Friday, March 29, 2024
Home » கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா தமிழகத்திலிருந்து எவரும் வரவில்லை

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா தமிழகத்திலிருந்து எவரும் வரவில்லை

சுமார் 5,200 க்கும் மேற்பட்ட இலங்கையர் பங்கேற்பு

by damith
February 26, 2024 6:45 am 0 comment

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் உறவுப் பாலமாக திகழும் கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் (24) ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையரின் பங்கேற்புடன் யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

வருடாந்தம் இலங்கை, இந்திய யாத்திரிகர்களின் பங்கேற்புடன் நடைபெறும் இத்திருவிழாவில், இம்முறை இலங்கைத் திருப்பயணிகள் மட்டுமே கலந்து கொண்டனர். பல்வேறு காரணங்களின் நிமித்தம் இந்திய திருப்பயணிகள் இம்முறை திருவிழாவில் கலந்து கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இம்முறை திருவிழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா 21ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுடன் அதனைத் தொடர்ந்து தவக்காலத்தையொட்டி திருச்சிலுவைப் பாதை தியானம் நடைபெற்று வெஸ்பர்ஸ் ஆராதனையும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்றுக் காலை 8.00 மணியளவில் யாழ், மறை மாவட்ட குரு முதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் அருட் தந்தை யர்களின் பங்கேற்புடன் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, கடற்படையின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி காஞ்சனா பானுகொட, இந்திய உயர் ஸ்தானிகராலய பிரதிநிதி உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் கத்தோலிக்க மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அருட்பணியாளர்கள் பெருமளவில் திருவிழா நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

திருவிழா திருப்பலியில் மறையுரையாற்றிய யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் தமது உரையின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உறவுப் பாலமாக வுள்ள புனித கச்சத்தீவு அந்தோனியார் திருத்தலத்தின் திருவிழாவை பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு இந்திய சகோதரர்கள் புறக்கணித்தமை கவலைக்குரியது.

திருவிழாவில் அவர்கள் கலந்து கொள்ளாவிடினும்,அவர்களின் உள்ளங்கள் திருவிழாவை ஏற்றுக்கொண்டிருக்கும்.ஆகவே அவர்களையும் மனதில் கொண்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கிறோம் என தெரிவித்தார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த தேர்த்திருவிழா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து தவக்காலத்தையொட்டி சிலுவைப் பாதை தியானம் நடைப்பெற்றதுடன். வெஸ்பர்ஸ் ஆராதனையும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து காலை 08.00 மணியளவில் திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலியாக யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் அருட்திரு ஜெபரட்னம் அடிகளார் தலைமையில் ஏனைய அருட்தந்தையர்களின் பங்கேற்புடன் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இலங்கையையும், இந்தியாவையும் எந்த விதத்திலும் பிரித்துப் பார்க்க முடியாது.இரு நாட்டு மக்களும் பெரும் சகோதர உறவைக் கொண்டவர்கள் என்றும் இனிவரும் திருவிழாக்களில் அவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என நாம் வேண்டுதல் செய்வோம் என்றும் குரு முதல்வர் மறையுரையில் தெரிவித்தார். இந்த திருவிழாவில் இலங்கையில் பல்வேறு பகுதிகளிலுமிருந்து 5000 ற்கும் மேற்பட்ட திருப்பயணிகள் கலந்துக் கொண்டார்கள். சுமார் 120 படகுகள் திருப்பயணிகளை ஏற்றிக்கொண்டு கச்சதீவை வந்தடைந்திருந்தன.

திருவிழா கொண்டாட்டங்கள் அனைத்தும் வழமை போன்று இம்முறையும் இடம்பெற்றது.அத்துடன் கடற்படைத் தளபதி வைய்ஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா,கடற்படையின் யாழ்.மாவட்ட கட்டளைச் தளபதி காஞ்சன பானுகொட, இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதி உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள், அருட்தந்தையர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். திருவிழாவின் இறுதி நிகழ்வாக கொடி இறக்கத்துடன் புனித அந்தோனியாரின் திருச் சொரூப இறுதி ஆசிர்வாதத்துடன் திருவிழா நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

கச்சதீவிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், சாதிக் ஷிஹான்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT