கிழக்கில் டெங்கு; விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை | தினகரன்


கிழக்கில் டெங்கு; விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை

கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த அடை மழை காரணமாக திருகோணமலை,மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அதிகளவானோர் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்தில் 95பேர் டெங்கு நோய்க்குள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜ சேகரம் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த நவம்பர் 25ஆந் திகதி தொடக்கம் 29ஆந் திகதி வரையும் 95பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ம் ஆண்டு ஐனவரி 1ம் திகதியில் இருந்து இதுவரை 1614பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர். 

இந்தவாரம் டெங்கு தாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு பிரிவில் இதுவரை 22டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது போன்று ஆரையம்பதி 12பேர், களுவாஞ்சிகுடி 08பேர், செங்கலடியில் 14பேர், வவுணதீவில் 05பேர் , பட்டிப்பளை 06, வாழைச்சேனையில் 06பேர், ஓட்டமாவடியில் 02பேர்,ஏறாவூர் 09பேர்,வெல்லாவெளி 04பேர்,கோரளைப்பற்று மத்தி 01,கிரான் 01,வாகரை 01, காத்தான்குடி 04பேர் ஆகிய பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனர். 

மக்கள் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள், நீர்தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருக இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

திருகோணமலை - மூதூர் சுகாதார வைத்தியதிகாரி பிரிவிற்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தில் ஒரு மாதத்திற்குள் மாத்திரம் 27டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மூதூர் சுகாதார வைத்தியதிகாரி யாக்கூப் ஜெஸ்மின் தெரிவித்தார். 

தோப்பூர் பிரதேசத்தில் அல்லைநகர் மேற்கு கிராமசேவையாளர் பிரிவில் 19டெங்கு நோயாளர்களும், அல்லைநகர் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவில் 8டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் தோப்பூர் பிரதேசத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

இதேவேளை மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் தோப்பூரில் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சோதனை நடவடிக்கைகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.   

கல்முனைப் பிராந்தியத்தில் அண்மைக் காலமாக டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் இம்மாதம் மட்டும் 780பேருக்கு மேல் டெங்கு தாக்கியுள்ளதாக கல்முனைப் பிராந்திய தொற்றுநோய்ப் பிரிவுப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி டொக்டர் நாகூர் ஆரிப் தெரிவித்தார். 

மழைக்குப் பின்னரான காலத்தில் டெங்கு நோயின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட  பிரதேசங்களில் டெங்கொழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி ​ெடாக்டர் ஏ.எம். இஸ்மாயில்  தெரிவித்தார்.  

டெங்கொழிப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொதுச்  சுகாதார பரிசோதகர்கள், டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவினர், பொலிஸார் மற்றும்  இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து வீடு வீடாகச் சென்று டெங்கு பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.  

ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி, அட்டாளைச்சேனை ஆகிய  பிரதேசங்களிலும் டெங்கொழிப்பு வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர்  தெரிவித்தார்.  

தற்போது பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் பொது மக்கள் டெங்கு  நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப் புறச் சூழலை தூய்மையாக வைத்துக்  கொள்ள வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.  

சுற்றுப்புறத்தில் தேங்கும் நீர் நிலைகளைக் கண்டறிந்து அவற்றை  வெறுமைப் படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில்  பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல் போன்றன நுளம்புகளின் பெருக்கத்தைத்  தடுக்கின்றது.  

தென்னம் குறும்பை, யோகட் கப், வெற்று போத்தல்கள், வெற்று  டயர்கள் பொலிதீன் கழிவுகள் போன்ற கழிவுகளை முறையாக அகற்ற வேண்டுமெனவும்  கேட்டுள்ளார்.  

டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான இடங்களை வைத்திருப்பவர்கள்  மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி  மேலும் தெரிவித்தார்.  

அக்கரைப்பற்று டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அழித்தொழிக்கப்பட்டன. புகை விசுறல் மூலம் டெங்குக் கட்டுப்பாட்டு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. 

அக்கரைப்பற்று மாநகர சபையை டெங்கு நுளம்பற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை துறைசார்ந்த நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் மேற்கொண்டு வருகின்றது. அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் இப்பிரதேசத்தில் சுமார் இருநூறு பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.  இந்நோய்த் தாக்கத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் அக்கரைப்பறு நகரினை நான்கு வலயங்களாக வகுத்து விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கப்படுகிறது.  

புதிய காத்தான்குடி தினகரன் ,  மணல்சேனை நிருபர்கள், ரொட்டவெவ குறூப், தோப்பூர் குறூப் நிருபர்கள், காரைதீவு குறூப் நிருபர், ஒலுவில் விசேட, அம்பாறை சுழற்சி நிருபர்கள், அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்     

 


Add new comment

Or log in with...