சுவிஸ் தூதரக ஊழியர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர் | தினகரன்


சுவிஸ் தூதரக ஊழியர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்

சுவிஸ் தூதரக ஊழியர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்-Swiss Embassy Staff-Statement to CID

- வெளிநாடு செல்லும் தடை டிசம்பர் 12 வரை நீடிப்பு
- நேற்று பி.ப. 5.30 - இன்று அதிகாலை 2.30 வரை CIDயில் 9 மணி நேர வாக்குமூலம்
- இன்றும் இரண்டாம் நாள் வாக்குமூலத்திற்கு அழைப்பு

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கையைச் சேர்ந்த ஊழியர் கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் இன்று பிற்பகல் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இன்று (09) பிற்பகல் அவர் அங்கு முன்னிலையானார்.

நேற்றையதினம் (08) குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) ஆஜரான அவரிடம் சுமார் 9 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக, CID யினர் நீதிமன்றிற்கு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் அங்கு சிஐடி முன்னிலையில் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

இதேவேளை குறித்த பெண் ஊழியர் வெளிநாடு செல்வதை தடுக்கும் தடை உத்தரவு எதிர்வரும் வியாழக்கிழமை (12) வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (09) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.

சி.ஐ.டி யினரிடம் வாக்குமூலம் வழங்காமல் இன்று (09) வரை நாட்டை விட்டு வெளியேற முடியாது என, கொழும்பு பிரதான நீதவான் தடை உத்தரவொன்றை ஏற்கனவே பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமை (03) வழங்கப்பட்டிருந்த குறித்த உத்தரவே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (08) பிற்பகல் 5.30 மணி முதல் இன்று (09) அதிகாலை 2.30 மணி வரை குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்திற்கு இன்று (09) அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், மேலும் வாக்குமூலத்தை பதிவு செய்ய இன்று சிஐடி முன் ஆஜராகுமாறு அவர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் விசாரணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, சம்பவம் இடம்பெற் நவம்பர் 25 ஆம் திகதி குறித்த பெண் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டாரா அல்லது தாக்கப்பட்டாரா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரிக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

அத்துடன் அவரது மனநிலை குறித்தான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு, கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...