கோமாவில் நினைவிழந்த தாய் குழந்தையின் குரல் கேட்டு விழிப்பு | தினகரன்

கோமாவில் நினைவிழந்த தாய் குழந்தையின் குரல் கேட்டு விழிப்பு

கோமாவில் நினைவிழந்து கிடந்த தாயொருவர் தனது குழந்தையின் குரல் கேட்டதும் கண்விழித்து தாய்ப்பால் கொடுத்த சம்பமவம் ஆர்ஜண்டீனாவில் நிகழ்ந்துள்ளது.

மூன்று குழந்தைகளின் தாயான 42 வயதுடைய பெண்ணே,பிள்ளைப்பாசத்தால் கோமாவிலிருந்து நினைவு திரும்பியவராவார்.இச்சம்பவம் அருகிலிருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பின்னர் இத்தாய் மீண்டும் கோமா நிலைக்குச் சென்றமை பெரும் கவலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது:

ஆர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த மரியா லாரா பெர்ரேயரா, கடந்த மாதம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மர்ம நபரால் தாக்கப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார்.

பல நாட்கள் தீவிர சிகிச்சையளித்தும் அவருக்கு சுய நினைவு திரும்பாததால், மூளை இறப்புக்கு ஆளாக நேரிடுமென அஞ்சி, அவரது உறுப்புக்களை தானம் செய்யும்படியும் குடும்பத்தினருக்கு டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

இதனால் கணவர் அதிர்ச்சியடைந் தாலும், நம்பிக்கையுடன் தனது மனைவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க கோரினார்.

அதன்படி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த வாரம் மருத்துவமனைக்கு வந்த பெர்ரேயராவின் 2 வயது இளைய மகள் பாசத்துடன் அவர் அருகில் சென்று உறங்கினார். பின்னர் தனது தாயின் அவல நிலையை அறியாத அக்குழந்தை வழக்கமாக கேட்பது போல அவரை கட்டி அணைத்துக் கொண்டு தனக்குத் தாய்ப்பால் தருமாறு கோரியது. குழந்தையின் பசிக் குரல் கேட்டு சட்டென்று கண் விழித்த அப்பெண் உடன் தாய்ப்பால் கொடுத்தார்.

இதைப்பார்த்த பெர்ரேயராவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். பெர்ரேயராவின் தாய்மை உணர்வை கண்டு அவர்கள் மெய்சிலிர்த்து கண்ணீர் விட்டனர். ஆனால் இந்த ஆச்சரியம் சில நிமிடங்களே நீடித்தது. தனது குழந்தையின் பசியை தீர்த்துவிட்டு பெர்ரேயரா மீண்டும் கோமாவுக்கு சென்று விட்டார்.

எனினும் மகளின் குரலை கேட்டதும் பெர்ரேயரா, இயல்பாக எழுந்து தாய்ப்பால் கொடுத்ததால் அவர் விரைவில் குணமடைவாரென நம்புவதாக அவரது கணவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...