இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை இல்லை | தினகரன்


இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை இல்லை

இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து வந்து தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்கப்படப் போவதில்லையென்பது நேற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவின் அண்டை இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதத் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய ஆறு மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு குடியுரிமை (திருத்த) மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது.  

ஆனால் தமிழ் அகதிகளுக்கும் முஸ்லிம் அகதிகளுக்கும் மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மேற்படி மசோதாவில் சேர்க்கப்படவில்லை.

இதன் காரணமாக இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளும், முஸ்லிம் அகதிகளும் இந்திய பிரஜாவுரிமையைப் பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது ஏன் என்பது குறித்து இந்திய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்கையில், இந்தியாவின் அண்டை இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதத் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களுக்கு மாத்திரமே பிரஜாவுரிமை வழங்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படவில்லை. இந்த மசோதா நிறைவேறினால் இலங்கையில் இருந்து வந்து தமிழகத்தில் அகதிகளாக வசிக்கும் மக்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கப் போவதில்லை.

தமிழ்நாட்டில் 30வருடங்களுக்கு மேலாக தங்கியிருக்கின்ற போதிலும், ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என்பதை இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். இவ்விவகாரம் குறித்து தமிழக கட்சிகள் நேற்று நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்தன. 


Add new comment

Or log in with...