என்னை முடக்கி விட முடியாது; நான் வலிமையாக இருக்கிறேன்! | தினகரன்


என்னை முடக்கி விட முடியாது; நான் வலிமையாக இருக்கிறேன்!

இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!

106 நாட்கள் சிறையில் இருந்து வெளியே வந்த சிதம்பரம் ஆவேசம்!

ன்னை எளிதாக முடக்கி விட முடியாது. நான் மிக மிக வலிமையாக இருக்கிறேன்" என்று இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.

சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 106 நாள் சிறைவாசம் முடிந்து ப. சிதம்பரம் நேற்றுமுன்தினம் பிணையில் வெளியே வந்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருந்த சிதம்பரத்திற்கு பிணை அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

விடுதலையாகி வந்த சிதம்பரம் நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். சிதம்பரம் தனது பேட்டியில், "என்னுடைய ஆன்மா இப்போதும் வலுவாக இருக்கிறது. என்னை எளிதாக முடக்கி விட முடியாது. நான் மிக மிக வலிமையாக இருக்கிறேன். நான் நினைத்ததை விட என் உடலும் வலிமையாக இருக்கிறது. நான் மேலும் வலிமை அடைந்துள்ளேன். நான் மரக்கட்டிலில் படுத்துத் தூங்கினேன். அது எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது.என் உடல் அதனால் அதிகம் வலு அடைந்தது.என் கழுத்து வலுவாக இருக்கிறது. என் தலை வலுவாக இருக்கிறது. என் முதுகெலும்பு வலுவாக இருக்கிறது. என் குரலை ஒடுக்க முடியாது. நான் தொடர்ந்து பேசுவேன். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்திப்பேன். தொடர்ந்து இவர்கள் செய்யும் தவறுகளை உங்களுக்கு வெளிக்காட்டுவேன். சில குரல்களை உங்களால் ஒடுக்க முடியாது. உங்களுக்கு திறமையும் இல்லை, நேர்மையும் இல்லை, உங்களிடத்தில் உண்மையும் இல்லை" என்று குறிப்பிட்டார்.

"நாடு நல்லா இருக்கும், நல்ல எதிர்காலம் வரும் என்றெல்லாம் கூறி மக்களை இனியும் நீங்கள் ஏமாற்ற முடியாது. நான் பாராளுமன்றத்தில் இதை எல்லாம் பேசுவேன். அங்கு உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் பதில் சொல்லும் நேரம் வந்து விட்டது" என்று சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு மீது மீது தனக்கு இருக்கும் கோபத்தை எல்லாம் அவர் தனது பேட்டியில் வெளிப்படுத்தினார்.

இந்தப் பேட்டியில் சிதம்பரம் அதிகம் குறி வைத்தது இந்திய பொருளாதார சீரழிவு குறித்துத்தான். மிக முக்கியமாக நிர்மலா சீதாராமன் குறித்து மிக கடுமையான அவர் பேசினார். "இந்திய பொருளாதார சரிவிற்கு நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு பொருளாதாரம் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. ஒரு பிரச்சினை தெரிந்தால்தான் அதைத் தீர்க்க முடியும். ஆனால் அது நிர்மலா சீதாராமனுக்குத் தெரியவில்லை.அவரின் திட்டங்கள் எதுவும் பலன் அளிக்கவில்லை" என்றார் சிதம்பரம்.

சிதம்பரம் பிரதமர் மோடியையும் விட்டு வைக்கவில்லை.

"பிரதமர் மோடி தொடர்ந்து பொருளாதார சரிவு குறித்து அமைதி காத்து வருகிறார்.தன்னுடைய அமைச்சர்கள் எல்லோரிடம் அவர் இது தொடர்பாக பதில் அளிக்க சொல்லி விட்டார்.அவர்களும் பொருளாதார சீர்குலைவு குறித்து ஏதாவது புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். காஷ்மீர் மக்கள் குறித்து நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். நான் அவர்களுக்காக வேண்டிக் கொண்டு இருக்கிறேன். திமிர்த்தனமாக எடுக்கப்பட்ட முடிவுதான் காஷ்மீர் பிரிவினை. 75 இலட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளை பா.ஜ.க பறித்துள்ளது" என்றார் சிதம்பரம்.

"அரசை நினைத்து மீடியாக்களும் பயப்படுகின்றன.நாங்கள் உங்கள் பக்கத்தைப் படிக்கிறோம், ஆனால் அதில் உண்மை இல்லை. நீங்கள் இப்படி பயப்படக் கூடாது. உங்களைத்தான் நாங்கள் நம்பி இருக்கிறோம். இந்தியாவில் பெண்கள் கொலை செய்யப்படுவது குறித்து நான் அவமானப்படுகிறேன். எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நாம் எங்கே செல்கிறோம்? இதை எல்லாம் செய்து விட்டு நாம் தப்பித்து சென்று விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்கு எந்த அச்சமும் கிடையாது"என்று குறிப்பிட்டார் சிதம்பரம்.

ஒரே பேட்டியில் கடந்த 106 நாட்களில் நடந்த பிரச்சினை அனைத்தையும் சிதம்பரம் பேசி விட்டார். அரசு மீது புகார் வைத்து பேசிக் கொண்டே இருக்கிறார் என்பதால்தான் அவரை கைது செய்தனர் என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் பிணையில் வெளியே வந்ததும் அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அவர்.

முன்னர் அரசை விமர்சனம் செய்த டி. கே. சிவக்குமார், ராகுல் காந்தி எல்லாம் அமைதி காத்து வருகிறார்கள். ஆனால் அவர்களை போல அல்லாமல் மிகவும் தைரியமாக மக்கள் பிரச்சினைகளை வெளிப்படையாக பேசி உள்ளார் சிதம்பரம். 106 சிறையில் இருந்த எந்த சுவடும் இல்லாமல் அவர் புள்ளிவிபரங்களை விபரித்தார்.

"இந்தியாவில் எல்லோரும் அச்சத்தில் இருக்கிறார்கள், மக்கள் இந்த அரசைப் பார்த்து பயப்படுகிறார்கள். பா.ஜ.கவின் திட்டங்கள் மோசமாக இருக்கின்றன. இந்தியாவில் மிக மோசமான பொருளாதார சூழ்நிலை நிலவி வருகிறது. இந்தியாவின் ஜி.டி.பி ஒவ்வொரு காலாண்டிற்கும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்தியாவின் ஜிடிபி 5%ஐ அடைந்துள்ளது. சொன்னால் நம்புங்கள் நம்முடைய ஜி.டி.பி இதை விட மோசமான நிலையை அடையும். 5%ஐ விட இது மோசமாகக் குறையும். உண்மையான ஜிடிபி 1.5% என்பதுதான் உண்மை. அதை அரசு மறைக்கிறது.

மத்தியில் பா.ஜ.க அரசு வந்த பிறகு மக்களின் வறுமை அதிகரித்து விட்டது. பா.ஜ.கவின் திட்டங்கள் மோசமாக இருக்கின்றன. பா.ஜ.கவின் திட்டங்கள் இதுதான் என்றால் கடவுள்தான் மக்களை காக்க வேண்டும். கடவுள்தான் மக்களையும், நாட்டையும் காக்க வேண்டும்" என்று ஆணித்தரமாகக் கூறினார் சிதம்பரம்.


Add new comment

Or log in with...