தனியார் நிறுவன கணக்காளருக்கு 367 வருட கடூழிய சிறை | தினகரன்


தனியார் நிறுவன கணக்காளருக்கு 367 வருட கடூழிய சிறை

தனியார் நிறுவன கணக்காளருக்கு 367 வருட கடூழிய சிறை-An Accountant from a Private Company Sentenced 367 Years in Jail

நிதி மோசடி குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த கணக்காளர் ஒருவருக்கு 367 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரனால் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டதோடு, அவரை கைது செய்வதற்கும் பிடியாணை வழங்கப்பட்டது.

ஹிக்கடுவ லியனகே நந்தசிறி எனும், அம்பலங்கொடவில் வசிக்கும் குறித்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் ரூபா 19 இலட்சம் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக பணி புரிந்த பிரதிவாதி போலியான ஆவணங்களை பயன்படுத்தி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான ரூபா 21 இலட்சத்து 99 ஆயிரத்து 130 பணத்தை (ரூ. 2,199,130)  மோசடி செய்தமை உள்ளிட்ட 19 குற்றப்பத்திரிக்கைகளின் கீழ் கடந்த 2007 இல் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு சட்ட மா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறித்த 19 குற்றச்சாட்டுகளில் முதலாவது குற்றத்திற்கு 7 வருட சிறைத்தண்டனையும் ஏனைய குற்றங்களுக்கு தலா 20 வருடங்கள் என 367 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர், குறித்த வழக்கில் அதே ஆண்டில் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், பின்னர் வழக்கிற்கு சமூகம் தராத நிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் நீண்ட கால விசாரணைகளின் பின்னர், குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதி, இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடும் ஏனைய நபர்களுக்கு இத்தீர்ப்பு உதாரணமாக அமையும் என நீதிபதி, தனது தீர்ப்பின்போது சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...