தூக்கு தண்டனை இடைக்கால தடை மார்ச் 20 வரை நீடிப்பு | தினகரன்


தூக்கு தண்டனை இடைக்கால தடை மார்ச் 20 வரை நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட தூக்கு தண்டனை உத்தரவின் பேரில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோர் எந்தவொரு கைதிக்கும் எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி வரை மரண தண்டனை விதிப்பதை தடை செய்யும் இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் நேற்று நீடித்துள்ளது.  

சட்டத்தரணி கவிந்து ஹேவா கீகனகே உள்ளிட்ட 12பேர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனைக்கு எடுத்ததை யடுத்து உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட உள்ளிட்ட மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

குறித்த வழக்கு கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த தடையுத்தரவு இன்று (10) வரை நீடிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் முன்னைய சந்தர்ப்பமொன்றில் மனுதாரரான சட்டத்தரணி கீகனகேயின் சார்பாக ஆஜரான அரச சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் நீதிமன்றத்தில் பேசும்போது, மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அவ்வாறான தண்டனையை விதிப்பது தொடர்பாக உரிய வழிகாட்டல்கள் இல்லையென்றும் அவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டால் அது அரசியலமைப்பின் 12 (1) சட்டப் பிரிவுக் கூற்றை மீறுவதாக அமையும் என்று குறிப்பிட்டார்.

எவ்வாறெனினும் நாட்டின் தற்போதைய சட்டங்களும் அரசியலமைப்பு ஏற்பாடுகளும் மரண தண்டனையையும் அதனை நடைமுறைப்படுத்துவதையும் அனுமதிக்கின்றன என்று சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்ட மரண தண்டனை உத்தரவுக்கு எதிராக அதனை தடுக்குமாறு இடைக்கால உத்தரவினை பிறப்பிக்குமாறு கூறி 12 அடிப்படை உரிமை மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த அடிப்படை உரிமை மனுக்களில் சட்ட மா அதிபர், நீதி அமைச்சர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட மற்றும் பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...