கிழக்கில் பெரு வெள்ளம் 64,404 பேர் பாதிப்பு | தினகரன்


கிழக்கில் பெரு வெள்ளம் 64,404 பேர் பாதிப்பு

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில் தொடர்ந்தும் பெய்துவரும் அடைமழையினால் சுமார் 21,000குடும்பங்களைச் செர்ந்த 64,404பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. 14பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 12ஆயிரத்து 461குடும்பங்களைச் சேர்ந்த 40ஆயிரத்து 410பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், சம்மாந்துறை பிரதேச செயலகப் பரிவில் ஒருவர் மரணித்துள்ளதாகவும், வீடுகள் முழு அளவில் 02உம், பகுதியளவில் 112உம் சேதமடைந்துள்ளதாகவும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார். 

இதில் ஆகக் கூடுதலான பாதிப்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரில் ஒரு பாதுகாப்பான அமைவிடத்தில் (இடைத்தங்கல் முகாம்) 28குடும்பங்களைச் சேர்ந்த 79பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், 6,548குடும்பங்களைச் சேர்ந்த 21,600பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் 4ஆயிரத்து 07குடும்பங்களைச் சேர்ந்த 12ஆயிரத்து 600பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதால் இவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கல்லோயா குடியேற்ற கிராமங்களிலுள்ள சவளக்கடை அன்னமலை, சொறிக்கல்முனை, 4ஆம், 5ஆம், 6ஆம், 12ஆம் கொளனிகள், நாவிதன்வெளி போன்ற பிரதேச மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட மருதமுனைப் பிரதேசத்தின் மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமம், மக்பூலியா புரம், பாண்டிருப்பு முஸ்லிம் பிரிவு மற்றும் மேட்டுவட்டைக் குடியிருப்புக்கள் முதலியன பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 

கல்முனை உவெஸ்லி கல்லூரி சுற்றுவட்டாரங்கள் 3அடி வெள்ளமும் மெதடிஸ்த தேவாலயம் உள்ளிட்ட பிரதேசங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 

மட்டக்களப்பு மாவட்டம் 

மட்டக்களப்பு மாவட்டத்திலே இதுவரை 6,696குடும்பங்களைச் சேர்ந்த 22,614பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 8இடைத்தங்கல் முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். 

வெள்ளிக்கிழமை (06) அனர்த்த நிலைமைகளை ஆராயும் அவசர கலந்துரையாடல் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரனுடன் இணைந்து நடாத்தப்பட்டது. 

நேற்று முதல் 2முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்கள் கடந்த 24மணித்தியாலங்களில் கிடைத்த அதிகமான மழை வீழ்ச்சி காரணமாக 8முகாம்கள் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டு அங்கு மக்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள், சமைத்த உணவுகள், குடிநீர் என்பனவும் வழங்கப்பட்டு வருகின்றது. 

கிரான் பாலத்தை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் அங்கு மக்களின் போக்குவரத்துக்காக 5இயந்திரப்படகுகள் சேவையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியிலிருந்து கல்வி பயிலும் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் 2மாணவர்கள் இயந்திரப்படகுக் கூடாகவே தங்களின் பயணத்தை மேற்கொண்டு பரீட்சை எழுதிவருவது குறிப்பிடத்தக்கது. இதே போன்று சித்தாண்டி, ஈரலக்குளம் வீதிக்கும் இயந்திரப்படகுகள் மூலமே மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மாவட்டத்தின் சகல பிரதேச சபைகளும், மாநகர சபை, நகர சபை ஆகியவை நீர்வடிந்தோடுகின்ற வடிகான்களை கவனமான முறையிலே இக்காலப்பகுதியில் துப்புரவு செய்து நீர் வழிந்தோடுவதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். 

திருகோணமலை மாவட்டம் 

திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய சுமார் 1380குடும்பங்களை சேர்ந்த 4709உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17வீடுகள் சேதமடைந்துள்ளன. வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் 23குடும்பங்களை சேர்ந்த 75உறுப்பினர்கள் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை சுழற்சி, பெரியநீலாவணை தினகரன், காரைதீவு குறூப், பெரியபோரதீவு தினகரன், அன்புவழிபுரம் தினகரன்,  சென்றல்கேம்ப் குறூப், புதிய காத்தான்குடி தினகரன் ரொட்டவெவ குறூப் நிருபர்கள்  


Add new comment

Or log in with...