அம்பாறையில் வெள்ளம் காரணமாக 40,410 பேர் பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு | தினகரன்


அம்பாறையில் வெள்ளம் காரணமாக 40,410 பேர் பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டத்தின்14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 12 ஆயிரத்து 461 குடும்பங்களைச்சேர்ந்த 40 ஆயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.

அத்தோடு சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முழு அளவில் 02வீடுகளும், பகுதியளவில் 112  வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும்அவர் தெரிவித்தார்.

இதில் ஆகக் கூடுதலான பாதிப்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவு காணப்படுவதுடன்,ஒரு பாதுகாப்பான அமைவிடத்தில் (இடைத்தங்கல்முகாம்) 28 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், 6,548 குடும்பங்களைச் சேர்ந்த 21,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் 4 ஆயிரத்து 07 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையுடன் கூடிய காலநிலையினால் மேலும் பாதிப்புக்கள், அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதாகவும், அதற்கான முன் ஆயத்தங்களுடன் சகல பிரதேச செயலகங்களும் இயங்குமாறும், பாதிப்புக்கள் தொடர்பில் உடனுக்குடன் தகவல்களை உரிய கிராம சேவகர்கள் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறும் மாவட்ட செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக தெரிவித்தார்.

வெள்ள அனர்த்தங்களை பார்வையிடுவதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை பிற்பகல், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை மற்றும் காரைதீவு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குச்சென்றிருந்தனர்.

தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழையினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் தாழ்ந்த குடியிருப்புப் பிரதேசங்களான அட்டாளைச்சேனை 02, 05, 09, 10 ஆகிய பிரிவுகளிலும், பாலமுனை, திராய்க்கேணி உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் ஒலுவில் 02, 05, 07 ஆகிய பிரிவுகளிலும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அவர்களுக்கான பாதுகாப்பு, மேலதிக உதவிகள், ஆலோசனைகளை வழங்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(அம்பாறை சுழற்சி நிருபர்ரி.கே. றஹ்மத்துல்லா)


Add new comment

Or log in with...