சீரற்ற காலநிலை; வவுனியா, மன்னாரிலும் பாதிப்பு | தினகரன்


சீரற்ற காலநிலை; வவுனியா, மன்னாரிலும் பாதிப்பு

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக 180குடும்பங்களைச் சேர்ந்த 552பேர் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக 3நலன்புரி நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் தீவு பகுதி மற்றும் தாழ் நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலையும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளது.  

வவுனியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.  

அந்த வகையில் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிலுள்ள நேரியகுளம் பகுதியில் 45குடும்பங்களைச் சேர்ந்த 142பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 45வீடுகளும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளது. வவுனியா வடக்கில் மருதோடை கிராம அலுவலர் பிரிவில் 21குடும்பங்களைச் சேர்ந்த 46பேரும், போகஸ்வேவ பகுதியில் 50குடும்பங்களைச் சேர்ந்த 152பேரும், கெம்பலிவேவ பகுதியில் 30குடும்பங்களைச் சேர்ந்த 95பேரும், ஊஞ்சல் கட்டியில் 24குடும்பங்களைச் சேர்ந்த 90பேரும், புளியங்குளம் தெற்கில் 10குடும்பங்களைச் சேர்ந்த 35பேரும் ஆக 180குடும்பங்களைச் சேர்ந்த 552பேர் பாதிப்படைந்துள்ளனர்.  

புளியங்குளம் தெற்கு, மருதோடை, செட்டிகுளம் அடைக்கலமாதா வித்தியாலயம் என்பவற்றில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக 3நலன்புரி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 76குடும்பங்களைச் சேர்ந்த 217பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிரதேச செயலகம் ஊடாக சமைத்த உணவை வழங்க மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

மன்னார்  

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பல ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதுடன் தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மன்னார் தீவுப் பகுதியில் உள்ள ஜீவபுரம், ஜிம்ரோன் நகர் ஆகிய கிராமங்களும் பெறுநிலப்பரப்பு கிராமங்களான கட்டைகாடு, மடுக்கரை போன்ற கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளன.  

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் மேலும் சில தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கும் அச்சம் காணப்படுகின்றது. அத்துடன் மீனவர்களும் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்து வருவதுடன் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.  

சில கிராமங்களில் வீதிகள் நீரில் மூழ்கி உள்ளதுடன் மழை நீர் வடிந்தோட முடியாத  நிலையில் ஒழுங்கான வடிகான் அமைப்புக்கள் செய்யப்படாத காரணத்தினால் மக்கள் தாமாக முன் வந்து கொட்டும் மழையிலும் கால்வாய்களை ஆழப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா விசேட, மன்னார் குறூப் நிருபர்கள்


Add new comment

Or log in with...