அம்பாறை மாவட்டத்தில் நிரம்பி வழியும் குளங்கள் | தினகரன்


அம்பாறை மாவட்டத்தில் நிரம்பி வழியும் குளங்கள்

அம்பாறை மாவட்டத்தில் அதிகமான குளங்கள் நிரம்பி காணப்படுகின்றது. திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட சாகாமம் குளம் நிரம்பியுள்ளதுடன், வான்பாய்ந்து வருகின்றது.

இக்குளத்தின் தற்போதைய நிலை தொடர்பில் அறிந்து கொள்வதற்காக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கே. மோகனகுமார், தொழில் நுட்ப உத்தியோகத்தர் எஸ்.சுந்தரலிங்கம் உள்ளிட்டவர்கள் நேரில் சென்றனர்.

குளத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்ததுடன் மாவட்ட செயலகத்திற்கும் தக வலை வழங்கினர்.

இக் குளமானது 17 அடிவரை நீரை சேமிக்கக் கூடியதுடன் 1900 ஏக்கர் கனவளவு நீரை கொள்ளக்கூடியது என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆயினும் பன்னலகம மற்றும் அம்பலன்ஓயா ஆகிய குளங்களில் இருந்து வெளியாகும் வடிச்சல் நீரையும் உள்வாங்கி இக்குளத்தில் 4430 ஏக்கர் கனவளவு நீரை சேமித்து 3300 விவசாய ஏக்கருக்கான நீரையும் வழங்கி வருவது வழைமையானது.

இக்குளத்தில் இருந்து பெறப்படும் நீரை பயன்படுத்தியே திருக்கோவில் பிரதேசத்திற்கான குடிநீரும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த குளத்தில் முற்றாக நீர் நிரம்பி வான்பாயும் இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் ரி.தவராசாவின் உத்தரவிற்கமைய நேற்று கடற்படையினர் இணைந்து மேலதிகமாக இக்குளத்தில் உள்ள நீரை வெளியேற்றி குளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் குளத்தின் ஆழத்தை அதிகரித்தோ அல்லது குளக்கட்டினை உயர்த்தியோ குளத்தின் நீர் கொள்ளளவை அதிகரிக்க வேண்டியது காலத்தின் தேவை என்பது இதன் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றது.

வாச்சிக்குடா விஷேட நிருபர்  


Add new comment

Or log in with...