Friday, March 29, 2024
Home » சூரிய சக்தி மூலம் வைத்தியசாலைகளுக்கு மின்சாரம்

சூரிய சக்தி மூலம் வைத்தியசாலைகளுக்கு மின்சாரம்

- ஜைக்கா நிறுவனத்தால் இலங்கையில் புதிய அபிவிருத்தி திட்டங்கள்

by Prashahini
February 15, 2024 12:22 pm 0 comment

சூரிய மின்சக்தி தொகுதிகளை நிறுவுதல் உள்ளிட்ட புதிய மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களுக்கு ஜைக்கா நிறுவனம் மானியம் வழங்கும் என்று கலாநிதி அகிஹிட்டோ தெரிவித்துள்ளார்.

ஜைக்கா நிறுவனத்தினால் அனுராதபுரத்தில் பாதுகாப்பான நீர் வழங்கல் திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று (15) புராதன தலைநகரில் நடைபெறவுள்ள அதன் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனாகா அகிஹிட்டோவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (14) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, ஜைகா அலுவலகத்தின் (தெற்காசியா) பணிப்பாளர் நாயகம் இடோ டெருயுகி, பிரதிப் பொதுச் செயலாளர் தகேஷிதா மஸ்தாகே, ஜைகா இலங்கை அலுவலகத்தின் பிரதம பிரதிநிதி டெட்சுயா யமடா, பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, இலங்கையை உலகளாவிய பொருளாதார அபிவிருத்தியின் கவர்ச்சிகரமான மையமாக குறிப்பிட்டு இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு ஜைக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனாகா அகிஹிட்டோ தெரிவித்தார்.

1968 ஆம் ஆண்டு ஜைக்கா நிறுவனம் இலங்கைக்கான உதவி வழங்கும் சங்கத்தில் உறுப்புரிமையை பெற்றதிலிருந்து பல தசாப்தங்களாக இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்காக கலாநிதி அகிஹிட்டோவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். கிராமிய அபிவிருத்தி, கிராமிய வீதி நிர்மாணப் பணிகள், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்கான புதிய திட்டங்கள் குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் ஜைக்கா நிறுவனத்தை கேட்டுக் கொண்டார்.

இந்த திட்டம் தொடர்பில் ஜப்பானுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், தூய்மையற்ற நீரினால் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மாவட்டமான அனுராதபுரம் மாவட்ட மக்களுக்கு இதன் மூலம் பெரும் நிம்மதி கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் விரைவாக மீண்டு வருவதைப் பாராட்டிய JICA நிறுவனத்தின் தலைவர், நாடு தற்போது விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருவதாகத் தெரிவித்தார். “உலகளாவிய வளர்ச்சியானது ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கு மாறியுள்ளது என்றும் இதில் இலங்கையானது உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் கவர்ச்சிகரமான மையமாக உள்ளது,” என்றும் அவர் கூறினார், இந்த செயன்முறையில் JICA நிறுவனம் தொடர்ந்து பங்காளியாக இருக்கும் என்று வலியுறுத்தினார்.

JICA நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, சமூக சேவைகளின் விரிவாக்கம், மனித வளங்கள் மற்றும் கிராமிய சமூகங்களின் அபிவிருத்தி, சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி நிறுவனங்களின் முன்னேற்றம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இதில் அடங்கும்.

எதிர்கால உதவித் திட்டங்கள் மற்றும் திட்டங்களைத் திட்டமிடுவதற்கான அபிவிருத்தித் தேவைகளை ஆராய ஜைக்காவின் தலைவர் இந்த நாட்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும், விவசாய மற்றும் கிராமிய கைத்தொழில்களை மேம்படுத்துதல், கிராமிய சமூகங்களின் அபிவிருத்தி மற்றும் கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான சமூக சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் திட்டங்களுக்கு இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்கும் உறுதி அளிப்பதாகவும் JICA தலைவர் மேலும் கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT