம் (15 வயது மற்றும் அதற்கு மேல்) 91.9 வீதமாகவும் உள்ளது.

இலங்கையில் வருடாந்த பிரசவிப்பு வீதம், வயது வந்த பெண்களுடன் (15-_ 19 வருடங்கள்) ஒப்பிடுகையில் 1000 வயது வந்த பெண்களுக்கு 20.9 சத வீதமாகும். அதேநேரம் தொழில் துறையின் சிரேஷ்ட மற்றும் மத்தியதர முகாமைத்துவத்தில் 25.6 வீதமாகும்.

இந்நிலையில் இலங்கையில் கைத்தொலைபேசி பாவனை மொத்த சனத்தொகையை விட அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அது 100 பேரில் 115.1 சதவீதமாக உள்ளது.  


Add new comment

Or log in with...