சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்; பொலித்தீன் பாவனை தடை | தினகரன்


சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்; பொலித்தீன் பாவனை தடை

சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலத்தில் பொலித்தீன் மற்றும்  பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்வதற்கு நல்லதண்ணி வர்த்தக சங்கம் நடவடிக்கை  எடுத்துள்ளது. 

யாத்திரிகர்களுக்கென இலவசமாக பயணப்பையை வழங்குவதுடன், பயண  முடிவில் அந்தப் பையை திருப்பி கொடுத்து செல்லவும் இச்சங்கம் நடவடிக்கை  எடுத்துள்ளது. 

ஒரு லீற்றர் தண்ணீர் போத்தல் மாத்திரமே உபயோகிக்கவும்  ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் இரவு நேரங்களில் யாத்திரிகர்கள் செல்லும்  வழியில் மின்சார வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

டிசம்பர் 9ஆம் திகதி பெல்மதுளை கல்பொத்தாவெல ரஜமகா  விகாரையில் வழிபாடுகள் நடைபெற்று, 11ஆம் திகதி சமன் பூஜை வழிபாட்டு  பொருட்களும், பெல்மதுளை ரஜமகா விகாரையிலிருந்து விக்கிரகங்களும் ஊர்வலமாக  எடுத்து செல்லப்படவுள்ளது. 

சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள்  சோதனையிடப்படுவதுடன் பொலித்தீன், தடைசெய்யப்பட்டுள்ள பொருட்கள் பாவனைக்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.  

புகையிரத மார்க்கமாக வருகை தரும் யாத்திரிகர்களின் நலன்கருதி  ஹற்றன் புகையிரத நிலைத்திலிருந்து நல்லதண்ணீர் நகரம் வரை விசேட பஸ்  சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிப்பதுடன் ஜனவரி,  பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆயிரக் கணக்கான யாத்திரிகர்கள்  வருகைதரவுள்ளனர். மேலும் வெளிநாட்டு உள்நாட்டு பயணிகள் ஏராளமானோரும்  வருகைதருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நல்லதண்ணீர் மலையடிவாரத்தில் அமைக்கப்படவுள்ள பொலிஸ்  நிலையத்திற்கு மேலதிகமாக சீத்தக்குவ, ஊசிமல மலையுச்சி முதலிய இடங்களிலும்  தற்காலிக பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.  

2020 மே மாதம் வெசாக் போயாதினத்துடன் சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் நிறைவுபெறும்.

கொட்டகலை குறூப் நிருபர்   


Add new comment

Or log in with...