சீரற்ற காலநிலையால் வடக்கில் பெரும் பாதிப்பு | தினகரன்


சீரற்ற காலநிலையால் வடக்கில் பெரும் பாதிப்பு

கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2404குடும்பங்களை சேர்ந்த 7762பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதில்  320குடும்பங்கள் 16நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் முதல் நேற்று (வெள்ளி) காலை வரை பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

வெள்ளப் பகுதிகளில் சிக்கியிருந்த பொது  மக்களை நேற்றிரவு முதல் படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றிருந்தனர். அத்தோடு க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சில பரீட்சை நிலையங்களுக்கு   செல்ல முடியாத நிலை காணப்பட்டது. அவ்வாறான இடங்களிலும் படையினர் படகுகள் மூலம் மாணவர்களை பரீட்சை மண்டபங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கரைச்சி பிரதேசத்தில் 120குடும்பங்களும், பளையில்  ஒரு குடும்பமும், கண்டாவளையில் 189குடும்பங்களும், பூநகரியில் 10என நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.

அத்தோடு கரைச்சி பிரதேசத்தில் 567குடும்பங்களும், பளையில்  169குடும்பங்களும், கண்டாவளையில் 1635குடும்பங்களும், பூநகரியில் 33குடும்பங்களும்  பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இரணைமடு குளத்திற்கு நீர்வரவு அதிகமாக காணப்பட்டமையினால் 31அடியாக நீர் மட்டம் காணப்பட்ட போதும் குளத்தின் இரண்டு வான் கதவுகள் ஆறு இஞ்சி அளவுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி  இந்துக்கல்லூரிக்கு  பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள், பாடசாலையை சுற்றி வெள்ளம் காணப்பட்டதால் இராணுவனத்தினரால் படகு மூலம்  பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு சென்று இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வரையான ஏ -35வீதியில் 28ஆவது கிலோ மீட்டர் பகுதியில் பாலம் ஒன்றில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலைகள் மற்றும் வீதியை குறுக்கறுத்து  வெள்ளம் பாய்வதால் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது.

பரந்தனிலிருந்து புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு செல்கின்றவர்கள் மாற்று வழியாக மாங்குளம் வீதியை பயன்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 10  குடும்பங்களை சேர்ந்த 29பேர் பாடசாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.    முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட இருப்பதால் அதன் கீழ் இருக்கின்ற மக்களை அவதானமாக இருக்குமாறு கோரப்படுகின்றனர். இரத்தினபுரம் ஆனந்தபுரம், சிவபுரம், பன்னங்கண்டி, கிளிநகர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. கனகாம்பிகை குளம் இரண்டு அடி வான்பாய்வதால்  மேற்படி வெள்ளப்பாதிப்புகள் அதிகரித்துள்ளன. வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள இடங்களில் படையினர்  தொடர்ந்தும் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருப்பதனாலும், குளங்களுக்கு நீர் வரவு அதிகரித்து காணப்படுவதனாலும் வெள்ளப் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன அறிவித்துள்ளன.

வவுனியா

வவுனியா வடக்கில் 3கிராமங்களுக்கான போக்குவரத்து பாதைகள் பாதிப்படைந்துள்ளன.தாழ் நிலப்பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வவுனியா வடக்கு புளியங்குளம் வான் பாய்வதால் பழையவாடி கிராமத்திற்கான போக்குவரத்து பாதையும், வெள்ள நீர் வீதியை ஊடறுத்து பாய்வதால் வவுனியா வடக்கு காஞ்சிராமோட்டை, சின்னபூவரசன்குளம் கிராமத்திற்கான போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளன. மேலும் பல குளங்கள் உடைப்பெடுக்க கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முத்தையன்கட்டுக்குளம் நேற்று அதிகாலை 21 அடி 01 அங்குலமாக நீர் மட்டம் காணப்பட்டது. இக்குளத்தின் முழுமையான நீர் மட்டம் 24 அடியாகும். இதேவேளை வவுனிக்குளத்தின் நீர் மட்டம் 20 அடி 10 அங்குலமாகக் காணப்படுகின்றது. இக்குளத்தின் முழுமையான நீர் மட்டம் 26 அடியாகும். விசுவமடுக்குளத்தின் நீர் மட்டம் 22 அடி 06 அங்குலமாகும். குளத்தின் முழுமையான நீர் மட்டம் 20 அடி 03 அங்குலம். 02 அடி 03 அங்குலம் வான் பாய்கின்றது. கணுக்கேணிக்குளத்தின் நீர் மட்டம் 13 அடி 10 அங்குலம். முழுமையான நீர் மட்டம் 12 அடி 06 அங்குலம். 01 அடி 04 அங்குலம் வான் பாய்கின்றது. மருதமடுக்குளத்தின் நீர் மட்டம் 16 அடி. முழுமையான நீர் மட்டம் 14 அடி 02 அங்குலம். 01 அடி 10 அங்குலம் வான் பாய்கின்றது.  துணுக்காய் பாலங்குளத்தின் வான் பகுதியில் குளம் உடைப்பெடுத்து இருப்பதன் காரணமாக பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  குளத்தின் வான் பகுதியில் உடைப்பெடுத்து குளத்தின் நீர் வெளியேறிக் கொண்டிருக்கின்றது. வெளியேறிக் கொண்டிருக்கும் நீரினால் பதினைந்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.

கிளிநொச்சி குறூப், மாங்குளம் குறூப்,வவுனியா விசேட, முல்லைத்தீவு     குறூப் நிருபர்கள்


Add new comment

Or log in with...